’வியக்க வைக்கும் பிரம்மாண்டம். ஆனால்..’ அவதார் -2 | திரைவிமர்சனம்
By சிவசங்கர் | Published On : 16th December 2022 05:19 PM | Last Updated : 16th December 2022 05:27 PM | அ+அ அ- |

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார் - தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இதன் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்பார்ப்புகள் எழுந்தன.
தற்போது, 13 ஆண்டு காத்திருப்பிற்குப் பின் ‘அவதார் 2’ வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் பூமியிலிருந்து வந்த ராணுவத்தினர் வேற்று கிரகத்தில் வாழ்ந்துவரும் ஏலியன்ஸ்களிடன் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் கிரகத்தை பறிப்பதுபோல் இரண்டாம் பாகத்திலும் அதே அதிகார வேட்டை தொடர்கிறது.
இதையும் படிக்க: இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்!
நாயகனான ஜேக் சல்லி மனைவி குழந்தைகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஆனால், மீண்டும் உயிருக்கு ஆபத்து என தெரிய வரும்போது குடும்பத்துடன் அவர்கள் வாழ்ந்து வந்த காட்டிலிருந்து கடல்சார்ந்த பகுதிக்கு வருகின்றனர். அங்கு மற்றொரு இனக்குழு ஜேக்கின் குடும்பத்திற்கு அடைக்கலம் தருகிறது.
வில்லனான காலனல் குவாரிட்ஜ் தன் குழுவினருடன் சல்லியைத் தேடி அங்கும் வந்துவிடுகிறான். பின், ஜேக் சல்லி தன் குடும்பத்தை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறாரா என்பதை அபாரமான ஆக்சன் காட்சிகளுடன் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
முதல் பாகத்தில் காட்டின் அழகைக் காட்டியதுபோல் இரண்டாம் பாகத்தில் நீராலான உலகத்தைப் படைத்து அசத்தியிருக்கிறார் கேமரூன். மனிதக் கற்பனையும் தொழில்நுடபமும் இணைந்தால் உருவாகும் அற்புதத்தை திரையில் கடத்தி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திள்ளார். உலக சினிமா வரலாற்றில், கிராபிக்ஸ் தரத்தில் அவதார் 2 புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளது.
குறிப்பாக, 1 மணி நேர இறுதி சண்டைக் காட்சியில் வெளிப்பட்ட பிரம்மாண்டத்தை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
அதேநேரம், நாயக பிம்பம் இல்லாத அதிக கதாபாத்திரங்களால் உருவான திரைக்கதையும் பழைய பாணியிலான கதையும் படத்தின் பலவீனங்கள்.
பின்னணி இசை, வேடா (WETA) நிறுவனத்தின் விஎஃப்எக்ஸும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்த்துள்ளன.
அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய வகையில் உருவாகியிருக்கிறது அவதார் - 2. திரையரங்க அனுபவத்திற்காக நிச்சயம் பார்க்கலாம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...