பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராணி மகாராணி... தாய் கிழவி - திரை விமர்சனம்!

தாய் கிழவி திரைப்பட விமர்சனம்....

News image
ராதிகா சரத்குமார்
Updated On :27 பிப்ரவரி 2026, 8:53 am

தாய் கிழவி திரை விமர்சனம்

3.5/5

சிவசங்கர்

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான தாய் கிழவி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மதுரையில் தன் ஊரில் லோக்கல் டான் என்கிற அளவிற்கு அனைவருக்கும் கடன் கொடுத்துள்ள பவுன் தாய் (ராதிகா சரத்குமார்) வட்டி வசூல் செய்ய கிளம்பும் காட்சியிலேயே எப்படிப்பட்ட ஆள் எனத் தெரிகிறது. கொஞ்சம் கறாராக நடந்துகொள்வதால், எப்போது பவுன் தாய் மறைவார் என ஊரே காத்திருக்க, ஒருநாள் பக்கவாதம் ஏற்பட்டு பவுன் தாய் சரிகிறார். அவரின் மகன்களுக்குத் தகவல் சொல்லியனுப்ப, ஒவ்வொருவராக அவரைத் தேடி வருகிறார்கள். மகன்களாவது பாசம் காட்டுவார்கள் என நினைத்தால், அவர்களுக்கும் கிழவி போனாப்போதும் என்கிற மனநிலையே இருக்கிறது. பவுன் தாய் மரணத்திற்குக்கு அனைவரும் காத்திருக்கும்போது மகன்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் தெரிய வருகிறது. இதனை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதும் மகன்கள் எப்படியாவது தன் தாயைக் காப்பாற்ற வேண்டுமென போராடுகிறார்கள். அப்படியென்ன புதையல் ரகசியம்? ஊரே நடுங்கும் பவுன் தாய் இறுதியில் என்ன ஆனார்? என்கிற அடுத்தடுத்த ஆர்வத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது தாய் கிழவி.

கடைசி விவசாயி திரைப்படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். முதல் படம்தானா இது? என ஆச்சரியப்பட வைக்கும் உருவாக்கமும் திரை எழுத்தும் மனதைக் கவர்கின்றன. பவுன் தாய் என்கிற தாய் கிழவி மூலம் பெண் சுதந்திரம், சேமிப்பின் பயன், பணத்தால் மட்டுமே சரி செய்ய முடியாதவை, உறவுகளிடம் நிலவ வேண்டிய கரிசனம் என காட்சிக்குக் காட்சி ரசிக்க, சிரிக்க, உணர்வூப்பூர்வமாக யோசிக்க வைத்திருக்கிறார்.

ராதிகாவின் அறிமுக காட்சியில் துவங்கி இறுதிக்காட்சி வரை எங்கும் தொய்வே இல்லாத திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் ஆகியவை இதனைச் சிறந்த திரைப்படமாகவே மாற்றுகின்றன. எவ்வளவோ தமிழ் சினிமாவில் கிழவிகளைக் காட்டியிருந்தாலும் தாய் கிழவியில் காட்டப்பட்டவை சுவாரஸ்ய அம்சங்களைக் கடந்து தனித்துவமான ரசனையையும் தருகின்றன.

ஒரு உயிரின் விலை அவ்வளவுதானா என்பதை நகைச்சுவை பாணியிலேயே சொல்லும் காட்சிகளை வைத்திருந்தாலும் ஒரு ஆம்புலன்ஸ் காட்சியில் இப்படம் சொல்ல வருகிற இன்னொரு விஷயமும் அழுத்தமாக கடத்தப்படுகிறது.

