பீஸ்ட்: திரை தீப்பிடிக்காமல் போனது ஏன்?

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நிலவி வரும் நிலையில், திரும்பத்திரும்ப அவர்களே தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது சமூகத்தில் எவ்வித எதிர்வினைகளை உண்டாக்கும் என்ற சமூகப் பொறுப்பு அவசியம். 
பீஸ்ட்: திரை தீப்பிடிக்காமல் போனது ஏன்?


டிரெய்லரிலேயே பீஸ்ட் கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒரு வணிக வளாகம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதே வணிக வளாகத்துக்குள் எதிர்பாராதவிதமாக முன்னாள் 'ரா' ஏஜெண்ட் சிக்கிக் கொள்கிறார். அவர் எப்படி தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் நாம் அனைவருக்கும் தெரிந்த கதை.

வணிக வளாகம்தான் கதை உலகம் என்றால், அது சார்ந்த காட்சிகளை வலுவாகக் கட்டமைத்திருக்க வேண்டும். வணிக வளாகத்தை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்கள் என்றால், அந்தத் தீவிரவாதிகள் பற்றிய புரிதல் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டிருக்க வேண்டும். மொத்தம் எத்தனை தீவிரவாதிகள் வணிக வளாகத்துக்குள் உள்ளனர், வணிக வளாகத்தைக் கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதற்கு தீவிரவாதிகளின் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை விஷயங்கள் பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் தீவிரவாதிகளின் இந்த கெட்டிக்காரத்தனத்தை ஹீரோவான விஜய் எப்படி முறியடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே சுவாரஸ்யத்தைத் தூண்டும்.

பிறகு, தீவிரவாதிகள் தேர்வு செய்திருப்பது தமிழ்நாட்டிலுள்ள வணிக வளாகத்தை. தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் பிரச்னையே இல்லாதபோது, 'தமிழ்நாட்டில் தீவிரவாதிகள்' என்ற உலகை பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. விஜய் நடித்த துப்பாக்கி, தீவிரவாதிகளைக் கொண்ட படம் என்றால் அதன் கதைக்களம் மும்பையாகத்தான் இருக்கும். தமிழ்நாடு எனும்போது பார்வையாளர்களுக்கு அது தொடர்பற்றதாகிவிடுகிறது. அப்படி இருக்கையில், பார்வையாளர்களிடையே இதன் தொடர்பை உண்டாக்குவதற்கு வலிமையான காட்சிகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, தீவிரவாதிகள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்ததற்கான காரணமாவது ரசிகர்களுக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்தப் படத்தில் தீவிரவாதிகள் பற்றிய புரிதல் எந்த இடத்திலும் முழுமையாக விளக்கப்படவில்லை. சில இடங்களில் நிறைய தீவிரவாதிகள் சுற்றித் திரிகின்றனர். சில இடங்களில் விஜய்யிடம் அடிபட்டுச் சாவதற்காக ஒரேயொருவர் மட்டும் சுற்றித் திரிகிறார். உதாரணத்துக்கு வணிக வளாகத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரிந்த தீவிரவாதிகளுக்கு சிசிடிவி கேமிராக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தெரியவில்லையா என்பது போன்ற கேள்விகள் யதார்த்தமாக எழுவதால், தீவிரவாதிகள் வலிமையானவர்களாகத் தெரிவதற்குப் பதிலாக கோமாளிகளாகத் தோற்றமளிக்கின்றனர். 

என்னதான் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும், கதையில் அவர் என்ன செய்தாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். முந்தைய மாஸ் படங்களை உதாரணமாகக் கூறினால் அந்தப் படத்திலும் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான காட்சிகளை ரசிகர்களுக்கு இயக்குநர்கள் கடத்தியிருப்பார்கள். தீவிரவாதிகள்தான் எதிரிகள் என்ற பிறகு, அவர்கள் திட்டம் எதுவும் தெரியாதபோது விஜய்-க்கு எத்தனை மாஸாக காட்சிகளை வடிவமைத்தாலும் அந்த மாஸ் உணர்வு பார்வையாளர்களைச் சென்றடையாது. இந்தப் பெரிய தவறைதான் பீஸ்ட் செய்திருக்கிறது.

டாக்டர் பாணியைப் பின்பற்றியிருக்கலாம்

கதைக் களத்துக்குள் நுழைந்தவிதம் இந்தப் படத்தில் பிரச்னையாக இருந்தது. இதே நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தையே உதாரணமாக வைத்துக்கொள்ளலாம். அந்தப் படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயன் ராணுவத்தில் பணிபுரியக்கூடிய மருத்துவர். அவரது குணாதிசயங்கள் இவைதான் என்பதை பார்வையாளர்களுக்கு விளக்குவதற்காக ஒரு அறிமுகக் காட்சி வைக்கப்பட்டிருக்கும். இதன்பிறகு, கதாநாயகி அறிமுகம். கதாநாயகி மூலம் கதை உலகத்துக்குள் ஹீரோ வருகிறார். 

