எம்ஜிஆரா? நம்பியாரா? கார்த்தியின் வா வாத்தியார் - திரை விமர்சனம்!
வா வாத்தியார் - திரை விமர்சனம் (2 / 5)
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மாசிலா என்கிற ஊரில் நடிகர் ராஜ்கிரண் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருக்கிறார். எம்ஜிஆர் இறந்த நேரத்திலேயே அவருக்கு பேரன் பிறக்க, வாத்தியாரைப் போல இவனை வளர்க்க வேண்டுமென நாயகன் கார்த்தியை வளர்க்கிறார். எம்ஜிஆர் காட்டிய நல்வழிகளில் கார்த்தி சென்றாரா? இல்லையா? என்கிற ஒன்லைன் கதையைக் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் திரைப்படங்களால் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர் எனப் பெயரெடுத்த நலன், வா வாத்தியாரில் என்ன சொல்லியிருக்கிறார்... எப்படி சொல்லியிருக்கிறார்.. என ஒவ்வொரு காட்சியாகக் காத்திருந்து காத்திருந்து பார்த்தால், ‘கதையும் இல்ல, ஒன்னும் இல்ல’ எனச் சொல்ல வந்திருப்பது இறுதியில் புரிகிறது.
நலன் குமாரசாமியிடமிருந்து எதிர்பார்க்காத ஒன்றாகவே இப்படம் உருவாகியிருக்கிறது. ஆரம்பக் காட்சிகள் ஆர்வத்தைக் கொடுத்தாலும் கடும் சோர்வை அளிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வரிசைகட்டி நம்மைப்படுத்தி எடுக்கின்றன.
உருவாக்க ரீதியாக சில விஷயங்கள் கவனம் ஈர்த்தாலும் மோசமான கதை, திரைக்கதையால் காட்சிகளில் எந்த அழுத்தமும் இல்லை. ராஜ்கிரண் வசனங்களில் வலு இருந்தாலும் அதை கார்த்தியை வைத்து உடைத்து, அக்கதாபாத்திரத்தின் பலத்தையும் பலவீனமாக்கியுள்ளார் இயக்குநர்.
முதல்பாதி இடைவேளையின் போது, ஒரு டுவிஸ்ட் வருகிறது. ஆனால், அதுவும் எந்த விதமான ஆர்வத்தையும் தூண்டாத வகையிலேயே எழுதப்பட்டுள்ளது.
எம்ஜிஆரை மையமாக வைத்தே நாயகனின் செயல்பாடுகள் இருந்தாலும் முழுமையாக எம்ஜிஆரை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே, இளம் தலைமுறை ரசிகர்களுக்கு கதையில் பிடிப்பு இல்லாமல் போக வாய்ப்பு அதிகம்.
நடிகர் கார்த்தி கதைகளில் கவனம் செலுத்துபவர். சில திரைப்படங்களில் ஊகம் தவறினாலும் வித்தியாசம் என ஒன்று இருக்கும். இப்படத்தில் அந்த வித்தியாசம் தனித்து தெரியாத அளவுக்கு எழுதப்பட்ட கதையால் எம்ஜிஆர் போல் நடித்த கார்த்திக்கும் காட்சிகளுக்கும் தொடர்பில்லாதது மாதிரி ஆகிவிட்டது.
க்ருத்தி ஷெட்டிக்கு கொஞ்சம் நடிக்க வருகிறது. அவரின் கவர்ச்சியை வைத்து தப்பிக்கலாம் என இயக்குநர் நினைத்தாரோ என்னவோ வலுவில்லாத கதாபாத்திரமாகவே எஞ்சிவிட்டது. நடிகர் ராஜ்கிரண் வரும் காட்சிகள் ஆறுதலைக் கொடுக்கின்றன. சத்யராஜின் தோற்றம் நல்ல வடிவமைப்பு.
நலன் குமாரசாமி கமர்சியல் திரைப்படமாக இருந்தாலும் மசாலைவை சரியாக போட வேண்டுமென மெனக்கட்டிருப்பது தெரிகிறது. ஆனால், அதுவே இக்கதைக்கு பலவீனமாக மாறிவிட்டது. எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தும் குறிப்பிட்ட கட்சியின் செயல்பாடுகளை மறைமுகமாகச் சாடவும் செய்திருக்கிறார்.
கார்த்தியும் எம்ஜிஆரும் கண்ணாடி வழியாக ஒருவரை ஒருவர் சந்திக்கும் காட்சி, இடைவேளைக் காட்சியின் எடிட்டிங் நன்றாக இருந்ததன. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை எடுத்த விதமும் ரசிக்க வைத்தது.
எம்ஜிஆர் பேசிய அட்டகாசமான வசனங்களின் ஒன்று, ''கரிகாலன் குறி வைத்தால் தவற மாட்டான். தவறுமானால் குறி வைக்க மாட்டான்''. வா வாத்தியார் படக்குழு குறியே வைக்காமல் எல்லா திசைகளிலும் கத்தியை வீசியிருக்கிறார்கள். அதுவும், பிளாஸ்டிக் கத்தி!
vaa vaathiyar movie released today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
