விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ் என 3 தலைமுறையினர் நடித்த 'ஓ மை டாக்' - திரை விமர்சனம்

விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ஓ மை டாக் திரைப்பட விமர்சனம்
விஜயகுமார், அருண் விஜய், ஆர்னவ் என 3 தலைமுறையினர் நடித்த 'ஓ மை டாக்' - திரை விமர்சனம்

நாய்களுக்கு உரிய பயிற்சி கொடுத்து அவற்றை சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள செய்கிறார் வினய். அவரிடம் இருக்கும் சைபீரியன் ஹஸ்கி வகை  குட்டி நாய் பார்வை மாற்றுத்திறனாளி என அறிந்து அதனைக் கொல்ல முடிவெடுக்கிறார். எதிர்பாராதவிதமாக அந்த குட்டி நாய் சிறுவன் அர்ஜுனுக்கு கிடைக்க, அது வினய்க்கே எப்படி வினையாக மாறுகிறது என்பதுதான் ஓ மை டாக் படத்தின் கதை. 

சமீபகாலமாக குழந்தைகளுக்கான படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகவில்லை. அந்த வகையில் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாக உருவாகியிருக்கிறது. 

வழக்கமாக அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்துவரும் அருண் விஜய், இந்தப் படத்தில் பொறுப்பான குடும்பத்தலைவனாக நடித்துள்ளார்.  உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 

அவரது மகன் அர்ஜுனாக அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் அறிமுகமாகியிருக்கிறார். நடிப்பில் சற்று தடுமாறினாலும் குழந்தைத்தனம் நிறைந்த வேடத்துக்கு அவர் சரியாக பொறுந்துகிறார். 

தாத்தாவாக விஜயகுமார், அப்பாவாக அருண் விஜய், பேரனாக ஆர்னவ் என மூன்று தலைமுறையினர் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் மூவரும் இணைந்து நடித்துள்ள படத்துக்கு கூடுதல் சுவாரசியத்தை அளித்துள்ளன. மகிமா நம்பியார், மனோபாலா, இயக்குநர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடங்களை சரியாக செய்திருக்கிறார்கள். . 

நடிகர் வினய்யை கார்ட்டூனில் வரும் வில்லன்கள் போல காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அவரது மோசமான தமிழ் உச்சரிப்பு அவற்றை மறக்கடித்துவிடுகிறது   

மாற்றுத்திறனாளிகளும் திறமையானவர்கள்தான் அவர்களாலும் சாதிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கிறது இந்தப் படம். அந்தக் கருத்தை இயக்குநர் சரோவ் சண்முகம் இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

நாய் குட்டியை பள்ளிக்கு எடுத்து செல்லும் ஆர்ணவ் நண்பர்களுடன் விளையாடுவது, நாய் குட்டியைக் கடத்துபவர்களிடமிருந்து தனது நண்பர்களின் உதவியுடன் மீட்பது என படத்தில் குழந்தைகள் கொண்டாடக் கூடிய காட்சிகள் நிறைய இருக்கின்றன. 

ஊட்டியின் அழகை தன் ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். நிவாஸ் கே. பிரசன்னா பின்னணி இசை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

போட்டிகளில் நாய் கலந்துகொண்டு வெற்றிபெறும் காட்சிகள் குழந்தைகள் ரசிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. நாய் மீது சிறுவன் வைத்திருக்கும் பாசம்தான் படத்தின் அடிப்படை என்பதால் அவர்களுக்கு இடையேயான அன்பை சொல்லும் வகையில் கூடுதலான காட்சிகளை வைத்திருக்கலாம். 

மொத்தத்தில் இந்தக் கோடையில் குழந்தைகள் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக வந்திருக்கிறது இந்த 'ஓ மை டாக்'.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com