உடன்பிறப்பே! மினிமம் கியாரண்டி சசிகுமார் - ஜோதிகா படம் - திரை விமர்சனம்

வழக்கமான சசிகுமார் படம், வழக்கம்போல இதையும் குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.  சசிகுமார், ஜோதிகா ரசிகர்கள்  இன்னொரு முறையும் பார்க்கலாம்.
உடன்பிறப்பே! மினிமம் கியாரண்டி சசிகுமார் - ஜோதிகா படம் - திரை விமர்சனம்

தமிழ்த் திரையுலகில் என்றென்றும் உயிர்த்திருக்கும் முடிச்சுகளுடன் கூடிய அண்ணன் - தங்கை பாசப் பிணைப்புச் சித்திரம்தான் உடன்பிறப்பே!

ஒரு கிராமத்தில் செல்வாக்குள்ள குடும்பத்தின் அண்ணன் - தங்கை வைரவனும் மாதங்கியும், அச்சு அசலாக சசிகுமாரும் ஜோதிகாவும். அண்ணனுக்குக் குழந்தை இல்லை என்பதால், அவர்களுக்குப் பிறக்கும் வரை  தங்களுக்கும் பிள்ளைப் பேற்றைத் தள்ளிப்போடும் தங்கை மாதங்கி.  வீட்டோடு மாப்பிள்ளையாக மாதங்கி கணவர் பள்ளி  வாத்தியார் (சமுத்திரக்கனி). ரொம்ப நேர்மை, எல்லாம் சட்டப்படி இருக்க வேண்டும் என நினைக்கும் நபர்.

குழந்தைகள் பிறக்கக் கூட்டுக் குடும்பமாக அனைவரும். மாமாவின் மீது பாசத்தைக் கொட்டி மாமாவைப் போலவே தானும் ஆக வேண்டும் என்று நினைக்கிற சிறுவன் மாதங்கியின் மகன்,  துரதிருஷ்டவசமான ஒரு சம்பவத்தில் இறந்துவிட அண்ணன் - தங்கை குடும்பங்கள் பிரிந்துவிடுகின்றன.

எப்படியும் ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என ஊரே காத்துக் கிடக்க,  இடையே தண்ணீரைக் காசாக்க ஆழ்துளைக் கிணறு தோண்ட வரும் கலையரசன். மாதங்கியின் மகள், வைரவன் மகன் இவர்களின் திருமணப் பேச்சு, திருமணத்தையொட்டி நடைபெறும் கிராமத்து நடைமுறைகள்.

வழக்கமான முடிச்சுகள்தான், கொஞ்சம் கிரைம் கலந்துகட்டி மாற்றி முடிந்திருக்கிறார்கள். யார் யாரைக் கொல்கிறார்கள், யாரைப் பழிவாங்குகிறார்கள் என்றபடியாகச் சென்று படம் முடியும்போது வழக்கம்போல இரு குடும்பங்களும் இணைவதாக முடிகிறது. ஊரே திரண்டு வாழ்த்துகிறது.

நிறைய நேரங்களில் கிழக்குச் சீமையிலே ராதிகாவின் நினைவு வந்தாலும் ஜோதிகாவின் தனித்துவம் நன்றாகத் தெரிகிறது. பல நேரங்களில் கண்கள் மிகவும் கைகொடுக்கின்றன அவருக்கு. தொடக்கக் காட்சிகளில்தான் இறுக்கமாக இருப்பதாக அவரைக் காட்டும் முயற்சியில் கான்கிரீட்டடாக அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

பொதுவாக இதுமாதிரி கதைகளில் தங்கையின் பாத்திரம் எப்போதும் தூக்கலாக இருக்கும். ஆனால், இங்கே அண்ணனுக்குத்தான் பெரிய பங்கு. படத்திலும் அப்படியே. இது மாதிரியான பாத்திரங்கள்தான்   எப்போதுமே சசிகுமாருக்கு சர்வ சாதாரணமாச்சே, போட்டுத் தாக்குகிறார். வசனங்களும் சசிகுமார் பாணியில்.

படத்தில் அண்ணனும் தங்கையும் சந்தித்துக் கொள்கிற இடங்கள் மிகவும் குறைவு. இரண்டு தேர்ந்த நடிகர்கள். பழுதில்லாமல் கையாண்டிருக்கிறார்கள்.