ஆனால், பீஸ்ட் படத்தில் கிட்டத்தட்ட அதே பாணியைப் பின்பற்றியிருந்தாலும், விஜய்யின் வீரராகவன் கதாபாத்திர அறிமுகத்துக்கென்று தனிக் காட்சிகள் இல்லாமல் நேரடியாகக் கதைக்குள்ளேயே விஜய் அறிமுகமாகிறார். இந்த அறிமுகக் காட்சிதான் வணிக வளாகத்தைத் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்குக் காரணம் என வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுவே, வணிக வளாகம் மீட்புக் கதைக்குப் பிறகு, கிளைமாக்ஸ் நீட்டிக்கப்பட்டு பெரும் தொய்வு உண்டாவதற்கான காரணம். டாக்டர் படத்தைப்போலவே டெம்ப்ளேட்டாக இருந்தாலும் அறிமுகத்துக்கென்று வைக்கப்பட்ட காட்சிகளுக்குப் பிறகு வணிக வளாகக் கதை உலகுக்குள் நுழைந்திருக்கலாம்.

புதுமைக்குப் பற்றாக்குறை

இந்தப் படத்தின் கதையே 30 வருடங்களுக்கு முன்பு வந்து, அடித்து துவைக்கப்பட்டு தற்போது நம் வீட்டு அட்டாளியில் இருக்கும் கதை. கதையில் புதுமை இல்லாதபோது திரைக்கதையில் புதுமைகள் அல்லது சுவாரஸ்யங்கள் இருந்திருக்க வேண்டும். படத்தில் இல்லை.

அதுமட்டுமின்றி, இதுபோன்ற படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக மட்டுமே சித்தரிப்பதும் பலமுறை விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ் சினிமாவில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. அதை மீண்டும் தோண்டி எடுத்திருப்பது பார்த்துப் பழகிப்போன காட்சிகள் என்பதைத் தாண்டியும் அரசியல் விழிப்புணர்வின்மை என்கிற விமர்சனத்தைக் கடுமையாக வைக்கத் தூண்டுகிறது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை துணை ஆலோசகராக வரும் செல்வராகவன் கதாபாத்திரத்தை முஸ்லிமாகக் காட்டி சரி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தூண்டபப்பட்டு வரும் சூழலுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப  அவர்களே தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவது சமூகத்தில் எவ்விதமான எதிர்வினைகளை உண்டாக்கும் என்ற சமூகப் பொறுப்பை நிச்சயம்  உணர்ந்திருக்க வேண்டும். 

கதாநாயகிக்கென்று முக்கியத்துவம் இல்லாமல் எடுக்கப்பட்டு வந்ததற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நேரத்தில் தமிழ் சினிமா உள்ளது. ஆனால், மீண்டும் மிகப் பெரிய நடிகரின் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லாமல் எழுதப்பட்ட திரைக்கதை. கதாநாயகியான பூஜா ஹெக்டேவுக்கு வீரராகவனாக வரும் விஜய் யாரென்று தெரியுமா தெரியாதா என்றே நமக்குத் (பார்வையாளர்கள்) தெரியாது. ஆனால்,  விஜயிடம் தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தும் வகையிலான காட்சியே கதாநாயகியான பூஜா ஹெக்டேவின் அறிமுகக் காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இருவரும் முன்பே சந்தித்துக்கொண்டவர்கள் என்பதை விளக்குவதற்கான காட்சிகள் எடுக்கப்பட்டு படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு பின்னர் நீக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே திணிக்கப்பட்டதைப்போல வருகிறது 'அரபிக் குத்து' பாடல். விஜய் நடனத்திற்கானப் பாடல் என்பதைத் தாண்டி திரைக்கதையில் இது இடம்பெறுவதற்கானக் காரணத்திற்கு முனைப்புக் காட்டியிருக்கலாம்.

பிளாக் காமெடி என்பது கத்தி மேல் நடப்பது என்பார்கள். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டரில் நெல்சனின் நகைச்சுவை வேலை செய்தது. ஆனால், இந்தப் படத்தில் அதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்பதுதான் பெருத்த சோகமாக அமைந்துள்ளது.

கதை, திரைக்கதை, நகைச்சுவை என ஏதேனும் ஒன்று புதுமையாக இருந்திருந்து சற்று ரசிக்கும்படியாக இருந்திருந்தால், மற்ற தவறுகள் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி அதுவே பார்த்துக்கொள்ளும். படம் முழுக்க விஜய் அத்தனை அழகாக ரசிக்கும்படியாக இருந்தும்கூட மற்ற துறைகள் கைவிட்டதே திரை தீப்பிடிக்காமல் போனதற்கானக் காரணமாக அமைந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com