'கேஜிஎஃப் 2' - திரை விமர்சனம்: பீஸ்ட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
By கார்த்திகேயன் எஸ் | Published On : 14th April 2022 08:49 AM | Last Updated : 14th April 2022 09:28 AM | அ+அ அ- |

முதல் பாகத்தில் கருடன் இறந்த இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. ஆனந்த் நாக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவருக்கு பதிலாக அவரது மகன் பிரகாஷ் ராஜ் மாளவிகாவிடம் கதை சொல்கிறார்.
முதல் பாகத்தில் அதீதமான நம்ப முடியாத காட்சிகள் இருக்கும். அந்த காட்சிகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இரண்டாம் பாகத்தில் கதையைத் தொடரும் பிரகாஷ் ராஜ் தனது அப்பா எழுதிய புத்தகத்தை புனைவாக இருக்கலாம் என்கிறார். அதன் காரணமாக இதெல்லாம் சாத்தியமா என்ற எந்த கேள்வி எழாமல் படத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம் என உலகத் தரமான படமாக வந்திருக்கிறது கேஜிஎஃப் 2. இதன் காரணமாக 2 மணி நேரம் 48 நிமிடங்கள் கேஜிஎஃப் என்ற அந்த உலகத்துக்கு சென்றுவந்த உணர்வை அளித்திருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.
ஒன் மேன் ஷோ என்பதற்கே படம் முழுக்க ராக்கியாக மிரட்டியிருக்கிறார் யஷ். அவர் வரும் காட்சிகளில் பின்னணி இசையின் காரணமாக திரையரங்குகள் தெறிக்கிறது. டூஃபான் பாடல் வரும் தருணமும், பாடல் படமாக்கப்பட்ட விதமும் வேற லெவல். சஞ்சய் தத், ரவீனா டண்டன் தங்களின் சிறப்பான நடிப்பின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர். சஞ்சய் தத்திற்கு இன்னும் கூடுதலான காட்சிகள் இருந்திருக்கலாம்.
இதையும் படிக்க | விஜய்யின் 'பீஸ்ட்' - திரை விமர்சனம் - நெல்சனுக்கு என்னாச்சு?
பிரகாஷ் ராஜ் கதை சொல்லும் விதம் படத்தை சுவாரசியப்படுத்துகிறது. பாடல்கள், பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு என படத்தை அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ரவி பஸ்ருர். கேஜிஎஃப் முதல் பாகத்தின் பின்னணி இசையையும் சரியான இடங்களில் பொறுத்தி படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகள் அதிகமுள்ள இந்தப் படத்தில் அன்பறிவின் சண்டை வடிவமைப்பு மிரட்டலாக இருக்கிறது. தொழில்நுட்பக் கலைஞர்களின் கடுமையான உழைப்பினால் இப்படி ஒரு பிரம்மாண்டமான படம் சாத்தியமாகியுள்ளது.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டும் நம்பாமல் தனது சுவாரசியமான திரைக்கதையின் மூலம் பிரம்மாண்டமான படத்தை கொடுத்திருக்கிறார் பிரஷாந்த் நீல். பான் இந்தியன் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது கேஜிஎஃப்.
ஒரு படத்துக்கு வலுவான திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதையும் உதாரணமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். வெறும் சண்டைக்காட்சிகள் மட்டுமல்லாமல், இரண்டாம் பாதியில் அரசியல் தலையீடுகள் அதனை யஷ் எதிர்கொள்ளும்விதம் என புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்.
படத்தில் அய்யோ அவரா? அவர் பயங்கரமானா ஆளாச்சே என யஷ், சஞ்சய் தத் உள்ளிட்டோருக்கு பில்டப் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யானை, புலி, மான், மீன் என பள்ளிக்கூட சிறுவர்களுக்கு சொல்லும் உதாரணங்களைக் கொண்டு தத்துவம் பேசிக்கொண்டே இருப்பதும் சலிப்பை ஏற்படுத்தியது. அது ஒரு சில இடங்களில் எரிச்சலூட்டும் வகையிலும் இருக்கிறது. தமிழில் வசனங்கள் யதார்த்தமாக இல்லை.
நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி முதலில் யஷ் மீது வெறுப்பில் இருப்பதுபோல காட்டப்படுகிறது. யஷுக்கு அடிபட்டதும் அவர் மீது பாசம் காட்டுகிறார். எதனால் அவருக்கு யஷ் மீது காதல் வந்தது என்பது அழுத்தமாக சொல்லப்படவில்லை.
ஒரு பிரம்மாண்டமான காட்சி அனுபவத்துக்காக பெரிய திரையில் மட்டுமே பார்க்க கூடிய வகையில் ஒரு சுவாரசியமான படமாக இருக்கிறது கேஜிஎஃப் 2.