'சை ரா நரசிம்ம ரெட்டி' திரை விமரிசனம்!

படம் சுதந்திர வேட்கையை கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து விட்டாலும் கூட நிஜத்தில் நடந்த கதை இது இல்லை என்கிறார்கள் வரலாற்றை நன்கறிந்தவர்கள். காலம் சென்ற பாளையக்காரரின் பேரனான ஒரு இளைஞர் தனது மானிய உரிமை
'சை ரா நரசிம்ம ரெட்டி' திரை விமரிசனம்!

தயாரிப்பில் இருந்த போதே ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய படம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்றால்? ஓரளவுக்கு எனலாம். 

தமிழ்நாட்டுக்கு கட்டபொம்மனும், மாவீரன் பூலித்தேவனும், மருது சகோதரர்களும் எப்படியோ அப்படியே தான் ஆந்திர மக்களுக்கு ரேநாட்டுச் சூரியனான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி. நமது கட்டபொம்மனைப் போலவே அவரும் அங்கொரு பாளையக்காரர். ஆனால், அவரது தாத்தாவுக்கு தத்துப் புத்திரனாக இவர் சென்றதால் பிற்பாடு குள்ளநரி கும்பினி அரசால் வாரிசுரிமை செல்லாதென அறிவிக்கப்படுகிறார். ஜான்ஸிராணியும், உய்யலவாடா நரசிம்ம ரெட்டியும் இணையும் இடம் இது தான். படத்தின் துவக்கமே ஜான்ஸி ராணியில்(அனுஷ்கா) தான் என்பதால் இதைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

லாப்ஸ் கொள்கை (அ)வாரிசில்லாக் கொள்கை குறித்து... 

இந்தியாவில் மூலைக்கொன்றாக சிதறிக்கிடந்த பாளையக்கார சிற்றரசர்களிடம் இருந்து இந்திய நிலப்பகுதிகளை அபகரிக்க வெள்ளை அரசின் டல்கெளசி கொண்டு வந்தது  ‘லாப்ஸ் கொள்கை’. அந்தக் கொள்கையின் படி வாரிசுகள் இல்லாத இந்திய சிற்றரசர்கள் தங்களது அரசுரிமையை வெள்ளை அரசாங்கத்திடம் அடமானம் வைத்து விட்டு அதற்கு பிரதியுபகாரமாக அவர்கள் அளிக்கும் பிச்சையாக மாதம் தோறும் அல்லது வருடாந்திர மானியம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஈடாகத் தன் மக்களிடம் இந்த பாளையக்காரர்கள் மாதம் தோறும் வரி வசூலித்து வெள்ளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதை அன்று ஒப்புக் கொள்ளாத பாளையக்காரர்களே இல்லை என்கிறது வரலாறு. தப்பித்தவறி எவரேனும் மறுத்து சங்க முழக்கமிட்டால் சங்கறுத்து வீழ்த்தப்பட்டார்கள் என்கின்றன பாளையக்கார மாவீர சரித்திரங்கள்.

கதைச்சுருக்கம்...

அப்படி வழி வழி வந்த பாளையக்காரர்களில் ஒருவர் தான் நொசம் பாளையக்காரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டி!

ரேநாடு, ராயலசீமாப் பகுதியைச் சார்ந்த 64 பாளையக்காரர்களை ஒன்றிணைத்து கும்பினி அரசை எதிர்த்து ஆந்திர சீமையில் முதல் முதல் விடுதலைப் போராட்டத்தைத் துவக்கியவர் சை ரா நரசிம்ம ரெட்டி. அவரது வெற்றி நட்பின் நயவஞ்சகத்தால் எப்படி கவிழ்க்கப்படுகிறது என்பதே முழுக்கதையாக விரிகிறது திரையில்...

கதாபாத்திர தேர்வு...

புதரைக் கிழித்துப் புறப்பட்ட நரசிம்மர்...
புதரைக் கிழித்துப் புறப்பட்ட நரசிம்மர்...

உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி பட்டையைக் கிளப்புகிறார். 

ஆனாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று உங்களுக்குத் தோன்றினால் அது அவரது வயதாக இருக்கலாம். ஆம், சிரஞ்சீவி தன் வயதைத் தானே தின்று ஜீரணம் பண்ணி விட்டாற் போலிருக்கிறார். கோயில் ஆடலரசி லட்சுமியின் (தமனா) மீது காதல் வயப்பட்ட சில நொடிகளுக்கெல்லாம் சித்தம்மாவுடன் (நயன்தாரா) நிகழ்த்தப்பட்ட பால்ய விவாகத்தை தாயார் நினைவூட்டி விட காதல் காட்சிகளுக்கு படத்தில் வேலையே இல்லை என்றாகி விட்டது. பிறகு தமனா ஏன்? அவர் நரசிம்ம ரெட்டியின் காதலியாக தென்னிந்தியா முழுவதும் கலைப்பயணம் மேற்கொண்டு அவரது சுதந்திர தாகத்தை கொண்டு சேர்க்கும் அணிலாகி சேவை செய்கிறார்.

தமனா கொஞ்சம் ஈர்க்கிறார்...

தமனாவுக்காவது நடிப்பை வெளிப்படுத்த இரண்டொரு வாய்ப்புகள் படத்தில் உண்டு. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்... நரசிம்ம ரெட்டி இருக்கும் தைரியத்தில் ஓரணியாகத் திரண்டு கும்பினிக்கு எதிராக ரேநாட்டு மக்கள் போராடத் துணிந்து விட அதைக் காணச் சகியாத வெள்ளைக்கார கொள்ளை அதிகாரி வெடிமருந்துப் பெட்டகங்களைப் பெட்டி பெட்டியாக வரவழைத்து ரேநாட்டைத் தீக்கிரையாக்கத் திட்டமிட அங்கு இழுத்து வரப்படும் லட்சுமி தானே ஒரு மனித வெடிகுண்டாக மாறி முழு கிட்டங்கியையும் கொளுத்தி கொழுந்து விட்டெரியச் செய்யும் இடத்தில் லட்சுமியாக நடித்த தமனாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

நயன்தாராவை வீணடித்து விட்டார்களோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை சித்தம்மாவாக்கி வீணடித்து விட்டார்களோ! என்று படம் முடியுமட்டும் தோன்றிக் கொண்டே தான் இருந்தது. அவருக்கு இதில் ‘ஐயோ ராமா’ சொல்லும் கதாபாத்திரம் போதுமென்று தீர்மானித்தது யாரோ? ஏனோ?

நரசிம்ம ரெட்டியின் அம்மாவாக லஷ்மி கோபால்சாமி, பெரியம்மாவாக நடித்த தெலுங்கு நடிகையும் கூட அவரவர் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார்கள்.

நண்பனாக ஜெகபதிபாபு... இவருக்கு இப்போதெல்லாம் ஓய்வெடுத்துக் கொள்ள நேரமிருக்கிறதோ இல்லையோ? எந்தப் பக்கம் திரும்பினாலும், எந்த மொழியிலானாலும் நடித்துக் குவித்துக் கொண்டிருக்கிறார். சை ராவில் இவருக்கு வீரா ரெட்டி வேடம். நன்றாகவே செய்திருக்கிறார். முடிவில் எட்டப்பனாகி சுதந்திர அபிமானிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார். 

நரசிம்ம ரெட்டியின் சுதந்திர வேட்கையால் ஈர்க்கப்பட்டு அவரைத் தேடி வரும் தமிழ் மறவன் (வீரன்) ராஜபாண்டியாக விஜய் சேதுபதி அறிமுகமாகும் இடத்தில் தியேட்டரில் விசில் பறந்தது. சிரஞ்சீவியின் ஓப்பனிங் சீனுக்கு கூட இத்தனை அதகளம் இல்லை. அதெல்லாம் அவருக்கு அக்கடபூமியில் கிடைத்திருக்கலாம்.

நரசிம்ம ரெட்டியின் ஒன்று விட்ட அண்ணன் மல்லா ரெட்டியாக ஆனந்த் (பூந்தோட்ட காவல்காரன் ஆனந்த் என்று சொன்னால் ஒருவேளை இவரை உங்களுக்கு நினைவுக்கு வரலாம்)

64 பாளையக்காரர்களில் பிரதானமான அவுக்கராஜு கதாபாத்திரத்தில் சுதீப்.

