
பிக் பாஸ் ஸ்டுடியோவில் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மீறப்பட்ட குற்ற்ச்சாட்டைத் தொடர்ந்து ஆய்வு செய்த கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி 12 -வது சீசனை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியை கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையில் பிடாடி அருகேவுள்ள ஜாலுவுட் ஸ்டுடியோவில் கன்னட பிக் பாஸ் வீடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிக் பாஸ் வீட்டிலிருந்து சுத்தகரிக்கப்படாத கழிவுநீர், ஸ்டுடியோவின் சுற்றுப்புறங்களில் வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கர்நாடகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், பிக் பாஸ் ஸ்டுடியோவுக்கு வெளியே போராட்டம் நடத்திய நிலையில், கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டுடியோவில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறியது போன்ற கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தை அமைக்காதது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மாசு ஏற்படுத்தும் இரண்டு மிகப்பெரிய டீசல் ஜெனரேட்டர்கள் உபயோகப்படுத்தியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. தொடர்ந்து, வீட்டில் இருந்த பிக் பாஸ் போட்டியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக அரசு குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும்வரை பிக் பாஸ் சீசன் 12 நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இதே ஸ்டுடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரும் நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.