பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருக்கும்போதே, அந்த புகழின் உச்சியில் இருந்து இறங்கி, பௌத்த துறவியாக மாறினார் நடிகை பர்கா மதன்.
சினிமாவில் கால்பதிக்கும் எவர் ஒருவரும், புகழ் மற்றும் ரசிகர்களின் அன்புக்கு அதிகம் ஆசைப்படுவார்கள். நாள்கள் செல்ல செல்ல அது குறைந்தாலும் வருந்துபவர்களும் உண்டு. ஆனால், ஒரு சிலரோ திரைத்துரையில் உச்சத்தில் இருக்கும்போதே, அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு அவர்கள் விரும்பிய வாழ்வைத் தேடிச் செல்லத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில், ஒரு காலத்தில் பாலிவுட்டின் உச்சத்தில் இருந்த நடிகை ஒருவர், தனக்குக் கிடைத்த பேரும் புகழும் வேண்டாம், அமைதிதான் வேண்டும் என்று புத்த துறவியாக மாறிவிட்டார். ஆம், அவர்தான் பர்கா மதன்.
தனது திரைப்பயண காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பைப் பெற்ற பர்கா மதன், அமைதி நிறைந்த வாழ்க்கையைத் தேடி துறவறம் நாடிச் சென்றுவிட்டார்.
1994-ல் மிஸ் இந்தியா மேடையில் சுஷ்மிதா சென் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகிகளுடன் போட்டியிட்ட பர்கா மதன், மிஸ் டூரிஸம் இந்தியா பட்டத்தைப் பெற்றார். மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அழகிகள் போட்டியிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
தொடர்ந்து, 1996-ல் அக்ஷய் குமாரின் கிலாடியன் கா கிலாடி படத்தில் நடித்த பர்கா மதன், 2003-ல் பூத் படத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.
மேலும் 1857 கிராந்தி என்ற தொலைக்காட்சித் தொடரில் ராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்ததுடன், நியாய் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார்.
அவரது திரை வாழ்க்கை சிறப்பாக மாறியிருந்தாலும், அவரது மனம் என்னவோ அமைதியைத் தொலைத்ததாகவே அவருக்கு தோன்றியது. வெளியுலகில் எவ்வளவு புகழும் வெற்றியும் பெற்றிருந்தாரோ, அதனைவிட அதிகளவில் சொல்லப்படாத அமைதியின்மையை அவர் உள்ளுணர்ந்தார்.
பல்வேறு நட்சத்திரங்களுக்கிடையே வாழ்ந்தாலும், தனிமையுடன் போராடிய பர்கா மதன், புகழாலோ பணத்தாலோ நிரப்ப முடியாத வெற்றிடத்தை நிரப்ப முயன்றார். இந்த வேளையில்தான், அவருக்கு துறவற எண்ணம் தோன்றியது.
ஏற்கெனவே, தலாய் லாமாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டிருந்த பர்கா மதன், புத்தகங்கள் வாயிலாக துறவறத்துக்குள் மூழ்கத் தொடங்கினார்.
வெகுசிலர் மட்டுமே எடுக்கும் துறவற முடிவை அவர் 2012-ல் எடுத்தார். கனவு உலகத்தில் இருந்து விடைபெற்று, ஒரு பௌத்த துறவியாகத் தன்னை மாற்றிக்கொண்டார்.
தனது முந்தைய வாழ்க்கைப் பயணத்தை மட்டுமல்ல, பெயரையும் கியால்டன் சாம்டன் என்று மாற்றிக் கொண்டார். தற்போது இமயமலைகளில் வசிக்கும் கியால்டனுக்கு கதை, திரைக்கதை, வசனம், கேமிரா உள்ளிட்ட எவையும் கிடையாது,; தியானம், சேவை, உள்ளுணர்தல் மட்டுமே கிடைக்கும்.
ஒப்பனை, வண்ணவண்ண ஆடைகள், ஆடம்பரங்கள் என அனைத்திலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்ட கியால்டன் சாம்டன், பௌத்த துறவியின் ஆடையுடன் வலம் வருகிறார். தலாய் லாமாவை பலமுறை சந்தித்த கியால்டன், பௌத்த மதம் குறித்து மக்களுக்கு சமூக ஊடகங்களில் கற்பித்தும் வருகிறார்.
இதையும் படிக்க: கடவுள், காமம், கன்னியாஸ்திரி! மரியா - திரை விமர்சனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.