சூர்யாவின் ‘சூரரைப் போற்று' விமர்சனம்: கனவுகள் விதைக்கும் பரவச அனுபவங்கள்!

பாக்கெட்ல 10 ரூபாய் கூட இல்லை, இவனால எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது...
சூர்யாவின் ‘சூரரைப் போற்று' விமர்சனம்: கனவுகள் விதைக்கும் பரவச அனுபவங்கள்!

கனவுகள் காண்பது எளிது, அதை நிறைவேற்றிக் காட்டுவது பல சவால்களைக் கொண்டது. அதிலும் மதுரை சோழவந்தானில் வசிக்கும் கதாநாயகன், விமான நிறுவனம் ஆரம்பிக்க எண்ணுகிறான். அதிலும் ஏழைபாழைகள் மிகக் குறைந்த கட்டணத்தில் தன் விமானத்தில் பயணிக்க வேண்டும் என விருப்பம் கொள்கிறான். வானத்தைத் தொட்டுவிடுவது எளிது போலத் தோன்றும் இந்தக் கனவைக் கேட்கும்போது. ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத இந்தச் சவாலை எப்படிச் சாதித்துக் காட்டுகிறான் என்பதே சூரரைப் போற்று.

தன் தந்தை சாவின் விளிம்பில் இருந்தபோது ஊருக்குச் செல்ல பணியிலிருந்து அவசர அவசரமாக விமான நிலையத்துக்கு வருகிறார் சூர்யா. ஆனால் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் அவரால் டிக்கெட் வாங்க முடியவில்லை. டிக்கெட் விற்பனைப் பிரதிநிதியிடமே கதறுகிறார். பிறகு விமானத்துக்குக் காத்திருக்கும் பயணிகளிடம் மண்டியிட்டு உதவி கோருகிறார். இந்த ஒரு காட்சியில் விமானப் பயணம் என்பது எந்தளவுக்கு எல்லோருக்குமானதாக இல்லாததைச் சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர் சுதா கொங்கரா. தந்தை இறந்த பிறகுதான் சூர்யாவால் ஊருக்குச் செல்ல முடிகிறது. மகனுக்கு தந்தை எழுதிய கடிதத்தை அவன் முகத்தில் வீசுகிறார் தாய் ஊர்வசி. இருவரும் தாங்க முடியாத அழுகையுடன் கடிதத்தின் வரிகளைச் சொல்லும் காட்சியை எப்படி மறக்க முடியும்? சூர்யாவின் நடிப்புத்திறமை எந்தளவுக்குப் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதற்கு இந்த இரு காட்சிகள் (மட்டுமா) நல்ல உதாரணம். ஊர்வசியும் இந்தக் காட்சியில் நம்மை உருகவைத்து விடுகிறார். மாறா எப்படியாச்சும் ஜெயிச்சிடுடா என போனில் அவர் மன்றாடுவதை வெறும் சினிமா காட்சியாக மட்டும் பார்க்க முடியாது. 

ஒரு பெண் இயக்குநர் தமிழ்த் திரையுலகுக்கு ஏன் அவசியம் என்பதை இந்தப் படம் இன்னொரு முறை நிரூபித்துள்ளது. பெண் இயக்குநராலும் அனைத்து விதமான ரசிகர்களாலும் விரும்பும் வெகுஜனப் படத்தை அளிக்க முடியும் என்பது அழுத்தமாக நிரூபணம் ஆகியுள்ளது. இன்னொன்று, கதாநாயகி அபர்ணா முரளியின் பொம்மி கதாபாத்திரம் மிகக் கண்ணியமாகவும் சொந்தக் காலில் நின்று சாதிப்பதாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி சும்மா ஏதோ ஒரு கடையை/நிறுவனத்தை நடத்துகிறார் என வசனத்தில் சொல்லிக்கொண்டு போகாமல், அவருடைய தொழிற் வளர்ச்சிக்கும் கதையின் ஓரத்தில் ஓர் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக சூர்யாவின் உதவி எதுவும் செய்வதில்லை என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று. பதிலாக, தோல்விக்கு மேல் தோல்விகளைச் சந்திக்கும் சூர்யா, ஒரு கட்டத்தில் தொழிலில் முன்னேறிக்கொண்டிருக்கும் மனைவியிடம் கடன் கேட்கும் அழகான காட்சி ஒன்றும் படத்தில் உண்டு. வழக்கமான கதாநாயகிகள் போல் இல்லாமல் அபர்ணா முரளியின் தனிவித நடிப்பும், அவருடைய உற்சாகங்களும் படத்துக்குத் தேவையான புதிய காற்றை அளிக்கின்றன.