Listicle image

நடிகை ராதிகாவை நிறைய முறை அம்மா தோற்றத்தில் வயதான கதாபாத்திரத்தில் பார்த்திருந்தாலும், அட! என கைதட்ட வைக்கும் தாய் கிழவியாக மிரட்டியிருக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ராதிகாவை விட்டால் வேறு யார்? நினைக்கவே நீண்ட நேரம் பிடிக்கிறது. வயதானவர்களுக்கே உரிய நடை, சிரிப்பு, உடல்மொழி என ஒவ்வொரு காட்சிக்கும் செயற்கைத்தனம் துளியும் எட்டிப்பார்க்காத உழைப்பைக் கொடுத்திருக்கிறார். தன் பேரனுடன் ஆட்டுக்கறியைச் சாப்பிட்டபடி, ‘எனக்கு சுகர் பிரஷர் எதுவும் கிடையாது’ எனச் சொல்வதில் கொள்ளை அழகாக பல பாட்டிகளை நினைவுப்படுத்திவிடுகிறார். ஆண் தெய்வங்களைத் தவிர, வேறு எந்த ஆண்களுக்கும் மரியாதை கொடுக்காத கம்பீரத்துடன் ‘எவ்வளவு பெரிய மனுஷி’ என பவுன் தாய்க்கு பெரிய அடையாளமாகவே ராதிகா இருக்கிறார். பாராட்டுகள்.

பவுன் தாய்க்கு மகன்களாக நடித்த சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் ஆகியோர் படம் முழுவதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றனர். முக்கியமாக, கமல் ரசிகரான சிங்கம் புலியின் வண்டியில் இருக்கும் கமல் பாடல்கள், பால சரவணன் எண்ணைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுவது, மருத்துவமனை கட்டணத்திற்கு இவர்கள் படும் பாடு என பல இடங்களில் கைதட்டலுடன் கூடிய சிரிப்பொலிகள்தான்.

மேலும், ரேச்சல் ரேபக்கா, முனிஷ்காந்த், வேட்டை முத்துக்குமார் ஆகியோரும் பிரமாதமான பங்களிப்பைச் செய்திருகின்றனர். எந்தக் கதாபாத்திரங்களும் குறையில்லாத பங்களிப்பைச் செய்திருக்கும் திரை எழுத்தே படத்தின் பெரிய பலமாகவும் உள்ளது.

Listicle image

ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமாரின் ஒளியமைப்புகளும், காட்சி சட்டங்களும் மிகவும் ஈர்க்கின்றன. பட்டையடித்து சாலைக்கு வரும் பவுன் தாயின் தோற்றத்தையும், நகைகளை அணிந்தபடி மாடி அறையில் அவர் நிற்கும் காட்சியும் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் திறமையான ஒளிப்பதிவாளராக மாறும் தகுதிகளுடன் உள்ளார்.

நிவாஸ் கே பிரசன்னாவின், தாய் கிழவி வாரா பாடலுடன் பல பின்னணி இசைகள் கதையின் உணர்ச்சியை எங்கும் நழுவவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.

என்ன குறை? ராதிகாதான். இன்னும் நிறைய காட்சிகளில் அவரை நடிக்க வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலுவாக நடமாட வைத்திருந்தால் இன்னும் ஒரு படி மேலே இப்படம் சென்றிருக்கும்.

தாய் கிழவியை சாதாரணமாக பீல் குட் வகைக்களுள் அடக்க முடியவில்லை. இறுதியில் பேசிய விஷயங்கள் அசாதரணமாக, ‘தாய் கிழவி’கள் யார்? என்பதைச் சொல்கிறது. இன்றைய பெண்கள் தங்களின் சுதந்திரமாக எதை நினைக்க வேண்டும் என அழுத்தமாக பதியும்படி மொத்த கதையும் அமைத்திருப்பது பெரிய பலம். படித்த, உலகம் தெரியும் என நம்பிக்கொண்டிருக்கும் பலருக்கும், தாய் கிழவி மூலம் கவனமான பதில் ஒன்றை இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

கிளைமேக்ஸின் கட்டிலில் அமர்ந்தபடி சில பெண்களைப் பார்த்து பவுன் தாய் பேசு ஒவ்வொரு வசனங்களுக்கும் விசில் பறக்கின்றன. அதுவே இப்படத்தின் வெற்றிக்கான சான்று. சிறந்த திரைப்படத்தை தயாரித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள்!

summary

actor radhika sarathkumar's thaai kizhavi movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.