
சிறந்த நடிகைக்கான விருது வென்ற ஊர்வசி நடிகர் கமல் ஹாசனின் செயலால் கண் கலங்கினார்.
தென்னிந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி. கடந்த சில ஆண்டுகளாக நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். அப்படி, உள்ளொழுக்கு, ஜே பேபி ஆகிய திரைப்படங்களில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
உள்ளொழுக்கு திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேசிய விருதுக்கு தேர்வான ஷாருக்கான் சிறந்த நடிகரா? என கறாராகத் தன் விமர்சனத்தையும் முன்வைத்தார்.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட விருதுகளில் ஒன்றான சைமா விருது நிகழ்வு துபையில் நடைபெற்றது. இதில், உள்ளொழுக்கு படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
விருது அறிவிக்கப்பட்டதும் ஊர்வசி எழுவதற்கு முன், அருகே அமர்ந்திருந்த நடிகர் கமல் ஹாசன் எழுந்து நின்று கைதட்டினார். கமல் எழுந்ததும் அனைத்து நடிகர்களும் எழுந்து நின்று கைதட்டி ஊர்வசியைப் பாராட்டினர்.
மேடைக்குச் சென்று விருதை வாங்கிய ஊர்வசி, “உண்மையாக என் கண்கள் நிறைகின்றன. நான் என்னுடைய மகா குருவாக நினைக்கிற நடிகர் கமல் ஹாசன் எழுந்து நின்று கைதட்டியதைப் பெரிய விருதாக நினைக்கிறேன். அவருடன் இணைந்து நடித்தது என் பாக்கியம். தமிழிலிருந்து மலையாளத்திற்கு நடிக்க சென்ற ஊர்வசிக்கு, ‘மைக்கேல் மதன காமராஜன்’ மூலம் மீண்டும் தமிழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்ததற்கு அவருடைய பாராட்டுகளே காரணம்.
கமல்ஹாசனுடன் நடிப்பது என்றால் இப்போதும் என் கால்கள் நடுங்கும். அவரிடமிருந்து வந்த இந்த பாராட்டையே நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்” எனக் கண் கலங்கியபடி பேசினார்.
இதையும் படிக்க: சின்ன திரை பிரபலத்துக்கு குழந்தை பிறந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.