விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' - படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' - படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

விக்ரம் பிரபு நடித்துள்ள டாணாக்காரன் பட விமர்சனம் 
Published on

பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் 'டாணாக்காரன்'. 'ஜெய் பீம்' படத்தில் துணைக் காவல் ஆய்வாளராக மிரட்டிய தமிழ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது இந்த 'டாணாக்காரன்'. முதல் பாதி முழுக்க பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களை அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் முதல் பாதி முழுக்க ஆவண பட பாணியில் இருந்தாலும் சுவாரசியமாகவே இருக்கிறது. 

படம் முழுக்க பள்ளி மைதானமே பிரதானமாக இருக்கிறது. அதனை முடிந்தவரை நமக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். ஒரு காட்சி முடியும் முன்னே அது தொடர்புடைய அடுத்தக் காட்சியை இணைத்து படத்தை விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். ஜிப்ரானின் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும் பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். 

நாம் காவலர் பயிற்சி பள்ளி குறித்து கேள்விபட்டிருந்தாலும், அது எப்படி இயங்குகிறது என்பதை விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் முதல் பாதியை சுவாரசியப்படுதத்துகிறது. '150 வருஷமா சட்டைய கூட மாத்தாத டிபார்ட்மென்ட்டோட சட்டத்த மாத்தப்போறேனு வந்து நிக்குற' என படத்தின் வசனங்கள் நன்றாக இருந்தது. 

படத்தின் துவக்கத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட நடைமுறைகள் இன்னும் பழக்கத்தில் இருக்கின்றன என்பதை விரிவாக அனிமேஷன் படமாக காட்டப்படுகிறது. மேலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், லஞ்சம் என காவல் பயிற்சி மையத்தில் இருக்கும் பிரச்னைகள் என அனைத்தையும் திரைக்கதையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் தமிழ். அது பொதுவான சமூக பிரச்னைகள் என்பதால் எல்லோராலும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இருக்கிறது. 

விக்ரம் பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சரியாக கையாண்டிருக்கிறார். ஈஸ்வரமூர்த்தி என்ற காவல்துறை பயிற்சி அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார் லால். அவரது நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. இவர்கள் இருவருக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். 

விக்ரம் பிரபுவுக்கும், அஞ்சலி நாயருக்கும் இடையேயான காதல் காட்சிகள் செயற்கையாக இருப்பதால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.  படத்தின் பிரச்னை இரண்டாம் பாதிதான். அதுவரை காவலர் பயிற்சி பள்ளி அதில் நடக்கும் பிரச்னைகள் என சுவாரசியமாக நகரும் கதை, இரண்டாம் பாதிக்கு மேல் ஹீரோ - வில்லன் மோதல் என வழக்கமான பாணிக்கு மாறும்போது தொய்வடைகிறது.  

விக்ரம் பிரபு குறித்த பின் கதையும் அழுத்தமாக இல்லை. மேலும் பலம் வாய்ந்த லாலை விக்ரம் பிரபு எப்படி வீழ்த்துகிறார் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இருப்பினும் காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களை பதிவு செய்த வகையில் கவனம் ஈர்க்கிறது இந்த டாணாக்காரன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com