kavin
கவின்

சாலிகிராமத்தின் Money Heist! கவினின் மாஸ்க் - திரை விமர்சனம்!

மாஸ்க் திரைப்படத்தின் விமர்சனம்....
Published on
மாஸ்க் - திரை விமர்சனம்(3 / 5)

நடிகர் கவின் நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பணத்தைச் சேர்க்க வேண்டும் என்கிற உந்துதல் இருக்கும் கிரினினல் மூளைக்காரர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ அப்படியான ஒரு ஆள்தான் வேலு (கவின்). டிடக்டிவ் ஏஜென்சி என்கிற பெயரில் கள்ளத்தொடர்புகளைக் கண்டுபிடிப்பது, பிளாக்மெயில் செய்து பணத்தைப் பிடுங்குவது என சுவாரஸ்யத்தையும் ஆபத்தையும் வைத்திருக்கும் கதாபாத்திரம். ஆனால், தனக்கென ஒரு நல்லவனையும் ஒளித்து வைத்திருக்கும் இப்படிப்பட்ட கவினிடம் அரசியல்வாதிகளுக்கு வேலை செய்யும் பூமி (ஆண்ட்ரியா) அறிமுகமாகிறார். பூமி சொன்ன வேலையைச் செய்து கொடுக்கும்போது கோடிக்கணக்கான பணங்களை ஒரு கும்பல் கொள்ளையடிக்கிறது. அப்பணம் யாருடையது? கொள்ளையடித்த கும்பல் யார்? என்கிற கதையே மாஸ்க்.

நடுத்தர மக்களுக்கென்ற சில மனநிலைகளும் வாழ்க்கைச் சூழலும் இருந்தாலும் தரையிலிருந்து நாமே எம்பிக் குதித்தால் என்ன ஆகிவிடப்போகிறது? என்கிற கேள்வி ஒவ்வொரு சாமானிய மனதிற்குள்ளும் இருக்கும். அப்படிப்பட்ட சூழலுடன் சில பிரச்னைகள் வந்தால் என்னவெல்லாம் நடக்கலாம் என்கிற ஊகங்கள் வழியே அழுத்தமான கதையுடன் வந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக்.

படத்தின் ஆரம்பத்தில் இயக்குநர் நெல்சனின் வாய்ஸ் ஓவரிலிருந்து அடுத்தது என்ன என்கிற எதிர்பார்ப்புகளைக் காட்சிக்குக் காட்சி வைத்திருப்பது கதையிலிருந்து நழுவாமல் பார்த்துக்கொள்கிறது. முக்கியமாக இடைவேளைக் காட்சி நல்ல டுவிஸ்ட். கிளைமேக்ஸ் அதைவிட பெரிய டுவிஸ்ட் என ஒரு கமர்சியல் திரைப்படத்தை எப்படியெல்லாம் சுவாரஸ்யமாக்கலாம் என இயக்குநர் விக்ரணன் அசோக் நல்ல முயற்சியையே கொடுத்திருக்கிறார்.

கதை ரீதியாக சில எதிர்பாராத தருணங்கள் இருந்ததுடன் கதாபாத்திரங்களை எழுதிய விதமும் சிறப்பு. கதைநாயகி என்றால் இப்படித்தான் இருப்பார் என்கிற ஊகத்தை ருஹானி சர்மா வழியாக உடைத்து, வாய்ப்பு கிடைத்தால் நாமெல்லாம் இடறும் இடங்கள்தானே என்கிற உண்மையைத் திரை எழுத்தில் கொண்டு வந்தது வீணாகவில்லை.

எம். ஆர். ராதா மாஸ்க் போட்டு கொள்ளையடித்தவர்கள் யார்? அவர்கள் கொள்ளையடித்த 440 கோடி திரும்ப கைக்கு வருமா என்கிற நல்ல ஒன்லைனுக்கு ஏற்ற உருவாக்கமும் படத்தில் இருக்கிறது. இதனால், சோர்வைத் தரும் காட்சிகளும் பெரிதாக இல்லை.

நடிகர் கவின் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். சில பிம்பங்கள் வந்துவிடுமோ என்கிற தயக்கமில்லாமல் கதைக்குத் தேவையான விஷயத்திற்காக தன் கதாபாத்திரத்தைச் சிதைக்காத நடிப்பைக் கொடுத்தது பலம். நடிகை ஆண்ட்ரியா தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் மாஸ்க்கில் நல்ல பங்களிப்பைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். குளோஸ் அப் ஷாட்டுகளில் மிரட்சியான முகபாவனையைக் காட்டுவதில் பக்கா வில்லத்தனத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ருஹானி சர்மாவின் காட்சிகளுக்கு சிரிப்பு சத்தம் கேட்கிறது. அக்கதாபாத்திரத்தின் வாய்ப்பை அவர் வீணடிக்கவில்லை. அதேபோல், நடிகர்கள் பவண், சார்லி, கல்லூரி வினோத், அர்ச்சனா ஆகியோர் நடிப்பும் கதைக்கு பக்கபலமாகவே அமைந்துள்ளன. தமிழில் பெண் நகைச்சுவை நடிகர்களுக்கான வெற்றிடம் நிறைய இருக்கிறது. இதற்கு நடிகை அர்ச்சனா சரியாகப் பொருந்துவார். தொடர்ந்து நடிக்கலாம்.

அறிமுக இயக்குநராக இருந்தாலும் விக்ரணன் அசோக்கிடம் நல்ல உருவாக்கம் தெரிகிறது. கதையின் தேவைகளைப் புரிந்துகொண்டு செய்யப்பட்ட சில ஸ்டேஜிங் விஷயங்கள் அதற்கு உதாரணம். இப்படத்திற்கான மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசையென நிறைய கவனங்களைக் கொடுத்திருக்கிறார். இடைவேளைக் காட்சிக்கான தருணங்கள் இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. கிளைமேக்ஸும் எதிராபாரத விதத்தில் இருந்ததுடன் அந்தக் கொள்ளையை நியாப்படுத்துவது சரியென்றே தோன்ற வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் உள்ளிட்டோரும் கதைக்கு ஏற்ற பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். படத்தில் இடம்பெற்ற, “கண்ணுமுழி” பாடல் ரசிக்க வைக்கிறது. படத்தின் கலர் கிரேடிங் வேலைகளும் சிறப்பாக இருக்கின்றன.

நடுத்தர மக்கள் எப்போது நடுத்தர மனநிலையிலேயேதான் இருப்பார்களா? இப்படி நடந்தால் என்ன ஆகும்? என்கிற நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கான படமாகவே மாஸ்க் உருவாகியிருந்தாலும் சில இடங்களில் நன்றாக வந்திருக்க வேண்டிய காட்சிகள் டக்கென கட் ஆவதுபோல் இருந்தது பலவீனம். இருந்தாலும், விதவிதமான கொள்ளைப் படங்களிலிருந்து மாஸ்க் கொஞ்சம் விலகி வேறு சில விஷயங்களையும் பதிவு செய்திருக்கிறது.

Summary

actor kavin's mask movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com