

ஜன நாயகன் - பராசக்தி வெளியீடு குறித்த வதந்திகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஜன. 9-ல் விஜய்யின் ஜன நாயகன் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளே ஜன. 10-ல் சிவகார்த்திகேயனின் பராசக்தியும் வெளியாகிறது. இந்த நிலையில், இரு படங்களையும் கொண்டாடுமாறு சிவகார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “தொடக்கத்தில் பராசக்தி படத்தை தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் படமும் அதே நேரத்தில் வெளியாகும் என்று ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தோம்.
இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் வெளியீட்டை பொங்கல் திருநாளுக்கு மாற்றியிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இருப்பினும், முதலீட்டாளர்களிடம் பராசக்தி வெளியீடு ஜனவரி என்றுதான் சொல்லியிருந்தோம். மேலும், ஜனவரியை விட்டால், ஏப்ரல் மாதத்தில்தான் வெளியிட வேண்டியிருக்கும். ஆனால், அந்த நேரத்தில் தேர்தலும் வந்துவிடும். ஆகையால், வேறு வழியில்லை என்று தயாரிப்பாளர் கூறினார்.
ஜன நாயகன் வெளியீடு குறித்து விஜய்யின் மேலாளரிடம் கேட்டேன். அவரும் பராசக்தி மற்றும் ஜன நாயகன் ஒன்றாக வருவதில் பிரச்னை இல்லை என்றுதான் கூறினார். விஜய்யின் கடைசிப் படம் என்பதால்தான் யோசிக்க வேண்டியதாய் உள்ளது. பராசக்தி படத்துக்கு விஜய்யும் வாழ்த்து தெரிவித்தார். இதுதான் நடந்த மொத்த கதை.
ஜன. 9-ல் ஜன நாயகனை கொண்டாடுங்கள். 33 ஆண்டுகளாக திரைத் துறையில் நம்மை மகிழ்வித்தவரின் கடைசிப் படம். அதற்கு அடுத்த நாளான ஜன. 10-ல் பராசக்தியை கொண்டாடுங்கள். இந்தப் பொங்கல் - அண்ணன் தம்பி பொங்கல்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.