நரசிம்ம ரெட்டியின் குருவாக கோசாயி வெங்கண்ணா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன்.

தனித்துத் தெரிகிறார் சுதீப்...

இதில் சுதீப் கொஞ்சம் தேவலாம் ஓரிரு இடங்களில் தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்கிறார். ஒன்று அந்த ஜல்லிக்கட்டு சீன். மற்றொரு இடம் போர்க்களத்தில் திடீரெனத் திறக்கும் நிலத்தடிக் கதவுகளில் இருந்து குதிரையில் சீறிப்பாய்ந்து படைகளுடன் பிரசன்னமாகிப் போரிடும் இடம். இந்த இரண்டு காட்சிகள் போதும் சுதீப்புக்கு நரசிம்ம ரெட்டி அளவுக்கு இவரும் ரசிகர்களின் மனதில் நிற்க. ஆனால், கோசாயி வெங்கண்ணாவுக்கு அந்த வாய்ப்பு மிஸ்ஸிங். பாலிவுட் பிக் பி அமிதாப்புக்கு இன்னும் சற்று அழுத்தமான காட்சியமைப்புகளைச் சித்தரித்திருக்கலாம். இயக்குனர் செய்ய மறந்தது ஏனோ?

நாசரும், அமிதாப்பும் செட் பிராப்பர்ட்டிகளானது ஏன்?

நரசிம்ம ரெட்டியின் தாத்தாவாக வரும் நாசரும் கூட படத்தில் ஏதோ செட் பிராப்பர்ட்டி போலத்தான் கையாளப்பட்டிருக்கிறார். படத்தில் நாசரையும், அமிதாப்பையும் விட பிரிட்டிஷ் அதிகாரிகளாக வரும் இருவருக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்த அனேக வாய்ப்புகள் இருந்ததை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நரசிம்ம ரெட்டியால் கழுத்தறுக்கப்பட்டு வீழும் அந்த நடிகரின் பெயர் தெரியவில்லை.. ஆனால், சிம்ப்ளி சூப்பர்ப் வில்லத்தனம் என்றால் அப்படி ஒரு வில்லத்தனம். திமிரும், தெனாவட்டும் கண்களில் நெளிய ஒரு முதியவரை அவரது சொந்த வயலில் குதிரைக்குப் போட்டியாக ஓடவிட்டு குரூரமாகச் சிரிக்கும் இடத்தில் அப்படிச் செய்த அந்த ஒரிஜினல் பரங்கிக்காரனையே மிஞ்சி விடுகிறார். 

அசரடித்த வெள்ளை அதிகாரி கதாபாத்திரங்கள்..

அவருக்கும் பெரிய அதிகாரியாக மதராசப்பட்டிணத்தில் கோலோச்சும் வெள்ளைக் கும்பினி அதிகாரி அழுத்தமான கொலைகாரராக அடக்கி வாசித்தாலும் குரூரம் அவரது அசால்ட்டான நடிப்பில் நன்கு வெளிப்படுகிறது.

இப்படியெல்லாமா நம் மக்கள் அடிமைப் பட்டிருந்தார்கள்?

துரை வண்டியிலிருந்து இறங்க முதுகு கொடுத்து கால்மிதியாக ஒரு கூட்டம்...

மனசாட்சி இருந்தும் அதைச் சாகடித்து விட்டு கும்பினியாரை அண்டியிருக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருந்த துவிபாசிகள் எனும் பூணூல் அடிமைக் கூட்டம்.. இவர்களில் பலர் துரைமார்களுக்கு நல்லது, கெட்டதுகளை எடுத்தியம்பும் அளவுக்கு வல்லமை பெற்றவர்களாக இருந்திருந்த போதும் வெள்ளைக்காரத் திமிருக்கு பலியானவர்களே அனேகம் பேரென்று வரலாறு சொல்கிறது.

ஆரம்பத்தில் ஒரு சாண் இடம் கேட்டு உள்ளே வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி மொத்த இந்தியாவையும் கபளீகரம் செய்ய தூண்டுகோலானது எது?

அது இங்கிருந்த வற்றாத செல்வம்...

