ஹார்ட் பீட் இணையத் தொடர் மருத்துவமனை நிகழ்வுகளை மையப்படுத்தியும் மருத்துவர்களாக பணிபுரிபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் நட்பு, காதல், குடும்ப உறவுகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதானப்படுத்தியும் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரின் முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்ஷ்மி, மோகன் ராம், பாடினி குமார், தாபா, சாருகேஷ், ராம், அமித் பார்கவ், அஸ்வதி, சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் காயு ஸ்ரீ, ராகுல் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் மூன்றாவது சீசனில் நடிக்கிறார்கள். தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது சீசனை பார்க்க வேண்டும், ஆனால் இரண்டு கதைகளையும் தேடிப் பார்க்க நேரமில்லை என்பவர்களுக்காகவும், முன்கதையை கேட்டுவிட்டு ஏற்கனவே இரண்டு சீசன்களையும் பார்க்கலாம் என்று நினைப்பவர்களுக்காகவும் முன்கதை சுருக்கமாக கடந்த 2 சீசன்களில் நடந்தவற்றைப் பார்ப்போம்.
கதையின் நாயகி டாக்டர் ரீனா(தீபா பாலு), மருத்துவப் படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக ஆர். கே. மருத்துவனையில் சேருகிறார். அவருடன் சில மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களாக இணைகிறார்கள்.
இந்த மருத்துவமனையின் கண்டிப்பான மூத்த மருத்துவரான ரதி(அனுமோள்), ஒழுக்கம், மருத்துவத்தில் செய்யும் சிறிய தவறையும்ஏற்றுக்கொள்ள மாட்டார். இதனால், ரதி மற்றும் ரீனாவுக்கு இடையே பிரச்னையாக சென்றுகொண்டிருக்கும்போது, ரதிதான் ரீனாவின் தாய் என்ற உண்மை தெரியவருகிறது.
முன்னதாகவே ரீனாவுக்கு தன்னுடைய தாய்தான் ரதி என்ற விவரம் தெரிந்துதான், அவரைக் காண்பதற்காகவே ஆர்.கே. மருத்துவனையில் சேருகிறார் என்ற உண்மையும் தெரிய வருகிறது. இருவரும் அவ்வபோது சண்டையிட்டாலும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்துள்ள அன்பை மறைமுகமாகவே வைத்திருப்பார்கள். இந்தத் தொடரின் ஒவ்வொரு எபிசோடுகளிலும் வித்தியசமான சம்பவங்கள் இடம்பெறும். உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயாளிகளை, மருத்துவர்கள் தீவிர சவால்களை மேற்கொண்டு, காப்பாற்றும் நிகழ்வு பார்ப்பவர்களுக்கு சிறந்த அனுபவமாகவே இருக்கும்.
இதனிடையே ரீனா, அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அர்ஜுன் மீது காதல் வயப்படுகிறார். இருவருக்கு இடையே தவறான புரிதலால் சண்டை, மீண்டும் சேர்வது என இவர்களின் காதல் ஒரு புறம் சென்றுக்கொண்டிருக்க, தனது தந்தை யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆராய்ச்சியில் இறங்குகிறார் ரீனா.
முதல்பாகத்தின் இறுதியில், மருத்துவமனையில் தொழில் முறையில் பலவற்றை கற்றுக்கொண்டு அனுபவம் வாய்ந்த சீனியர் மருத்துவராகிறார் ரீனா. ரதியின் தந்தையைக் கண்டறிந்து, அதாவது அவரின் தாத்தாவின் உதவியால் தனது தந்தையைக் கண்டறிய முயற்சி செய்கிறார் ரீனா.
ரீனாவுடன் பணியாற்றும் மருத்துவர்களான நண்பர்களும் சொந்த வாழ்க்கையிலும் தொழிலும் பல்வேறு திருப்பங்களைச் சந்திக்கிறார்கள், இதோடு அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்புகளோடு முதல் பாகம் முடிகிறது.
ஹார்ட் பீட் தொடரின் முதல் பாகத்தின் கதையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தொடங்குகிறது.
முன்னதாக, ரீனா பிறந்தவுடன், அவரின் தாய் ரதி, ரீனாவை காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்தச் சூழலில் திடீர் திருப்பமாக, ரீனாவின் தந்தை டாக்டர் விஜய்(கார்த்திக் குமார்) ஆர்கே மருத்துவனை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வருகிறார். ரதியை சந்திக்கும் விஜய், நமக்கு பிறந்த குழந்தை என்னானது என்று கேட்கிறார். அந்தக் குழந்தை(ரீனா) இறந்துவிட்டதாக பொய்யானத் தகவலைத் தெரிவிக்கிறார் ரதி.
இதனைத் தொடர்ந்து, கடந்த கால வழக்கொன்றில் விஜய்யை, காவல் துறை கைது செய்கிறது.
ரீனா தன் காதலன் அர்ஜூன் உடனான சண்டையில் கோபம் அடைந்து சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருக்கும்போது, ரீனாவுக்கு திடீர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், ரீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்ய விஜய்தான் சரியான தேர்வு என அனைவரும் கூறும்போது, விஜய் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், மருத்துவராக பணியாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்தச் சூழலில்தான் ரீனாதான் தனது மகள் என்ற உண்மை, விஜய்யிக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் விஜய் தனது மகளான ரீனாவைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் ரீனாவைக் காப்பாற்றி விடுகிறார்.
ரீனாவுக்கு சுயநினைவு திரும்பியதும் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ரீனாவும் விஜய்தான் தனது தந்தை என அறிந்து முதல்முறையாக அப்பா என்று அழைத்து பெருமிதம் கொள்கிறார்.
இரண்டாம் பாகத்தின் முடிவில் , சில முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டாலும் புதிய கதைக்களத்துக்கான புதிர்கள் உடன், அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை நோக்கி தொடர் முடிகிறது.
இந்த நிலையில், ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தின் முன்னோட்டக் காட்சியில், தீபா பாலு(ரீனா) மற்றும் கார்த்திக் குமார்(விஜய்) ஆகியோர் பணிபுரிந்துவந்த ஆர்.கே. மருத்துவமனையிலிருந்து விலகி, தந்தையும் மகளும் ஏ.எம். மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.
அனுமோள்(ரதி) ஆர்.கே. மருத்துவமனையிலேயே பணிபுரிவதுபோலவும், சாருகேஷ்(அர்ஜுன்) மருத்துவப் படிப்பைத் தொடர்வதுபோலவும், காண்பிக்கப்பட்டுள்ளது. புதிய பாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தாய் மற்றும் மகளான ரதி மற்றும் ரீனா மீண்டும் சேர்வார்களா? அர்ஜுன் - ரீனா காதல் என்னவானது என்ற கேள்விகளுக்கு ஹார்ட் பீட் தொடரின் மூன்றாவது சீசனில் விடை கிடைக்கும்.
Summary
A recap of the first two parts of the 'Heart Beat' web series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










