பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

பாக்யராஜ் குறித்து சுந்தர்ராஜன்...

News image

பாக்கியராஜ், சுந்தராஜன்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர், நடிகர் சுந்தர்ராஜன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காலே, திருமதி பழனிச்சாமி, என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சுந்தர்ராஜன்.

நடிகராகவும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் இன்றும் நல்ல படங்களைக் கொடுத்த இயக்குநர் என்கிற பெயருடனே இருக்கிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சுந்தர்ராஜன் தனக்கும் பாக்யராஜுக்கும் ஏற்பட்ட சங்கடம் குறித்து மனம் திறந்துள்ளார்.

அதில், “நானும் பாக்யராஜும் கோவையிலுள்ள பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பதால் சினிமாவுக்குச் செல்ல இளம் வயதிலேயே ஆர்வம் இருந்தது. இருவருக்கும் வசதி இருந்தாலும், கோவை எங்களுக்கான இடம் அல்ல என சென்னை வந்தோம். ஒரே அறையில் தங்கி சினிமாவுக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தோம்.

அப்போதுதான், ’அவள் ஒரு தொடர்கதை' திரைப்படம் வெளியானது. அப்படத்தைப் பார்த்தபின்பே, திரைப்படம் இயக்காமல் சொந்த ஊருக்குச் செல்லக்கூடாது என இருவருமாக முடிவு எடுத்தோம்.

பாக்யராஜ் இயக்குநரானால் நானும் இயக்குநர்தான் என இருவருமாக இணைந்து இரட்டை இயக்குநராக இருப்போம் என பேசினோம். ஆனால், புதிய வார்ப்புகள் மூலம் அவர் நடிகராக அறிமுகமானதும் மெல்ல மெல்ல எங்களுக்குள் விலகல் ஏற்பட்டது.

அறையில் என்னுடன் தங்கியிருந்தவர் ஒருநாள் சொல்லாமல் இரவோடு இரவாக காலி செய்து கிளம்பிவிட்டார். நாயகனானதும் ஒருநாள் எனக்கு கடிதம் எழுதினார். அதில், என்னை ஊருக்குப் போய் தங்கைகளின் திருமணத்தை நடத்தி வைக்கச் சொன்னதுடன் நான் இயக்குநரானதும் உன்னை அழைத்துக் கொள்கிறேன் என்றார். நான், ஒரே வார்த்தையில் ‘நன்றி’ எனப் பதில் கடிதம் போட்டேன். பாக்யராஜை நம்பி இத்தனை காலம் இருந்ததற்கு நான் வீணாகிவிட்டேன் என்கிற எண்ணமே அப்போது அதிகமாக இருந்தது.

பின், எங்களுக்குள் பழைய உறவு இல்லை. 3 ஆண்டுகள் கழித்து ஒருநாள் பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘மௌன கீதங்கள்’ திரைப்படத்தைப் பார்க்கலாம் என திரையரங்கம் சென்றேன். கையில் அப்போது ரூ. 2 தான் இருந்தது. படம் பார்த்தால் பட்டினிதான் என்கிற நிலை. ஆனாலும், பார்த்தேன். அப்படத்தில் பாக்யராஜின் நடிப்பைக் கண்டதும் ஒன்று புரிந்தது. நாம் இல்லையென்றாலும் இவன் வென்றிருப்பான் என.

படம் முடிந்ததும் வெளியே வந்தபோது பாக்யராஜ் இருவருக்குமான பொது நண்பரிடம் சொல்லி என்னை அழைத்து வரச் சொன்னார். நான் வரமாட்டேன் எனக் கூறி சாலையில் நடக்க ஆரம்பித்தேன். திரையரங்கத்திலிருந்து பாக்யராஜும் நண்பர்களும் பென்ஸ் காரில் பின்னாடியே வந்து என்னருகே நிறுத்தினர்.

அப்போது என் நண்பர் ஒருவர், காரில் ஏறு உன்னை தேனாம்பேட்டையில் இறக்கி விடுகிறோம், நான் பாக்யராஜிடம் பேசிக்கொள்கிறேன் என்றார். வந்த ஆத்திரத்தில், கீழே இருந்து பெரிய கல்லை கையில் எடுத்தேன். அதைப் பார்த்த பாக்யராஜ் அப்படியே சென்றுவிட்டார்.

எந்த மௌண்ட் ரோட்டில் நானும் பாக்யராஜும் பட்டினியாக நடந்தோமோ அதே சாலையில் அவர் பென்ஸ் காரில் செல்ல நான் பசியுடன் நடந்து சென்றேன். இப்போதும், என் நினைவில் இருப்பது அந்த பாக்யராஜ்தான்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.