

கேகேஆர் அணியில் வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்ததால், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு எதிராக இந்து அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா (கேகேஆர்) அணியில், 2026 ஆம் ஆண்டு போட்டிகளில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ரூ. 9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், வங்கதேச வீரரை அணியில் ஒப்பந்தம் செய்ததால், கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு எதிராக பல்வேறு இந்து மதகுருக்கள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, இந்து மதகுரு தேவ்கிநந்தன் தாக்கூர் கூறியதாவது:
“வங்கதேச வீரரை கேகேஆர் நிர்வாகம் மற்றும் அதன் உரிமையாளர் உடனடியாக நீக்க வேண்டும். அவர்கள் செய்த தவறுக்காக, ஒப்பந்தத் தொகையை இந்தியாவில் உள்ள இந்து குழந்தைகளின் உறவினர்களிடம் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதேபோல், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சங்கீத் சோம், வங்கதேச வீரரை அணியில் சேர்த்த நடிகர் ஷாருக்கான் ஒரு தேசத் துரோகி எனப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இத்துடன், மற்றொரு இந்து மதகுரு ஜகத்குரு ராம்பத்ராச்சார்யா, ஷாருக்கானின் நடவடிக்கைகள் எப்போதும் ஒரு துரோகியின் செயல்பாடுகளைப்போலவே இருந்துள்ளன எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, வங்கதேச நாட்டில் நடைபெறும் இந்துக்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக மற்றும் ஏராளமான இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.