போலீஸ் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிரபு தேவாவின் 'பொன் மாணிக்கவேல்'? - திரைப்பட விமர்சனம்

பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் திரைப்பட விமர்சனம் 
போலீஸ் படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிரபு தேவாவின் 'பொன் மாணிக்கவேல்'? -  திரைப்பட விமர்சனம்
Published on
Updated on
2 min read

முகில் செல்லப்பா இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பொன் மாணிக்கவேல்'. 

‌வித்தியாசமான முறையில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கை விசாரிக்க காவல் துறையினர் திணறுகின்றனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கை விசாரிக்க திறமையான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பொன் மாணிக்கவேலின் உதவியை நாடுகின்றனர்.  

பொன் மாணிக்கவேல் குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? அவர் ஏன் காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் பழைய பாணியில் பதில் சொல்லியிருக்கிறது படம். 
பொன் மாணிக்கவேல் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக பிரபு தேவா. தெனாவாட்டான உடல் மொழியில் எதற்கும் பெரிதும் அலட்டிக்கொள்ளாத உடல் மொழியை பெரும்பாலான காட்சிகளை கையாண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நடிப்பில் போக்கிரி விஜய்யை நியாபகப்படுத்துகிறார்.

அவரது மனைவியாக நிவேதா பெத்துராஜ், வில்லன் சுரேஷ் மேனன் உள்ளிட்டோர் கமர்ஷியல் படங்குளுக்கே உண்டான டெம்ப்ளேட்டில் வந்து போகின்றனர். 

இயக்குநர் மகேந்திரன் நன்றாக நடித்திருந்தாலும் காட்சிகள் புதிதாக இல்லாததால் அவரது நடிப்பு படத்துக்கு பெரிதும் கைகொடுக்கவில்லை. திரைக்கதை நிறைய இடங்களில் சாமி, போக்கிரி, தெறி உள்ளிட்ட படங்களை நியாபகப்படுத்தியது. இறுதிக் காட்சி மங்காத்தா படத்தை நியாபகப்படுத்தியது. இப்படி ஒரே படத்தில் பல படங்களின் சாயல்.

உதிரா பாடலை தவிர பிற பாடல்கள் பெரிதாக கவரவில்லை. பின்னணி இசையின் மூலம் படத்தை சுவாரஸியப்படுத்தியிருக்கிறார் டி.இமான். கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் சிறப்பம்சங்கள் எதுவும் இல்லை.  

கொலை வழக்கை விசாரிக்க துவங்கியதில் இருந்தே, பிரபு தேவா பெரிதாக ஆர்வம் இல்லாதவராகவே இருக்கிறார். உடன் இருக்கும் காவலர் கூட பிரபு தேவாவின் போக்கை பார்த்து கோவமடைகிறார். ஒருவேளை அவர்களை ஏமாற்றிவிட்டு வித்தியாசமான முறையில் கொலையாளிகளை பிடிப்பார் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 

இருப்பினும் ஒரு கட்டத்துக்கு மேல் படத்தை சுவாரசியமாகவே கொண்டு செல்கிறார் இயக்குநர் முகல் செல்லப்பா. வில்லன்கள் பற்றிய உண்மைகள் தெரிந்ததும் மீண்டும் படம் சுவாரசியமில்லாமல் செல்கிறது. 

நிவேதா பெத்துராஜிற்கும் பிரபு தேவாவுக்கும் இடையேயான காதல் காட்சிகளும் சலிப்பைதான் ஏற்படுத்துகின்றன. நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சிகளிலும் சிரிக்க முடியவில்லை. கமர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான். ஆனால் பிரபு தேவாவை மீண்டும் வேலைக்கு சேர்க்கும் காவல் துறையினருக்கு அவர் சிறையில் இருந்தது கூடவா தெரியாமல் இருக்கும்? இப்படி படத்தில் பல லாஜிக் மீறல்கள். 

படம் 4 வருடங்களுக்கு முன் வர வேண்டிய படம். ஆனால் படம் குறைந்தது 10 வருடங்களுக்கு முன் வர வேண்டிய படம் போன்ற உணர்வைத் தருகிறது. காவல்துறையினரை தெய்வங்களாக காட்டிய சாமி, சிங்கம் போன்ற படங்கள் வெளிவந்த காலம் வழக்கொழிந்து விட்டது. தற்போது காவல் துறையினர் குறித்து யதார்த்தமாக பதிவு செய்யும் விசாரணை, ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியாகும் காலக்கட்டத்தில் இருக்கிறோம்.  இந்த நேரத்தில் வெளியாகியிருக்கும் பொன் மாணிக்கவேல் காவல் துறை படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com