வெறுப்பின் தடம் 'குருதி' - திரை விமர்சனம்

தனக்கு நிகழாத வரை அனைத்தும் வேடிக்கை. நிகழ்ந்தபின் அவரவர் சாதி, மத அடையாளங்களில் ஒளிந்துகொள்கிறோம் என்பதை திரைக்கதையின் மூலம் சரியாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
வெறுப்பின் தடம் - குருதி - திரை விமர்சனம்
வெறுப்பின் தடம் - குருதி - திரை விமர்சனம்

கேரளத்தின் மலைக் கிராமம் ஒன்றில் ஆரம்பிக்கும் கதையில் நிலச் சரிவால் தன்னுடைய மனைவி , மகளை இழந்து நிற்கும் இஸ்லாமிய மதத்தைச்  சேர்ந்த இப்ராஹிமை போலவே  இந்துவான பிரேமனும் தன்னுடைய குடும்பத்தையும் இழக்கிறான். அதன் பிறகு  இருவரின் குடும்பத்திற்கும்  ஒரு நல்ல உறவு அமைகிறது. பிரேமனின் தங்கை சுமதி  இப்ராஹிமின் வீட்டையும் சேர்த்து கவனித்துக் கொள்கிறாள். அவனைத் திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாக தெரிவித்தும் அவன் தன் மனைவி மற்றும்  மகளின் நினைவில் இருப்பதாகவும் அதைவிட மதம் பெரிய தடை என்பதையும் எடுத்துச் சொல்கிறான். இந்நிலையில்  ஒரு இஸ்லாமியரை இந்து மதத்தை சேர்ந்த  இளைஞன் மதவெறியில் படுகொலை செய்கிறான் . அப்போது அவனை கைது செய்து வரும்வழியில் பழிவாங்கும் வெறியுடன் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த சிலர் காவல்துறையினரைத் தாக்கி அவனை கொல்ல முற்படும் போது அங்கிருந்து அந்தக் குற்றவாளியுடன்  தப்பிய துணை ஆய்வாளர் சத்தியன்  இப்ராஹிமின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிச் செல்கிறார். இப்ராஹிம் அவர்களைக்  காப்பாற்றுகிறானா? இல்லை கைவிடுகிறானா? என்பது மீதிக்கதை. சந்தர்ப்ப சூழ்நிலையால் உணவு கொண்டுவரும் போது சுமதியும் அந்த வீட்டில் சிக்கிக்கொள்கிறாள். இப்போது மூன்று இந்துக்கள் நான்கு  இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். அடையாளப்  பிரச்சனைகள் , இருபக்கமும் ஆழத்தில் இருக்கும் அடிப்படைவாத சிந்தனைகள்  யார் யாரை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை சர்வைவல் த்ரில்லர் வகையில்   படத்தை  உருவாக்கியிருக்கிறார்கள் .

