Enable Javscript for better performance
Does 8 hours worth to watch Gautham Vasudev menon's Queen web series- Dinamani

சுடச்சுட

  

  விமரிசனம்: 8 மணி நேரம் செலவிட்டுப் பார்க்கத் தகுந்ததா ‘குயின்’ இணையத் தொடர்?

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 17th December 2019 01:33 PM  |   அ+அ அ-   |    |  

  queen_2

  Queen web series Criticism

   

  கெளதம் வாசுதேவ் மேனன், பிரஷாத் முருகேசன் இணைந்து இயக்க, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் வெளிவந்துள்ள ‘குயின்’ இணையத் தொடர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அறியப்படாத வாழ்க்கைப் பக்கங்களைத் தழுவி வெளிவந்திருக்கிறது. அம்முயற்சியில் அது  சற்றே நியாயம் செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தொடருக்கான மூலம் ‘தி குயின்’ என்ற பெயரில் அனிதா சிவகுமாரன் எழுதிய புத்தகம். மொத்தம் 11 எபிசோடுகள். சக்தி சேஷாத்ரியின் ( ஜெயலலிதா) பள்ளிப் பருவம் மூன்று எபிசோடுகளில் காண்பிக்கப்படுகிறது. நடிகையான பின் ஜி எம் ஆரின் வருகை, சைதன்ய ரெட்டியுடனான காதல், என 9 எபிசோடு வரை செல்கிறார்கள். 10, 11 எபிசோடுகளில் சக்தி சேஷாத்ரியின் அரசியல் பிரவேஷம் மற்றும் ஜி எம் ஆரின் இறுதி ஊர்வலத்துடன் தொடர் முடிவடைகிறது. விவரங்களைச் சேகரிக்க ஆழமான களப்பணியில் ஈடுபட்டிருப்பார்கள் போலிருக்கிறது. புனைவு போலத் தோன்றாத வகையிலான சின்னச் சின்ன மெனக்கெடல்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

  தன் வாழ்நாள் முழுமையும் ஏமாற்றங்களையும், நிராகரிப்புகளையும் மட்டுமே எதிர்கொள்ள நேர்ந்த பெண்ணொருத்தியின் இமாலய வெற்றிகள் எப்படிச் சாத்தியமாயின?

  அத்தனைக்கும் பதில் இந்த இணையத் தொடரில் கிடைக்கிறது.

  12 வயதில் பள்ளியின் மிகச்சிறந்த மாணவி;

  20 வயதில் தமிழில் அதிகம் சம்பாதிக்கும் சூப்பர் ஹீரோயின்;

  24 வயதில் தமிழகத்தின் மிக முக்கியமான முகங்களில் ஒன்று;

  40 வயதில் தமிழகத்தின் இளமையான பெண் முதலமைச்சர்;

  இப்படி சக்திக்கான சிறப்புகள் பல... அத்தனையும் அவர் மலர்ப்பாதையில் நடந்து சாதித்தவை அல்ல. கல்வி மீதான ஆர்வம் தவிர்த்து சினிமா, அரசியல் எனத் தனது அடுத்தடுத்த புதுப்பயணங்களை ஆரம்பத்தில் விருப்பமின்றியே தொடங்குகிறார் சக்தி சேஷாத்ரி. பின்னர் அவருக்கே உண்டான பொறுப்புணர்வும்,  என்னால் முடியாதது எதுவுமில்லை எனத் தனக்குத்தானே நிரூபித்துக் காட்டிக் கொள்ளும் தன் முனைப்பும் அவரை அப்பாதையின் வெற்றிச் சிகரத்துக்கு நடத்திச் செல்கின்றன. 

  சிறுமி சக்தி,, குமரி சக்தியாகி, நடிகையாகி, கட்சியின் சத்துணவு அமைப்பாளராகிப் பின் கொள்கை பரப்புச் செயலாளராகி, கடும் எதிர்ப்புகளுக்கும், விமரிசனங்களுக்கும் இடையில் பலத்த அரசியல் போட்டியில் வென்று அரசியலில் தன்னை வளர்த்தெடுத்த ஆசான், தோழர், காதலர் என அனைத்துமான கட்சித் தலைவரின் அங்கீகரிக்கப்படாத வாரிசுமாகி கடைசியில் கட்சியே தான் மட்டும் தான் என யாதுமாகி நிற்கும் நிலை வரை தொட்டுச் செல்கிறது இந்த இணையத் தொடர்.

