எப்படி இருக்கிறது அருள்நிதியின் 'டைரி' - விமர்சனம்

அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள 'டைரி' பட திரை விமர்சனம் 
எப்படி இருக்கிறது அருள்நிதியின் 'டைரி' - விமர்சனம்
Published on
Updated on
1 min read

நடிகர் அருள்நிதியின் திரில்லர் படங்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ளது இந்த வாரம் வெளியான டைரி . ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின்  வெளியிட்டுள்ளார். 

திரில்லர் படங்களுக்கே உரிய சம்பிரதாயமான காட்சிகளுடன் டைரி படம் துவங்குகிறது. துவக்கத்தில் காட்சிகள் மற்றும் வசனங்கள் எல்லாமே செயற்கையாக இருக்கின்றன. ஆனால் என்ன நடந்தது, யார் செய்தது என்ற கேள்விகள் நம்மைப் படத்துடன் ஒன்றச் செய்கின்றன. அதற்கேற்ப ரான்  எத்தன் யோகனின் பின்னணி இசையும் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன. 

அருள்நிதியின் ஏரியா என்பதால் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார். நடிகை பவித்ரா, ஷாரா, சாம்ஸ் உள்ளிட்டோர் நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லாததால் இயக்குநர் சொன்ன வேலையை செய்துவிட்டு செல்கிறார்கள். இவர்களில் நக்கலைட்ஸ் தனம் மட்டும் கவனம் ஈர்க்கிறார். 

வழக்கம்போல ஷாரா, சாம்ஸ் இருவரும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். இன்னமும் இரட்டை அர்த்தத்தில் பேசினால் சிரிப்பார்கள் என  ஷாரா நம்பிக்கொண்டிருக்கிறார் போல?!

படத்தின் முக்கிய காட்சியில் சுமாரான சிஜியால் அந்தக் காட்சி தர வேண்டிய அழுத்தத்தை தரவில்லை. கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம். 

உதவி ஆய்வாளராக ஊட்டி காவல் நிலையத்தில் பணிக்கு சேரும்  அருள்நிதிக்கு, 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்ற வழக்கு ஒன்று தரப்படுகிறது. அதனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு தெரியவருகின்றன. இந்த ஒரு வரிக் கதை தரும் சுவாரசியம் மட்டுமே நாம் பொறுமையாகப் படம் பார்க்க உதவுகிறது.

பொதுவாக திரில்லர் படத்தில் பார்வையாளர்களுக்கு ஆங்காங்கே சில தகவல்களை சொல்லி, 'ஒருவேளை இப்படி நடந்திருக்குமோ?' என சிந்திப்பதற்கு இடம் கொடுப்பார்கள். ஆனால் நடப்பது வேறாக இருக்கும். இந்தப் படத்தில் அப்படி பெரிதாக இல்லாதது ஒரு குறை. 

முதல் பாதியில் பேருந்து, அதில் இருக்கும் பயணிகள் பற்றிய விவரங்களை நமக்கு காட்டுகிறார்கள். அந்த பேருந்தில் வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி, தன் மகனைப் பிரிந்து வேலைக்கு வெளியூர் செல்லும் அம்மா, சுற்றுலா வந்து திரும்பி செல்லும் குடும்பம், விடுதிக்கு செல்லும் பள்ளி மாணவி உள்ளிட்டோர் இருக்கிறார்கள். 

இரண்டு வெவ்வறு காலகட்டங்களை வித்தியாசப்படுத்திக் காட்ட பயணிகளின் உடைகள், அவர்களின் பொருட்கள் ஆகியவற்றில் உள்ள வேறுபாட்டைத் தெளிவாக இயக்குநர் இன்னாசி காட்டியிருப்பது சிறப்பு. 

முதல் பாதி முழுக்க பேருந்துக் காட்சிகளே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன. பேருந்துக் காட்சிகள், பயணிகள் குறித்த விவரங்கள் இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. மெதுவாக நகரும் முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி ஆங்காங்கே திருப்பங்களுடன் சுவாரசியமாக நகர்கிறது.

மொத்தத்தில் திரைக்கதையிலும், உருவாக்கத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழின் சிறந்த திரில்லர் படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் இந்த டைரி. இருப்பினும் திரில்லர் பட விரும்பிகள் முயற்சிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com