பேசி மயக்கும் கலை... பெண்ணை ஏமாற்றிய முத்துக்குமரனை விமர்சித்த கவிஞர் தாமரை!
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரையின் முகநூல் பதிவு குறித்து...

வஹிதா உடன் முத்துக்குமார், கவிஞர் தாமரை - படங்கள்: இன்ஸ்டா / வஹிதா, கவிஞர் தாமரை
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை தனது முகநூல் பதிவில், “பேசி மயக்கும் கலை” என்று பிக் பாஸ் முத்துக்குமரனை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் வஹிதா அக்தர் என்ற பெண் தன்னை காதலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக வஹிதா விடியோ வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பலரும் இதற்கு தங்களது கண்டனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் பாடலாசிரியை கவிஞர் தாமரை முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பேசி மயக்கும் கலை
அடேய் முத்துக்குமரா... இந்தப் பெண் இப்படி அப்பட்டமாய் ஊடகத்தில் போட்டு உடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாய் அல்லவா?? இதோ வெளிவந்து விட்டது உன் குட்டு!
இது இந்தப் பயல் முத்துக்குமரனைப் பற்றியது மட்டுமல்ல... பேசி மயக்கும், எழுதி மயக்கும் அனைத்துக் கில்லாடி அயோக்கியர்களுக்குமானதுதான்! ஆண், பெண் இரண்டு பாலருமே இந்தக் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்... நன்றாகப் பேசி, ஊடகங்களில் கொஞ்சம் பெருவலம் அடைந்ததுமே ஆரம்பித்து விடுகிறார்கள்... சொல்லப் போனால் பார்வையெல்லாம் 'யாரை வலையில் சிக்க வைப்பது?' என்பதுதான். அதற்கு இந்த மயக்கும் பேச்சுக்கலை போல் வேறேதும் உண்டா??
பேசுவது எல்லாம் உலக வீச்சில் இருக்கும், பூமியையே புரட்டிப் போட்டுவிடும் பேச்சு... தன்போன்ற நேர்மையாளன், செயல்வீரன், தியாகி, பசிநோக்கான், கண்துஞ்சான், இலட்சியவாதி எவருமே இல்லை என்று இரையை நம்பவைக்கும் அந்தப் பேச்சும் உடல்மொழியும்... அடடா அடடா....
இரை எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் சிலபேர் அதைத் தாண்டிய விற்பன்னர்களாக இருக்கிறார்கள்...
இவர்களிடம் அடிப்படையில் ஒரு தூண்டில் இருக்கிறது - ஏதாவது சித்தாந்தம்/கருத்தாக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாக அல்லது அப்படிக் காட்டிக் கொள்பவர்களாக இருப்பார்கள். மதம், சாதி (உயர்/தாழ்வு - இரண்டு வகையுமே), மொழி, நாட்டுப்பற்று, ஆன்மிகம், பொதுவுடமை, திராவிடம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் , கலை, இலக்கியம், மனிதவுரிமை, பலபாலருரிமை (LGBTQ ), விலங்குரிமை - எதுவும் விதிவிலக்கில்லை...
இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது... இந்தத் தலைமுறை தலைஇ (அதான் ஜென்சி) இளைஞர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள். எந்த அடிப்படை ஒழுக்கமும் கிடையாது. நாகரிகமும் கிடையாது. அந்தந்த நேரத்தில் கிடைப்பதை அனுபவித்து விட்டுப் போய்விட வேண்டும், அவ்வளவுதான்... இவர்கள் வாழ்க்கையே அந்த 'So what?' (அதுக்கென்ன இப்ப?)- ல் அடங்கி விடுகிறது...
Relationship, Situationship, OneNightStand, Liv-in, Ex, Crush, Ghosting, Zombieing, Rizz, Breadcrumb, Sugar Daddy - இன்னும் இன்னும் புதிய சொற்கள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன இவர்கள் அகராதியில்! கணக்கு வைக்க முடியவில்லை.
யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் எத்தனை குறைந்த நேரத்திற்கு வேண்டுமானாலும் இருக்கலாம். தேவையைத் தீர்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். (நம் காலத்தில் இதற்கு விபச்சாரம் என்று பெயர்)... Gigolo, Escort எல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன!
திருமணம் என்பது கெட்ட வார்த்தை, குழந்தை பிறப்பு தீண்டாமை... 'எந்த ஒழுங்கிற்குள்ளும் வரமுடியாது' என்பதே ஒரே ஒழுங்காக இருக்கிறது.
இதனால் விளையும் தீமைகள் பற்றி யோசிக்க அறிவு வேண்டுமல்லவா ? 'தலையி'க்களுக்கு அதுதான் இல்லையே! பிறகு எப்படி வாழ்க்கை நடக்கிறது ??!! அதுதான் நாம் இருக்கிறோமே, முந்தையத் தலைமுறை... நம் பெற்றோர்களையும் அன்பாகப் பார்த்துக் கொண்டு, அடுத்த தலைமுறையின் அட்டகாசங்களுக்கும் இரையாகிக் கொண்டு.... நடுவில் சிக்கி நாசமாகப் போன ஒரு தலைமுறை...
நேற்று ஓர் இளம்பெண் குடித்துவிட்டுக் கோயம்பேடு பேருந்தில் நிகழ்த்திய அட்டகாசத்தைப் பார்த்ததிலிருந்து எழுத வேண்டும் என்று நினைத்தேன்... முடியவில்லை.
'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்' நிறையப் பேச வேண்டும். ஆனால் எனக்கு அவ்வளவு ஆற்றல் தற்போது இல்லை. அதிர்ச்சிகளைத் தவிர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தல்.
முத்துக்குமரனைப் பற்றி இந்தப்பெண் தலைஇ துணிச்சலாகச் சொல்லியிருப்பது வியப்பு! இதற்கு ஒரு குழந்தை வேறு இருக்கிறதாம், இனி சமூகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ??. பொறுத்திருந்து பார்ப்போம்!
அடேய் முத்துக்குமரா... வாடா வா... இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பாயல்லவா... அப்போது அந்தத் 'தமிழ்நாக்கு' எப்படி சுழல்கிறது என்று பார்க்க ஆவலோடு இருக்கிறேன்! என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
Summary
The art of charming speech... Poet Thamarai criticizes Muthukumaran for deceiving a woman!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