முகலாயர்கள் சுரண்டிய பின்னும் மீதமிருந்தன நம் மன்னர்களின் கஜானாக்களில் சேகரமாயிருந்த பொற்குவியல்கள்..

நம் கோயில்களுக்கு மன்னர்களும், பாளையக்காரர்களும், ஜமீன்தார்களும், வணிகப்பெருந்தகைகளும் பொதுமக்களும் அள்ளி அள்ளிச் சூரையிட்ட பெருந்தனம் அத்தனையும் ஈர்த்தன அந்நிய வந்தேறிகளை.. அப்படி வந்தவர்கள் தாம், இங்கு நமக்குள் இருந்த உறவுப் பிணக்குகளை, சிறு சிறு பூசல்களை ஊதிப்பெரிதாக்கி, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஆழ்த்தி நம்மை அடிமையாக்கி ஆண்டனர் நானூறு வருடங்கள். இன்றும் கூட அடிமைப்பட்டுக் கிடந்ததின் வஞ்சினம் உளைந்து கொண்டு தான் இருக்கிறது ஒவ்வொரு இந்திய நெஞ்சுக்குள்ளும்.

அத்தனைக்கும் காரணம் ஒரு சிறு பொத்தல் தான்.

அந்தப் பொத்தல் எங்கிருந்து தொடங்கியது என்றால் அது நம்மை ஆண்டவர்களின் ஒற்றுமையின்மை எனும் உதிரிப் புத்தியில் இருந்து...

அதன் மீதேறி வெறியாட்டம் ஆடிச் சென்றனர் ஆங்கிலேய வேட்டைக்காரர்கள்.

ஆம், வியாபாரிகளாக வந்தவர்கள் வேட்டைக்காரர்களாக மாற நாமே அனுமதித்தோம். அனுமதித்ததின் பலனை அனுபவித்தோம் நான்கு நூற்றாண்டுக் காலங்கள்.

அதில் பலிகடாக்களாகிப் போயினர் பல வீராதி வீரர்கள்.

அவர்கள் தம் இன்னுயிரை ஈந்து அந்த வந்தேறிகளுக்கு உரக்கச் சொல்லிச் சென்றது ஒன்றே ஒன்று தான்.

'Get out from my Motherland'

இதைத்தான் நரசிம்ம ரெட்டியும் சொல்கிறார்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தூக்குக் கயிற்றின் முன் நின்று கொண்டு உய்யலவாடா ஆற்றும் உரை சினிமாவுக்காக சேர்க்கப்பட்டதாக இருக்கலாம். நிஜத்தில் அவ்விடம் எந்த அளவுக்கு பயத்திலும், நிசப்தத்திலும் உறைந்திருக்கக் கூடும் என்று நம்மால் ஊகிக்க முடிவது வேதனை. கட்டபொம்மனுக்கு நேர்ந்ததும் இது தானே!

ஒளிப்பதிவு நிறைவு...

N. ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் திருவிழாக் கோலங்களும், போர்க்காட்சிகளும் கண்களுக்கு வர்ணம் தீட்டுகின்றன. 

கபாலத்தைத் தாண்டி உள்ளே பாய்கிறது இசை!

இசை: அமித் திவேதி. 

பாடல்களில் ‘சுவாசமாகும் தேசமே’ கொஞ்சம் மனதில் நிற்கிறது. மற்றவை அனைத்தும் கதையுடன் நகர்வதில் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை அதிர்கிறது. அதிலும் உய்யலவாடா போர்க்கோலத்தில் பிரசன்னமாகும் இடத்திலும், தூணிலும், இருப்பான், துரும்பிலும் இருப்பான் நரசிம்மன் என ஆங்கிலேயே அதிகாரியை சம்ஹாரம் செய்ய குதிரையில் பாய்ந்திறங்கும் இடத்திலும் காதைத் துளைத்துக் கொண்டு கபாலத்தில் பாய்கிறது.

