ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனனின் 'செல்ஃபி' எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனன் இணைந்து நடித்திருக்கும் செல்ஃபி பட திரை விமர்சனம்
ஜி.வி.பிரகாஷ் - கௌதம் மேனனின் 'செல்ஃபி' எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் மற்றும் டிஜிஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள 'செல்ஃபி' படத்தை மதிமாறன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். 

கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை என்ற  பெயரில் பெற்றோர்களிடம் கொள்ளையில் ஈடுபடுவதையும் அவர்களுக்கு இடைத்தரகர்களாகச் செயல்படும்  இளைஞர்கள் குறித்தும் அழுத்தமாகப்  பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். 

இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறன்  இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் பாதிப்பு இந்தப் படத்தில் நிறையவே இருந்தது. படத்தின் முதல் பாதி நான்-லீனியர் முறையில் நிகழ்காலம், பிளாஷ்பேக், வாய்ஸ் ஓவர் என சொல்லியிருப்பது  வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தை நினைவுபடுத்துகிறது. 

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இருவரும் தங்களின் நடிப்பு மூலம் படத்தை சுவாரசியப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கௌதம் மேனன் பார்வை மூலமே மிரட்டுகிறார். 

கல்வி நிறுவனங்கள் கல்வியைக் காரணம் காட்டி பெற்றோர்களிடம் எப்படிக்  கொள்ளையடிக்கின்றனர் என்பதை விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். இது அனைவரும் அறிந்தது என்றாலும், இடைத்தரகர்கள் மூலம் மாணவர்களின்  பெற்றோர்களை எப்படி ஏமாற்றுவார்கள் என்பதை விளக்கமாக  சொல்லியிருப்பது சிறப்பு. அந்த வகையில் இந்தக் களம் தமிழ் சினிமாவுக்கு புதிது. இதுதான் முதல் பாதியின் சுவாரசியத்துக்கு காரணமாக உள்ளது. 

பெற்றோர்கள் தங்கள் கனவுகளைப் பிள்ளைகள் மீது திணிப்பதன் விளைவுகளையும் இந்தப் படம் பேசியுள்ளது. முதலில் சொன்னதுபோல நான் -லீனியர் முறை மூலம் விறுவிறுப்பாக மாற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் எஸ்.இளையராஜா.  மேலும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பரபரப்பு சேர்த்துள்ளது. 

பிள்ளைகளின் படிப்புக்காக பெற்றோர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களை கல்வி நிறுவனங்கள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை கதைக்களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன். அவற்றை திரில்லர் பாணியில் சொல்லியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷின் அப்பாவான வாகை சந்திரசேகர் மற்றும் ஜி.வி. பிரகாஷின் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. தயாரிப்பாளர் டிஜி குணநிதி, தங்கதுரை, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களும் படத்துக்கு சுவாரசியம் அளித்துள்ளனர். வர்ஷா பொல்லம்மாவுக்கும்  ஜி.வி. பிரகாஷுக்குமான காதல் காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

ஆங்காங்கே சுவாரசியமான திருப்பங்கள் மூலம் விறுவிறுப்பு  சேர்த்திருந்தாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நண்பன் இறந்த பிறகும் ஜி.வி.பிரகாஷ் ஏன் மீண்டும் இடைத்தரகராகச் செயல்பட முடிவெடுக்கிறார் என்பது அழுத்தமாக இல்லை. மேலும் அவ்வளவு பெரிய கல்வி நிறுவனம் மாணவர் சேர்க்கைக்கு கௌதம் மேனனை மட்டுமே நம்புவார்களா என்பதும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.  குறிப்பாக  இறுதிக்காட்சி இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். 

இருப்பினும் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை அழுத்தமாக சொன்ன விதத்தில் முக்கியமான பதிவாக இருக்கிறது செல்ஃபி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com