  15 வயது சக்தி சேஷாத்ரியின் பள்ளிப் பருவத்தில் தொடங்குகிறது முதல் எபிசோடு. 

   

   

  சிறுமி சக்திக்கு வாழ்க்கையில் சின்னச் சின்னக் கனவுகள் பல இருந்திருக்கின்றன. அதில் முதல் கனவு கான்வெண்ட்டின் சிறந்த மாணவிக்கான வெற்றிக் கேடயத்தைப் பெறுவதில் தொடங்குகிறது. பிறகு அந்தக் கனவுகள் குயின் விக்டோரியா கல்லூரியின் மாணவியாகச் சேர்வது, தோழி பிங்கியின் வீட்டைப் போல பெரிய மாளிகை வீடொன்றைக் கட்டி அதில் தனது அம்மாவைக் குடிவைப்பது என நீள்கிறது.

  இதில் சக்தியின் முதல் கனவு, முதல் எபிசோடின் இறுதியில் அவளது அம்மாவாலேயே தகர்க்கப்பட்டு விடுகிறது.  

  மாநிலத்தின் சிறந்த பெண்கள் கல்லூரியில் சிபாரிசே தேவைப்படாமல் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய மாணவியான சக்தி சேஷாத்ரி அங்கிருந்து அவளது அம்மாவால் மடை மாற்றப்பட்டு  நடிகையாக்கப்படுகிறாள்.

  காரணம் குடும்ப வறுமை. 

  அந்தத் தருணத்தில் தன்னை யாராவது அந்த கஷ்டத்திலிருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று தவிக்கிறது சிறுமி சக்தியின் மனம். இதெல்லாம் சில மணி நேரத் துக்கமாக தொடரில் காட்டப்பட்டாலும் அந்த மோசமான ஏமாற்றங்களால் மட்டுமே பின்னாளைய சக்தி கட்டமைக்கப்படுகிறாள் என்றால் அது மெய்.

  சிறுமி சக்தியாக அனிகா சுரேந்திரனின் நடிப்பு அபாரம். அறிமுகக் காட்சியில் பள்ளியின் தலைமை மாணவியாகத் தனது சீருடையில் குத்தப்பட்டுள்ள பேட்ஜை பெருமிதத்துடன் சரி செய்துகொண்டு அந்தச் சிறுமி மேடையேறும்போது அதில் பொலிகிறது அவளது தலைமைப்பண்பு.

  இதே உணர்வுடன் தான் அவள் திரைப்படத்துறையிலும் தனது புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சிக்கிறாள். ஆனால், அது அதற்கான இடமொன்றுமில்லையே. சக நடிகர்கள் மற்றும் திரைக்கலைஞர்களால் தலைக்கனம் பிடித்தவள் என விமரிசிக்கப்படும் சக்திக்கு வெகு சீக்கிரத்திலேயே பெரிய இடத்திலிருந்து அங்கீகாரம் கிடைக்கிறது. தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஜி எம் ஆருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு. இதெல்லாமும் ஜெயலலிதாவின் கதையை அறிந்த அத்தனை பேருக்குமே தெரிந்த விஷயங்களே! 

  இதில் நாமறியாதது. இடையிடையே சக்தி மற்றும் அவரது அம்மாவான ரங்கநாயகியின் கூற்றுக்களாக முன்வைக்கப்படும் வசனங்களே!

