நம்பிக்கை தரும் ’கசட தபற’: திரைவிமரிசனம்

சிம்புதேவனின் கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற ஆகிய ஆறு கதைகள் சேர்ந்த கசட தபற ரசிகர்கள் தவற விடக்கூடாத அருமையான படைப்பு.
நம்பிக்கை தரும் ’கசட தபற’: திரைப்பார்வை
நம்பிக்கை தரும் ’கசட தபற’: திரைப்பார்வை

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ’கசட தபற’. 6 கதைகள், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தொழில்நுட்ப வல்லுநர்கள் என பெரிய பட்டாளத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படம் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தின் கதைக்குள் நுழைவதற்கு முன்பாக இயக்குநர் சிம்புதேவன் விவரித்துவிடும் இரண்டு விதிகள் (வாண்டேஜ் பாயிண்ட் கோட்பாடு மற்றும் வண்ணத்துப்பூச்சி விதி) படத்தின் தன்மையை நமக்கு முன்பே கடத்திவிடுவதால் கதையை உள்வாங்கிக் கொள்வதில் நமக்கு தடுமாற்றம் ஏற்படுவதில்லை.

வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, சம்பத், சாந்தனு, பிரியா பவானி சங்கர், சுந்தீப் கிஷன், சென்றாயன், ஹரீஷ் கல்யாண், விஜயலட்சுமி, சுப்பு பஞ்சு, சிவா, அரவிந்த் ஆகாஷ், ரெஜினா, யூகி சேது, பிருத்விராஜன், சாந்தினி, சிஜா ரோஸ் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ள இந்தத் திரைப்படத்தின் கதையை விவரிப்பது சற்றே சவாலான காரியம். 

எனினும் ஒவ்வொரு கதையும் கடத்தும் செய்தியும், அது உருவாக்கப்பட்டுள்ள விதமும் இயக்குநரை உயர்த்திப் பிடிக்கின்றன. காதலர்களாக வரும் பிரேம்ஜியும், ரெஜினாவும் முதல் கதையிலேயே நமது ஆர்வத்திற்கு தீணி போட்டு விடுகின்றனர். வழக்கமான பிரேம்ஜி இந்தத் திரைப்படத்தில் மாறுபட்டுள்ளார் என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.

இரண்டாவது கதையில் வரும் சாந்தனு கதாபாத்திரம் நாம் எதிர்பார்க்காதவண்ணம் அமைந்த நல்ல வடிவமைப்பு. ஒரு மருந்து கம்பெனி அதனைச் சுற்றி நடக்கும் இந்தக் கதைகள் என தீவிரம் குறையாமல் இறுதி வரை பயணித்துள்ளது பாராட்டத்தக்கது.

குழந்தையின் அம்மாவாக வரும் விஜயலட்சுமியும், மருந்து கம்பெனி முகவரான வெங்கட் பிரபுவின் நடிப்பும் அபாரம். மனதில் பதியும் வண்ணம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது இந்தக் கதாபாத்திரங்கள். பணியில் நிலவும் சாதிய அழுத்தம், பணத்திற்காக நடக்கும் முகமூடி வேசங்கள், எளிய மனிதர்கள் மீது நடக்கும் வியாபார சுரண்டல்கள், மறைந்திருந்து தாக்கும் அதிகாரப் போட்டிகள், முதலாளிகளால் பழியாக்கப்படும் தொழிலாளர்கள் என கசட தபற பேசும் அரசியல் அற்புதமாக கைகொடுத்துள்ளது.

ஒருவரது செயல் மற்றொருவரின் வாழ்வில் செலுத்தும் தாக்கம் எனும் ஒருவரியில் சொல்லி முடித்தாலும் அதனை திரையில் கடத்த எடுத்துக் கொண்ட பணியில் சிம்புதேவன் வெற்றி பெற்றுள்ளார்.

“போ உன்னை நம்பியா இந்த ஹாஸ்பிட்டல் வச்சுருக்கேன். போய் புள்ளைய பாத்துக்க, தப்பு பண்றவன் மாட்டிக்கிட்டா தப்பு பண்ணாமலே மாட்ட வேண்டிய பலியாடு தப்பிச்சிடும்” என ஆங்காங்கே தெறிக்கும் வசனங்கள் அருமை.

அதேசமயம் 6 கதைகளைக் கொண்ட படம் என்பதால் குறுகிய காலத்திற்குள் அனைத்தையும் சொல்லியாக வேண்டும் என்கிற சிக்கலுக்குள் இயக்குநர் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. காவல்துறை அதிகாரியாக வரும் சுந்தீப் கிஷன் கதையில் அவர் பின்பற்றும் தத்துவமும், அதிலிருந்து அவர் முரண்படும் இடமும் அழுத்தமாகப் பதியவில்லை.

அதீத கதாபாத்திரங்கள் இருப்பதால் விட்ட இடம், தொடங்கும் புள்ளி, கதாபாத்திரங்கள் நிலை என சற்று குழப்பம் ஏற்படுகிறது. இறுதிக் கதைக்கான தயாரிப்பாக முதல் 5 கதைகளும் இருப்பதால் இது கடந்து போகக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

பின்னணி இசைகள் கைகொடுத்திருக்கின்றன. ஒளிப்பதிவு காட்சியமைப்பையும், கதைக் களத்தையும் மிகச்சரியாகக் கடத்தியிருக்கிறது.
மொத்தத்தில் சிம்புதேவனின் கவசம், சதியாடல், தப்பாட்டம், பந்தயம், அறம்பற்ற, அக்கற ஆகிய ஆறு கதைகள் சேர்ந்த கசட தபற ரசிகர்கள் தவற விடக்கூடாத அருமையான படைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com