எப்படி இருக்கிறது அரண்மனை 3? : திரைப்பட விமரிசனம்

ஆர்யா, சுந்தர்.சி நடித்துள்ள அரண்மனை 3 படத்தின் திரைப்பட விமரிசனம்
எப்படி இருக்கிறது அரண்மனை 3? : திரைப்பட விமரிசனம்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், நளினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அரண்மனை 3. சுந்தர்.சி-யின் கடைசி படமான ஆக்‌ஷன் படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அரண்மனை என்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார். 

அதே டெய்லர் அதே வாடகை என்பது போல 3வது படத்திலும் பேயின் பிடியில் இருக்கும் அரண்மனையை கொஞ்சம் மூளை!, கொஞ்சம் கடவுள் ஆகியவற்றின் உதவியுடன் சுந்தர்.சி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே அரண்மனை படத்தின் கதை. 

முதல் காட்சியிலேயே பேயின் அறிமுகத்துடன் துவங்குகிறது படம். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல அதே பாணியில் காமெடி மற்றும் திகில் கலந்துசொல்லியிருக்கிறார் சுந்தர்.சி. வழக்கமாக அவருக்கு கைகொடுக்கும் நகைச்சுவை கூட இந்தப் படத்தில் கைவிட்டது தான் பெரும் சோகம். படத்தில் விவேக், யோகி பாபு, மனோபாலா, செல் முருகன், நளினி, மைனா நந்தினி என அத்தனை பேரும் நம்மை சிரிக்க வைக்க எவ்வளவோ முயன்றும் தோற்றுப்போகின்றனர். 

குறிப்பாக கடந்த வாரம் வெளியான டாக்டர் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ஒரே மாதிரியான வசன உச்சரிப்பு, முக பாவனைகளைத் தான் காட்டியிருக்கிறார் யோகி பாபு. ஆனால் டாக்டர் படத்தில் நகைச்சுவையாக இருந்த அவரது நடிப்பு இந்தப் படத்தில் எரிச்சலூட்டுவது நகைச்சுவைக்கான சூழ்நிலை புதிதாக இல்லை என்பதற்கு ஒரு உதாரணம். 

நம்மை பயமுறுத்த வைக்கப்பட்ட காட்சிகளும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்ட காட்சிகள் தான் என்பதால் சலிப்பை அடையச் செய்கின்றன. வழக்கமாக ஜனரஞ்சகமான படங்களில் கதாநாயகிகளுக்கு என்ன வேலையோ அதே தான் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கும். முதல் பாதியில் சில காதல் காட்சிகள், பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்துவிட்டு காணாமல் போகிறார். மீண்டும் இறுதிக்காட்சிக்கு முன் வந்து சேர்ந்துகொள்கிறார். அதற்கு நேர்மாறாக ராசி கண்ணாவுக்கு நடிப்பதற்கு சில காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இவர்களை விட ஆண்ட்ரியாவே நன்றாக நடித்திருக்கிறார். 

அரண்மனை 3 படம் குறித்து பேசும் பேட்டிகளில் நான் கதாநாயகிகளை கிளாமராக காட்டுவேனே தவிர, மிக மோசமாக காட்டமாட்டேன் என சில உதாரணங்களைச் சொன்னார். மேலும் எனக்கும் இரண்டு மகள்கள் இருப்பதால் பொறுப்புடன் நடந்துகொள்வதாக பெருமையாக பேசினார். ஆனால் அவர் மோசமாக காட்டமாட்டேன் என என்ன உதாரணங்களைச் சொன்னாரோ அதைத் தான் காட்சியாக வைத்திருக்கிறார். 

அரண்மனை படங்களுக்கு என வழக்கமான டெம்ப்ளேட்டில் தான் இந்தப் படமும் அமைந்துள்ளது. ஆனால் காட்சிகள் கூட புதுமையாக இல்லை. உதராணமாக சுந்தர்.சியின் நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் பிரபு தேவாவும் மணிவண்ணனும் குரங்கு பொம்மையில் வைரம் கடத்துவர். அது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய வீட்டில் சிக்கிக்கொள்ளும். அதனை எடுக்க அவர்களின் முயற்சியை நகைச்சுவையாக அந்தப் படத்தில் சொல்லியிருப்பார். அதே போன்ற கதையைத் தான் யோகி பாபுவின் பின் கதையாக காட்டியிருக்கிறார். 

கதை நடக்கும் இடம் கூட விளக்கப்படவில்லை. அதனால் எந்த இடத்தில் கதை நகர்கிறது என்பது நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தப் படத்துக்கு இசை சத்யா. பாடல்கள் பெரிதாக ரசிக்கும்படி இல்லையெனினும் ஒரு பேய் படத்துக்கான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். பின்னணி இசையை விட ஒலி வடிவமைப்பே பெரிதும் கைகொடுத்திருக்கிறது. யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் புதுமையாக எதுவும் இல்லையெனினும், மோசமாக இல்லை. 

சாக்‌ஷி அகர்வாலும் சுந்தர்.சி-யும் விவாகரத்து செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சாக்ஷி அகர்வாலின் குடும்பத்தினர் சுந்தர்.சியுடன் சகஜமாக பேசிக்கொள்வதும் அரண்மனைக்குள் அனுமதிப்பதும் நம்பும்படியாக இல்லை. அதே பழிவாங்கல் கதை தான். அதற்கான காரணத்தையாவது சற்று புதுமையாக யோசித்திருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். படம் துவங்கிய சில மணிநேரங்களிலேயே முன் கதை என்ன என்பதை எளிதாக கணிக்க முடிவதும் படத்துடன் ஒன்ற முடியாததற்கு காரணம். 

பேய் படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதற்காக சுந்தர்.சி தனது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி பயன்படுத்தியிருக்கிறார்.  அதுவும் இறுதிக்காட்சிகளில் சாதாரண காட்சிகளை விட கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால் வெறுப்பு தான் ஏற்படுகிறது. மொத்தத்தில் அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பிடித்தவர்களுக்கு கூட இந்தப் படம் பிடிக்குமா என்பது சந்தேகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com