  ஜி எம் ஆருடன் ஒப்பந்தத்தில் இருக்கும் போது ஹிந்திப்பட வாய்ப்பு வருகிறது. அதை ஜி எம் ஆர் தடுத்து விடுகிறார். அதற்கு சக்தி பின்னாட்களில் கூறும் விளக்கம். ‘அவர் எனக்கு நல்லது தான் செய்திருக்கிறார். பல கைகளுக்கு மாறுவதிலிருந்து அவர் என்னைப் பாதுகாத்து விட்டார்’ என்று. சக்தி நடிகையாக இருந்து இதைச் சொல்லும் போது அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

  இப்படித் தொடர் முழுவதுமே ஆழ்ந்த பொருள் கொண்ட வசனங்கள் பல இடங்களில் ஈர்க்கின்றன. வசனங்களுக்கான மூலம், ஜெயலலிதா, சிமி கார்வலுக்கு அளித்த ஆங்கில நேர்காணலில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

  பள்ளிக்கு ஒருநாள் கூட விடுப்பு எடுக்க விரும்பாத மாணவியாகத் திகழும் சக்தியை அவளது அம்மா, அவள் பள்ளியின் சிறந்த மாணவியாகக் கேடயம் பெற வேண்டிய நாளில் திரைப்பட நடிகையாவதற்கான ஒப்பனைத் தேர்வுக்கு அழைத்துச் சென்று விடுகிறார். சரி பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் நடித்து விட்டு மீண்டும் கல்லூரிப் படிப்புக்குத் திரும்பி விடலாம் என்று நம்பும் சக்தியின் நம்பிக்கை பின்னர் முற்றிலும் தகர்க்கப்படுகிறது. கல்லூரிப் பேராசிரியராகவோ, வக்கீலாகவோ ஆசைப்படும் சக்தி முடிவில் அவளது கனவுக் கல்லூரியான குயின் விக்டோரியா கல்லூரியின் நுழைவாயிலிலேயே ஜி எம் ஆரால் ‘குயின் சக்தி சேஷாத்ரி ஆக்கப்பட்டு  விடுகிறாள். அதில் அவளுக்கு நிஜமான மகிழ்ச்சி இருந்ததா? என்றால் பதில் அவளுக்கே தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

  நேர்காணலின் ஓரிடத்தில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் சக்தி இப்படிச் சொல்கிறார்.

  ‘எனக்கு நிரந்தர முடிவுகளில் நம்பிக்கையில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுப்பதே எனது தேர்வாக இருந்து வருகிறது’ என்பது. இதைத்தான் அவர் பின்னர் அரசியலில் தன் காலம் முழுமையும் செயல்படுத்தினார்.

  பள்ளி மாணவி, பிறகு நடிகை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின். ஆனாலும் சுழன்று கொண்டே இருக்கும் சக்கரம் ஒருநாள் கீழேயும் வந்து தீரும் இல்லையா? உடல் எடை கூடியதாலா அல்லது இளமையான முகங்களுக்கான தேடல் ஜி எம் ஆருக்கும் தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கும் அதிகரித்ததாலோ சக்தியின் சினிமா எதிர்காலம் திடீரெனக் குறைந்து கொண்டே வந்து ஒருநாள் முற்றிலுமாக இல்லாமலாகி விடுகிறது. அதற்குள் சக்தியின் வாழ்வில் இரண்டு முக்கியமான காதல் நாடகங்கள் நிகழ்ந்து முடிகின்றன. இரண்டிலுமே கடைசியில் அவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே! 

  தொடர் முன் வைக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், சக்தி சேஷாத்ரிக்கும் (ஜெயலலிதா), அவரது அம்மா ரங்கநாயகிக்கும்(சந்தியா) இடையில் நிலவிய டாம் அண்ட் ஜெர்ரி உறவுச் சிக்கல்கள். ‘அம்மாவும், பொண்ணுமா ஒன்னு சேர்ந்தாலே எப்பவும் பாடு தான்’ என்று சக்தி தன் அம்மாவைக் கடிந்து கொண்டு வெளியேறும் அளவுக்கு அவர்களுக்கிடையிலான உறவு எப்போதும் சிக்கலானதாகவே இருந்திருக்கிறது. அதாவது சக்திக்கு மனநலப் பிரச்சினைகள் வரும் வரையிலும், அவளுக்குத் தன் அம்மாவின் மீது மிதமிஞ்சி இருந்தது வெறுப்பு மாத்திரமே. இரண்டு காதல்கள் பொய்த்துப் போன பின், சினிமாவில் வாய்ப்புகளும் அரிதான பின் பத்திரிகைகளில் எழுத முயற்சிக்கும் சக்திக்கு அதுவும் கை கொடுக்காமல் போக மீண்டும் மனம் துவண்டு மீளாத் துயரில் சிக்கிக் கொள்கிறாள். அப்போது கை கொடுப்பது அம்மா ரங்கா தான். சக்தியின் அத்தனை கஷ்ட காலங்களிலும் மகளை விட்டுக் கொடுக்காமல் உடனிருக்கிறாள் அந்தத் தாய். அதெல்லாமும் சில காலம் தான். தாயும், மகளுமாகத் தங்களது துக்கத்தில் இருந்து மீண்டு விட யத்தனிக்கையில் மீண்டும் விதி தன் கோர முகத்தைக் காட்டத் தயங்கவில்லை. உடல்நலக்குறைவால் ரங்கா உயிரிழக்க சக்தி தனிமையில் விடப்படுகிறாள்.

