விஜய்யின் 'பீஸ்ட்' - திரை விமர்சனம் - நெல்சனுக்கு என்னாச்சு?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரை விமர்சனம்.
விஜய்யின் 'பீஸ்ட்' - திரை விமர்சனம் - நெல்சனுக்கு என்னாச்சு?

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோரின்  நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.

சென்னையில் உள்ள வணிக வளாகத்தைத் தீவிரவாதிகள் தங்கள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். அந்த வணிக வளாகத்தில்  தற்செயலாக சிக்கிக்கொள்ளும் முன்னாள் 'ரா' ஏஜெண்ட்டான வீரராகவன்,  தீவிரவாதிகளிடமிருந்து எப்படி அந்த வணிக வளாகத்தை மீட்கிறார்  என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.

ஏற்கெனவே வெளியான டிரெய்லரிலேயே ஓரளவுக்குக் கதையைச்  சொல்லிவிட்டதால் பெரும்பாலான காட்சிகளை எளிதாக முன்னதாகவே யூகிக்க முடிகிறது. தீவிரவாதிகளின் தலைவனை விடுவிக்க மக்களைச் சிறைப் பிடிக்கும் தீவிரவாதிகள், அவர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் நாயகன் என பல விஜயகாந்த் படங்களில் பார்த்த அதே  கதைதான்.

இதுபோன்ற படங்களில் மக்களைத் தீவிரவாதிகள் சிறைப் பிடித்ததும் பார்வையாளர்களிடையே ஒருவித பதைபதைப்பு தொற்றிவிடும். ஆனால் பீஸ்ட் படத்திலோ துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரையிலும்கூட அப்படி எந்த  உணர்வையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் பெரிய குறை.

இயக்குநர் நெல்சனின் முந்தைய படங்களில் மிகவும் சீரியசான விஷயங்களை நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பார். அதுதான் படங்களுக்குப் பலமாக இருந்தது. இந்தப் படத்தில் நகைச்சுவையும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. நெல்சன் படங்களில் வரும் ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, சுனில் ரெட்டி  உள்ளிட்டோருடன் விடிவி கணேஷ், சதிஷ் என நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், நகைச்சுவை மட்டுமில்லை.

ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற அனிருத்தின் பாடல்கள் எல்லாம்  படத்தில் நன்றாக  படமாக்கப்பட்டுள்ளன. பீஸ்ட் மோட் பாடல் பின்னணி இசையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான காட்சிகள் வலுவாக இல்லாததால் பின்னணி இசை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பெரும்பாலும் ஒரு வணிக வளாகத்தைச் சுற்றி நடக்கும் இந்தக் கதையைப் பார்க்க, தனது ஒளிப்பதிவின் மூலம் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. சண்டைக் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன.

வீரராகவன் என்ற முன்னாள் ராணுவ வீரராக விஜய். முகத்தில் பெரிதாக எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் போக்கிரி பட விஜய்யை  நினைவுபடுத்துகிறார். 'ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேனா என் பேச்ச நானே  கேட்க மாட்டேன்' எனப் போக்கிரி பட வசனத்தையும் பேசுகிறார்.

ஒட்டுமொத்த படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார் விஜய். அவரது  இருப்பும் நடிப்பும் மட்டுமே படத்தின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது.  அவருக்கு அடுத்து இயக்குநர் செல்வராகவனின் நடிப்பு நன்றாக இருக்கிறது. அவரது வசன உச்சரிப்புகள், சில இடங்களில் நகைச்சுவைக்கு  உதவியிருக்கின்றன. பூஜா ஹெக்டே வழக்கமான தமிழ்ப் பட கதாநாயகி போல பாடல்களுக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார்.

படத்தின் பலவீனம் மிகவும் மோசமாக எழுதப்பட்ட திரைக்கதை.  தீவிரவாதிகளிடமிருந்து மக்களை விஜய் எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதானே முக்கியம்?

'டாக்டர்' படத்தில் ஒரு சாதாரண குடும்பத்தை வைத்துக்கொண்டு  புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் குழந்தைகளை சிவகார்த்திகேயன்  மீட்பதாகக்  காட்டப்பட்டிருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு காரணம். ஆனால், அப்படியெல்லாம் எதுவுமில்லாமல் வலிமையான தீவிரவாதிகளைச்  சண்டையிட்டே விஜய் வெல்வதாகக் காட்டுவது படத்தின் சுவாரசியத்தைக் குறைக்கிறது.

தீவிர விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அனைத்து தரப்புப் பார்வையாளர்களுக்கும் ஏற்ற  படமாக இருந்திருக்கும் பீஸ்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com