எதற்காக சூர்யாவுக்குக் குறைந்த டிக்கெட் விலையில் விமானத்தை இயக்க வேண்டும் என்கிற கனவு ஏற்பட்டது, அதைச் செயல்படுத்த அவர் எப்படியெல்லாம் போராடுகிறார், விமானத்துறையில் இயங்குபவர்களுடனான சூர்யாவின் உரையாடல்கள், சந்திப்புகள், மோதல்கள், ஒவ்வொரு முறை ஒரு படி மேலேறும்போது நாலடி சறுக்கும் தருணங்கள் எனப் படத்தின் மையக்கதைக்கு ஏற்றாற்போல காட்சிகளை அமைத்துள்ளார் சுதா கொங்கரா. ஒரு படத்தின் திரைக்கதைக்கு எப்படி மெனக்கெட வேண்டும் என்பதை படமாக எடுத்துக் காண்பித்துள்ளார். 

உறியடி விஜயகுமாரின் வசனங்கள் படத்துக்கு அதிக பலத்தைச் சேர்த்துள்ளது. சூர்யாவின் போராட்டங்களையும் அவருடைய ஆக்ரோஷங்களையும் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் வசனங்கள் சரியாக வெளிப்படுத்தியுள்ளன. விமான நிறுவனம் வைத்துக்கொண்டு அத்துறையில் சாம்ராஜ்ஜியம் நடத்தும் வில்லன், இரவெல்லாம் தூங்காமல் அல்லாடுகிறார். அறைக்கு வெளியே வந்து பார்க்கும்போது சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறார் பாதுகாவலர். பாக்கெட்ல 10 ரூபாய் கூட இல்லை, இவனால எப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது என அவனைப் பார்த்து வில்லன் கடுப்பாகும் இந்த ஒரு வசனமே, முக்கியமான காட்சிகளில் இதர வசனங்கள் எந்தளவுக்குத் தீவிரத்துடன் இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. 

சூர்யாவின் நடிப்புக்குத் தேசிய விருது அளிப்பதுதான் சரியான அங்கீகாரமாக இருக்கும். நடிப்பில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வயதிலும் இருக்கவேண்டிய தோற்றத்துக்காகவும் அதிகமாக மெனக்கெட்டுள்ளார் சூர்யா (இது அவருக்குப் புதிதா என்ன?). படம் முழுக்க ஒரே தோற்றத்துடன் இல்லாமல் வயதுக்கேற்ற, சூழலுக்கேற்ற தோற்றங்கள் படத்தைத் தரமான பிரதியாக மாற்றுகிறது. கருணாஸ், காளி வெங்கட், சூர்யாவின் நண்பர்கள் என ஒரு படத்துக்குத் துணை கதாபாத்திரங்கள் எந்தளவுக்கு முக்கியம் என்பதும் அழகாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

பல உணர்வுபூர்வமான மற்றும் சாகசத் தருணங்களை கச்சிதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் நிகித் பொம்மி ரெட்டி. ஜி.வி. பிரகாஷ், இசையமைப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும் என்பதை உணரவைக்கும் இன்னொரு படமாக இது உள்ளது. 

ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று நூல், மிகவும் புகழ்பெற்றது. அதை அடிப்படையாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ள சுதா கொங்கரா, சினிமாவுக்கேற்ற சுதந்திரங்களை எடுத்துக்கொண்டுள்ளார். கதாநாயகனை அடியாட்களை வைத்து அழிக்க முடியாமல் திட்டங்கள், சூழ்ச்சிகளின் வழியாக மோதும் வில்லன். இதனால் படத்தில் சண்டைக்காட்சிகளோ, தனியான நகைச்சுவைக் காட்சிகளோ, அயர்ச்சியைப் போக்கவைக்கக்கூடிய பாடல்களோ இல்லை. யோசனைகளைக் கொண்டே கதாநாயகனும் வில்லனும் படத்தில் மோதிக்கொள்கிறார்கள். விமானத்தின் பிஸினஸ் வகுப்பில் வில்லனைச் சந்திக்கும் சூர்யா, தன் யோசனைகளைச் சொல்லி அங்கீகாரம் கேட்கும் காட்சியும் உடுப்பி ஹோட்டலில் வைத்து நிலைமையை, நிலவரத்தை விளக்கும் காட்சி என அடுத்தடுத்து நிகழும் இக்காட்சிகள் மிக அற்புதமாக வந்துள்ளன. கனவுகள் எப்படியெல்லாம் கட்டமைக்கப்படுகின்றன, தடைகள் வந்தாலும் அதன் போராட்டங்கள் எப்படி அமையும் என்பதை இதைவிடவும் தெளிவாக விளக்கியிருக்க முடியாது. 