  ஜி எம் ஆருக்கும், சக்திக்குமான காதல் என்பது நம்பிக்கையின் பால் கட்டமைக்கப்பட்டதில்லை. அது ஒரு மென்மையான உணர்வு எழுச்சியாகவே முன் வைக்கப்படுகிறது. சக்தியைத் தான் விலை கொடுத்து வாங்கிய தனது சொத்துக்களில் ஒன்றாகப் பாவிக்கும் ஜி எம் ஆரால் சக்தியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அவரிடமிருந்து அன்பையும், காதலையும் தாண்டி அவள் விடுதலையையே பெரிதும் விரும்புகிறாள். அந்த விடுதலையும் கூட ஒரு கட்டத்தில் அவளுக்குக் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால், அப்போது அதை உணரும் மனநிலையில் அவள் இல்லை. 

  சக்திக்கு சைதன்ய ரெட்டியுடனான திருமண முயற்சி மட்டும் சரியாக ஈடேறி இருந்தால் தமிழக அரசியலே ஒருபாடு திசைமாறிப் போயிருக்கலாம். அதையும் தடுத்து நிறுத்தியவர் ஜி எம் ஆர் தான் என்கிறது தொடர். உண்மை அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  தொடரில் சக்தி சேஷாத்ரியின் வலிமைகள் மட்டுமே முன்வைக்கப்படவில்லை. அவள் தனக்கே, தனக்கென வேண்டுமென நினைத்த இழப்புகளே பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. நல்ல கல்வி, கெளரவமான வேலை, கணவர், குழந்தைகள் என அழகான, அன்பான குடும்பம் இது மட்டுமே அவளது சின்னக் கனவாக இருந்திருக்கிறது. கூடுதலாக கனவு கண்டது தன் பள்ளித் தோழி பிங்கியினுடையதைப் போன்ற ஒரு பெரிய மாளிகை வீட்டை. முன்னதைத் தவிர பின்னது அவளுக்கு சாத்தியப்பட்டும் அதற்காக மகிழ்ந்திருக்கும் மனநிலை மட்டும் அவளுக்கு எப்போதும் வாய்க்கவே இல்லை.

  ஆயிரமாயிரம் பேர் சூழ இருந்தும் கூட சக்தி எப்போதும் தனித்திருக்கிறாள். சிறுமி சக்தியானாலும் சரி நடிகை சக்தியானாலும் சரி அரசியல் தலைவி சக்தியானாலும் சரி அவள் எப்போதும் தனித்தே இருக்க வேண்டியவளாகி விடுகிறாள். 

  அது ஏன்?

  அந்தக் கேள்வியே அவளைத் தனது ஒவ்வொரு தாழ்வில் இருந்தும் மேடேற்றிச் செல்கிறது.

  ஜி எம் ஆரின் இறுதி ஊர்வலத்தில், ராணுவ வாகனத்தில் இருந்து கீழே தள்ளப்பட்ட போதும் அதுவே அவளை எல்லோருக்கும் மேலாக இருந்தாக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது.

  இதை ஜி எம் ஆர் ‘தான் எனும் அகங்காரம்’ என்கிறார். சக்தி ‘வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனம்’ என்கிறார். அவர்களை ஆராதிக்கும் மக்களோ ‘அதிர்ஷ்டம்’ என்கிறார்கள்.