கச்சிதமான படத்தொகுப்பு:

ஸ்ரீகர்பிரசாத், இந்தப் படம் ஒரு வரலாற்று ஆவணமில்லை. ஆயினும் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு மிகப்பெரும் துணையாகி இருக்கிறது படத்தொகுப்பு. மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். காட்சிக்கு காட்சி யாருக்கு முக்கியத்துவம் தருவதெனும் சிக்கல்?! அத்தனையும் தாண்டி ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் படத்தில் எங்கும் தொய்வில்லை. இரண்டாம் பாதி எதற்கு என்ற சலிப்பின்றி போரை நோக்கி நம்மை நகர்த்துவதிலும், நரசிம்ம ரெட்டியின் வீழ்ச்சியைப் பற்றி அறிய படம் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவதிலும் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது படத்தொகுப்பு.

அசத்தும் ஆடை வடிவமைப்பாளர் உத்தரா மேனன்...

மிகக் கச்சிதமான உடைத்தேர்வுகள். காலத்தை பின்னோக்கி நகர்த்தி நம்மை அந்த நாட்களுக்கு அழைத்துச் செல்வதில் உடைகள் மிகப்பெரும் பங்காற்றியிருக்கின்றன. சிரஞ்சீவி, நயன்தாரா, தமனா மட்டுமல்ல தாத்தா நாசர், குரு கோசாயி வெங்கண்ணாவுக்கான உடைகளில் கூட அத்தனை நுணுக்கம், அத்தனை துல்லியமான உளவியல் குறியீடுகள். பிரிட்டிஷ்காரர்களின் சித்திரை தலைக்குல்லாக்கள் அலங்காரத்துடன் அசத்தலாகவும் இருந்தன. படத்தில் பெரும்பாலும் வெண்பட்டு மேலாதிக்கம் செலுத்தியது போன்ற உணர்வு. ஆடை வடிவமைப்பாளாராக உத்தரா மேனன் இத்திரைப்படத்தில் மேலும் நம்பிக்கையூட்டுகிறார்.

டப்பிங்:

சிரஞ்சீவிக்கு டப்பிங் பேசி இருப்பது அரவிந்த் சுவாமியாக இருந்தால் (!)... சூப்பர்.. மனிதர் லயன் கிங்குக்குப் பிறகு ராஜாக்களுக்கு குரல் கொடுக்கத் தோதானவராகி விட்டாரே என்று பாராட்டத் தோன்றுகிறது.

மொத்தத்தில் சை ரா நரசிம்ம ரெட்டியை ஒருமுறை பார்க்கலாம்.

குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று தான்.

திரைக்குப் பின்னான நிஜம்:

படம் சுதந்திர வேட்கையை கட்டுப்பாடின்றி கட்டவிழ்த்து விட்டாலும் கூட நிஜத்தில் நடந்த கதை இது இல்லை என்கிறார்கள் வரலாற்றை நன்கறிந்தவர்கள். காலம் சென்ற பாளையக்காரரின் பேரனான ஒரு இளைஞர் தனது மானிய உரிமைக்காக வெள்ளைக்கார அரசிடம் மல்லுக்கட்டுகிறார். தனது உரிமைக்காக மட்டுமே குரல் கொடுத்தவரது கதையை பரச்சூரி சகோதரர்கள் சினிமா லாபத்திற்காகவும், சுவாரஸ்யத்திற்காகவும் மேலும் பல சித்தரிக்கப் பட்ட ஹீரோயிஸக் காட்சிகளை ஏற்றி வரலாற்றைத் திரித்து எழுதி உருவாக்கியதே இந்த தேசபக்திக் கதை என்று குற்றம் சாட்டுகிறார் நெக்கந்தி ஸ்ரீனிவாச ராவ் எனும் தெலுங்கு வரலாற்றாசிரியர். இதை படத்தின் இயக்குனரான சுரேந்தர் ரெட்டியும் துவக்கக் காட்சியில் ஸ்லைட் போட்டு ஒப்புக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஆக மொத்தத்தில் இது பயோ பிக் அல்ல. வரலாற்று ஆவணமும் அல்ல. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டெனில் நாம் எப்படித் தோற்கத் தொடங்கினோம் நம் எதிரிகளிடம் என்பதையும், நம்மைஜெயிக்க வைத்தது எது? என்பதையுமே!

ஒருவேளை அது மோடியின் ‘ஒரே தேசம்’ கொள்கையாகவும் இருக்கக் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com