குறைகள் இல்லாமல் எந்த ஒரு படமும் இல்லை. எவை எந்தளவுக்கு உறுத்தல்களாக அமைந்து படம் பார்க்கும் அனுபவத்தைக் கெடுக்கின்றன என்பதில் தான் ஒரு படத்தின் வெற்றி, தோல்விகள் அமைகின்றன. இதில் அப்படிப்பட்ட ஓட்டைகள் இல்லை. அப்துல் கலாமைப் பார்த்து தனக்கான ஒரு தடையை சூர்யா எதிர்கொள்ளும் காட்சியில் இயல்புத்தன்மை இல்லை. வில்லன் அரசுத்துறையில் உள்ள ஒரே ஒரு அதிகாரியை கொண்டுதான் சூர்யாவைப் பழிவாங்குகிறார். அரசியல்வாதிகளோ பெரிய அளவிலான அரசு இயந்திரமோ வில்லனுக்கு உதவுவது போன்ற காட்சிகள் இல்லை. கதாநாயகனின் தோல்விகளையும் எதிர்கொள்ளும் தடைகளையும் படம் முழுக்கக் காண்பித்த இயக்குநர், சூர்யாவின் வெற்றிகளுக்கு இன்னும் சில காட்சிகள் வைத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. சூர்யாவுக்கும் அவருடைய நண்பர்களுக்கிடையேயான நட்புகளும் அவர்களுடைய தியாகங்களும் கூட இன்னும் விரிவாகக் காண்பிக்கப்பட்டிருக்கலாம். 

படத்தில் பல காட்சிகளும் வசனங்களும் புதுமையாக உள்ளதால் படம் பார்க்கும் அனுபவமே பல இடங்களில் பரவச அனுபவமாக உள்ளது. திரையரங்கில் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்கிற ஏக்கம் படம் பார்க்கும்போது தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மேலும் கனவுகளுடன் எதிர்காலத்தைத் திட்டமிட்டிருக்கும் பலருக்கும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும். அந்தக் கனவை வெல்ல ஒவ்வொரு படியாக ஏறி கடைசியில் நினைத்ததை அடைந்து உச்சியைத் தொடும் காட்சியில் அது சூர்யாவின் வெற்றியாக மட்டும் பார்க்க முடிவதில்லை. நம்மில் ஒருவர் வென்ற தருணமாகவே அது உணரப்படும். இயக்குநர் சுதா கொங்கரா, ஒரே படத்தில் ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்திருக்கிறார். எல்லாவிதத்திலும் இறுதிச்சுற்று படத்தை விடவும் பல மடங்கு மேல். அவருடைய ஒவ்வொரு படமும் இதே அளவிலான தரத்தில் இருந்து, சினிமா ரசனையில் ரசிகர்களை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். மேலும் ஒவ்வொரு முறை சுதா கொங்கரா ஜெயிக்கும்போதும் திரைத்துறையில் பல பெண் இயக்குநர்களுக்கு அது பெரிய ஊக்கமாக அமையும். எப்படியாவது தொடர்ந்து ஜெயித்துவிடுங்கள் சுதா கொங்கரா...!

இதுபோன்ற ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் ரசிகனை உலுக்கியெடுக்க வேண்டும், படம் பார்த்த சில நாள்களுக்கு இதைத் தவிர வேறு எந்த எண்ணமும் ஏற்படக் கூடாது, பல கனவுகளை விதைக்க வேண்டும், எந்தக் கனவையும் சாதித்துக்காட்ட முடியும் என எதிர்காலத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்... இவை அத்தனையையும் சூரரைப் போன்று கச்சிதமாகச் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com