படத்தின் நாயகன் இப்ராஹிம் (ரோஷன் மாத்யூவ்) தன்னுடைய  தேர்ந்த நடிப்பால் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிக்கொண்டு நிற்கிறார். சத்தியத்தை மீறாத ஒரு நேர்மையாளன் அடைகிற மனக் கொந்தளிப்புகளும், மீறிச் சென்றால்தான் என்ன?  என்கிற எண்ண ஓட்டத்தையும்  பாவனைகளால் அபாரமாக கடத்திச் செல்கிறார். இப்ராஹிமின் தந்தையான மூஸா காதர் ( மம்முகோயா) கதாபாத்திரத்தை கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். அசலான நடிப்பில் பேசப்படுகிற பல வசனங்கள் மனதில் நிற்கின்றன. முழுப்படமும் பேசியிருக்கிற விஷயத்தை  'மனிதனுக்கு எதிலாவது  வெறுப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்' என்கிற ஒரே வசனத்தில்  பேசிக் கடப்பதும், நுண்மையான மத ரீதியான பகடிகளும் சிரிக்க வைக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் 'எங்கப்பா ஒரு கிழட்டு நரி'  என இப்ராஹிம் சிரித்துக்கொண்டே பிரேமனிடம் சொல்வான். இறுதிக்காட்சியில்  நரியின் குணத்தை  மூஸா வெளிப்படுத்துவதும் நன்றாக இருந்தது. காவல்துறை துணை ஆய்வாளராக வரும் சத்யன் (முரளி கோபி) கம்பீரமான உடல்மொழியில் தீவிரமான வசனங்களை வெளிப்படுத்தும் காட்சிகள் அற்புதம். கரீம் ஆக வரும் (ஷைம் டாம் தாக்கோ) ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பிலும் சந்தேக விழிகளுடனும் கவர்கிறார். குற்றவாளியாக வரும் விஷ்ணு மற்றும் இப்ராஹிமின் தம்பி ரசூலும் துடிப்பாக நடித்திருக்கிறார்கள். பிரேமன் (மணிகண்டன் ஆச்சாரி), சுமதி (ஸ்ரீண்டா) தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில்  அசலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக சுமதி இரட்டைக்குழல் துப்பாக்கியை லயிக் (பிருத்விராஜ்) முன் நீட்டும்போது கண்களில் வெளிப்படுகிற பதற்றமும் குரோதமும் அபாரம். அட்டகாசமான நடிப்புத் திறன்களை வெளிப்படுத்தாமல் கண்களிலேயே பாதி படத்தை தாங்கி நிற்கிறார் பிருத்விராஜ். இவர்களை அழிக்கத்தான் இறைவன் என்னை தேர்ந்தெடுத்தான் என்கிறபோது  அந்தக்  கண்களில் வெளிப்படுகிற மாற்று மதத்தினரின் மேல் எழும் வெறியும் குரோதமும் அச்சம் கொள்ள வைக்கிறது. மிரட்டலான வில்லனாக  இது அவருக்கு மிக முக்கியமான படம்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பலம். கிட்டத்தட்ட 90% காட்சிகள்  இருட்டில் நடந்தாலும் ஒரு கணமும் பார்வையை விலக்காத மிகச் சிறப்பான ஒளிப்பதிவை அபிநந்தன் ராமானுஜம் செய்திருக்கிறார். முக்கியமாக இரவில் மஞ்சள் நிற அறை விளக்கின்  ஒளியில் மிளிரும்  வீடு, அதிகாலை தொழுகைக்கு மசூதி செல்லும் காட்சி என படம் முழுக்க அத்தனை அழகான காட்சிகளை வைத்திருக்கிறார். அந்தக் காட்சிகளுக்கும், திருப்புமுனைகளுக்கும் பின்னணி இசையில்  உயிர் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜோய். கொலைக் குற்றவாளியை இப்ராஹிம் விடுவிக்கும்போது ஜன்னலை உடைக்கிற பிருத்விராஜின் ஆக்ரோஷத்திலும் காதலனுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டியபடி 'உனக்கு இருப்பதைப் போலத்தான் எனக்கும்  என் மதத்தின் மீது பற்றும் விசுவாசமும் இருக்கிறது' என்கிற வசனத்திலும் வெளிப்படுகிற பின்னணி  இசை பார்வையாளனை இருக்கை முனைக்கு வரச் செய்பவை.

தேடப்படுகிற ஆள் இப்ராஹிம் வீட்டில்தான் இருக்கிறான் என அங்கு லயிக் வருவதும், மதம் பார்க்காமல் அன்பை மட்டுமே செலுத்துகிற சுமதி திடீரென மாறி நிற்கும் உளவியல் காரணங்கள் என சில இடங்களில் லாஜிக் மீறல்களும் கொலைக்காக ஆயுதங்களை முழுக்கவும் இஸ்லாமியர்களே கையாள்வது போல  பல இடங்களில் திரைக்கதை  சமநிலையைக் கடந்து  ஒரு தரப்பாகச் செல்கிறதோ எனத் தோன்றுவது படத்தின் பலவீனங்களில் ஒன்று.

இவற்றை எல்லாம் தாண்டி இரண்டு காரணங்களுக்காக படம் முக்கியத்துவம்  பெறுகிறது. ஒன்று அடிப்படைவாத சிந்தனைகளைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்து 'அன்பு செய்வோம்' என்கிற கருத்தைப் போதிக்கும் படமாக இல்லாமல் இறுதிக்காட்சியில்  யதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இரண்டு, மதம் சார்ந்த சர்ச்சைக் கருத்துகளை  தவிர்க்கும் காலத்தில் வெளிப்படையாகவே அதைப் பேசியிருக்கிறார்கள். தனக்கு நிகழாத வரை அனைத்தும் வேடிக்கை. நிகழ்ந்த பின் அவரவர் சாதி, மத அடையாளங்களில் ஒளிந்துகொள்கிறோம் என்பதை திரைக்கதையின் மூலம் சரியாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர் மனு வாரியாருக்கு மலையாளத்தில் இது முதல் படம்.  முடிந்தவரை தன்னுடைய பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.  அனிஷ் பால்யல் எழுதிய அத்தனை வசனங்களும் கூர்மையாக இருப்பதுடன் உரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. பிருத்விராஜ் தயாரித்த இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com