குழந்தை இல்லை என்பதற்காக ஊரே திரண்டு வீட்டுக்கு வந்து இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளுமாறு வைரவனை வற்புறுத்தும்போது, அவர் சொல்கிற தீர்வும் காரணமும் குறிப்பிடத் தக்க இடம்.

வைரவனுக்காகச் செய்யும் மாதங்கியின் மிகப் பெரிய தியாகம், கடைசி வரைக்கும் கதையில் வரும் யாருக்கும் வெளிப்படுத்தப்படுவதில்லை, பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களைத் தவிர. இயக்குநர் இதைத்  துணிந்து செய்திருக்கிறார். பாராட்டுகள்.

இந்தப் படத்தில் உண்மையான சப்போர்ட்டிங் ஆக்டர் சூரி. குறையில்லாமல் செய்திருக்கிறார். காவல் நிலையத்தில் தன்னைத் தாக்கிய ஆய்வாளரிடம் பேசும் வசனத்தில் நிற்கிறார்.

சசிகுமாரின் மனைவியாக, துணிந்து அம்மாவாகவும், வரும் சிஜா ரோஸுக்கு இன்னமும் நிறைய வாய்ப்புகள்  வர வேண்டும். திறமையான நடிகை.

ஜோதிகாவின் மகளாக வரும் நிவேதிதா சதீஷின் கண்கள் பேசுகின்றன.  அடுத்தடுத்த படங்களில் நாயகியாகப் பார்க்க வேண்டும், இல்லாவிட்டால் லட்சணமான, லட்சியத் தங்கையாக, மகளாகவே மாற்றிவிடுவார்கள். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.  சசிகுமாரின் மகனாக வரும் புதுமுகம் சித்தார்த்தும் ஓகே.

தஞ்சாவூர் - புதுக்கோட்டை மாவட்டப் பக்கம் கதைக் களம்  என்பதால்  வெக்கையும் பசுமையும் கேமராவில் கலந்துகட்டி கண்ணைக் கவர  வருகின்றன. பிரமாண்டமாகத்தான் இருக்கிறது பார்ப்பதற்கு. அதற்காக டாப் ஆங்கிளில் எப்போதாவது காட்டலாம், எப்போது பார்த்தாலும்  காட்டிக் கொண்டிருந்தால்... என்ன வேல்ராஜ் சார்?

அண்ணன் - தங்கை பாசப் படத்தில் இரண்டு பாடல்கள் மனதில் நிற்கிற மாதிரி போட்டிருக்கலாம் இசையமைப்பாளர் இமான். கறுப்பு - வெள்ளைப் படங்கள் காலத்துப் பாசப் பாடல்கள் எல்லாம் இன்னமும் சக்கைப் போடு போடுகின்றன.

இடைவேளை வரை படம் கொஞ்சம் நீண்டு செல்வதாக இருக்கிறது. தொடக்கத்தில் சில இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. ஏதோ ஒலிப்பதிவுக் கோளாறாக இருக்கும்போல.

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அடிக்கடி கிழக்குச் சீமையிலே  நினைவுக்கு வந்துகொண்டிருந்த நிலையில் திடீரென திரிஷ்யமும் சேர்ந்துகொள்கிறது. ஆனால், இயக்குநர் இரா. சரவணனுக்குப் பாதுகாப்பான களம், கதை எல்லாம்.

மற்றபடி குறைந்த செலவு, நிறைவான படம்.

வழக்கமான சசிகுமார் படம், வழக்கம்போல இதையும் குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.  சசிகுமார், ஜோதிகா ரசிகர்கள்  இன்னொரு முறையும் பார்க்கலாம்.

படத்தின் முடிவில் வழக்கமாக சசிகுமார் நடிக்கும் ஒவ்வொரு  படத்தையும் பார்க்கும்போதெல்லாம் தோன்றுவதுதான் இந்தப்  படத்தைப் பார்த்ததும்கூடத் தோன்றியது - எத்தனை திறமையான இயக்குநர், இப்படி வீணாகிக் கொண்டிருக்கிறாரே, இன்னொரு  சுப்பிரமணியபுரத்தை வேறு யாராலும் தர முடியுமா, அல்லது இவரே நினைத்தாலும்கூட தர முடியுமா? விரைவில் இயக்க வாருங்கள் சசி, இயக்குநராக வாருங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com