  எது எப்படியாயினும் சக்தி சேஷாத்ரி எனும் தனிப்பட்ட மனுஷியின் வாழ்க்கையானது தெற்கு ஆசியாவில் எந்த ஒரு பெண் அரசியல் தலைமைக்கும் நேர்ந்திராத வகையிலான தனித்துவமும், கவர்ச்சியும் கொண்டது என்பது உண்மை.

  அதனால் தான் அது மீண்டும் மீண்டும் புனைகதையாகவும், திரைப்படமாகவும், இணையத் தொடராகவும் வேறு வேறு நபர்களால் எடுத்தாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

  தொடருக்கான பாத்திரத் தேர்வுகள் கச்சிதம். 

  சிறுமி சக்தியாக அனிகா சுரேந்திரன், நடிகை சக்தியாக அஞ்சனா ஜெயபிரகாஷ், அரசியல்வாதி சக்தி சேஷாத்ரியாக  ரம்யா கிருஷ்ணன் தங்களது பாத்திரங்களை மிக அருமையாகப் பிரதிபலித்திருக்கிறார்கள். ஜி எம் ஆராக இந்திரஜித் சுகுமாரன் நயம்பட நடித்திருக்கிறார். சக்தியின் அம்மா ரங்கநாயகியாக சோனியா அகர்வாலும், துளசியும் செவ்வனே பொருந்துகிறார்கள். பாட்டியாக நடிகை சர்மிளா. ஜி எம் ஆரின் மனைவி ஜனனி தேவியாக நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன், சூர்யகலா தன்ராஜாக நடிகை விஜி சந்திரசேகர். தன்ராஜாக நடிகர் மாரிமுத்து, சைதன்ய ரெட்டியாக நடிகர் வம்சி கிருஷ்ணா, இயக்குனர் ஸ்ரீதராக கெளதம் வாசுதேவ் மேனன் என பிரதான கதாபாத்திரங்கள் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். கான்வெண்ட் முதல்வராக வரும் சிஸ்டர் ஃப்ளாவியாவாக நடித்தவரும், சிமி கார்வலுக்குப் பதிலாக நேர்காணல் செய்பவராக நடித்த நடிகை லைலெட் துபே (Lilette Dubey) கூட பொருத்தமான தேர்வுகளே.

  நெருடலான விஷயம் பல இடங்களில் டப்பிங் ஒத்துழைக்கவில்லை. நடிகர்களின் வாயசைப்பும், பின்னணியும் பொருந்தாமல் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறார்கள். 

  கலை இயக்கம் 1960, 70 களைக் கண் முன் நிறுத்துகிறது. சக்தியின் கான்வெண்ட் வளாகம், குயின் விக்டோரியா கல்லூரியின் முகப்பு, பழைய பேருந்துகள், அதிக கூட்டமில்லாத மெரினா பீச், தலைமைச் செயலகம், அடையாறு ஆலமரம், மதியூகி (குமுதம்) அலுவலகம், ஜி எம் ஆரின் கட்சி அலுவலகம், தோட்ட வீடு, அந்தக்கால ஸ்டுடியோக்கள், ராஜாஜி ஹால் என்று நம்பத்தகுந்த அளவில் முயன்றிருக்கிறார்கள். 

  கண்களை மட்டுமல்ல சிந்தையையும் உறுத்தாத கண்ணுக்குக் குளிர்ச்சியான ஒளிப்பதிவு. பின்னணி இசையில் பழமையும் புதுமையான ஒரு ஈர்ப்பு. கிராம போன் ரேடியோவில் ஒலிக்கும் ஷம்மி கபூரின் இந்திப்பாடல் சக்தி சேஷாத்ரியின் வாழ்வை கூடவே பயணித்ததைப்போல வெகு நெருக்கமாக உணரச் செய்கிறது.

  இதில் சக்தியின் அரசியல் பிரவேசம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. அதற்குப் பிறகும் கூட அவர் வாழ்க்கையில் அரசியல் வெற்றி, தோல்விகள் முதல் அவரது இறப்பு வரையிலுமான சுவாரஸ்யங்களுக்கும், புதிருக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. ஆகவே கூடிய விரைவில் அடுத்த பாகமென ஒன்று வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai