சர்வதேச அரசியலுக்குள் ஒரு காதல் கதை: ராங்கி திரைவிமர்சனம்

இதுவரை காதல் திரைப்படங்களில் தோன்றி வந்த நடிகை த்ரிஷா நல்ல அரசியல் பேசும் ஒரு திரைப்படத்தில் இறங்கி தன்னால் இதுவும் முடியும் என நிரூபித்திருக்கிறார்.
சர்வதேச அரசியலுக்குள் ஒரு காதல் கதை: ராங்கி திரைவிமர்சனம்

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ராங்கி. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர், முருகதாஸ் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் எம். சரவணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இசை சி.சத்யா. ஒளிப்பதிவு சக்திவேல். பாடல்கள் கபிலன் எழுதியுள்ளார். 

ஒரு தீவிரவாதிக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும்? அந்த தீவிரவாதி ஒரு பத்திரிகையாளரை சந்தித்தால் என்ன ஆகும்? இதுதான் ராங்கி திரைப்படத்தின் கதை. இதற்கு மத்தியில் ஏன் ஒரு சாதாரணமானவன் தீவிரவாதியாகிறான்? அவனை தீவிரவாதியாக்கியதன் பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது? என்பதையெல்லாம் பேசியிருக்கிறது திரைப்படம். இதுவரை காதல் திரைப்படங்களில் தோன்றி வந்த நடிகை த்ரிஷா நல்ல அரசியல் பேசும் ஒரு திரைப்படத்தில் இறங்கி தன்னால் இதுவும் முடியும் என நிரூபித்திருக்கிறார்.

தனது அண்ணனின் மகள் பெயரில் உலாவும் பேஸ்புக் கணக்கைப் பற்றி அறிந்து கொள்ளும் த்ரிஷா அதனை கைப்பற்றுகிறார். அதில் ஒரு ஆணிடமிருந்து தொடர்ச்சியாக காதல் வார்த்தைகள் வருகின்றன. தனது அண்ணன் மகள் பெயரிலேயே அந்த ஆணிடம் தினமும் பேசி வருகிறார் நடிகை த்ரிஷா. ஒரு கட்டத்தில் அது தீவிரவாதி எனத் தெரிய வர அதனை அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடிக்கிறது. அதன்பின் என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் சரவணன்.

கமர்ஷியல் படத்திற்குண்டான அத்தனையும் இதில் இருக்கிறது. அதிலும் முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டிய காதல் காட்சிகள். வழக்கமான காதல் காட்சிகள் இல்லை என்றாலும் அதற்கு பதிலாக அவற்றை வசனங்களில் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு தீவிரவாதியிடம் பேசும்போது ஒரு கட்டத்தில் அவனிடம் காதல் வயப்படும் த்ரிஷா அதற்காக தனது அண்ணன் மகளிடம் பொறாமை கொள்வதெல்லாம் அழகாக இருக்கிறது. தைரியமான, மிடுக்கான பெண்ணாக த்ரிஷா அதிரடி காட்டியிருக்கிறார். முழுப்படமும் அவரை சுற்றியே வருவதால் அதற்குண்டான பொறுப்பான் நடிப்பை வழங்கியிருக்கிறார். மிகக்குறைந்த அளவிலான துணைக் கதாபாத்திரங்கள். அதுவே சொல்லப்போனால் படத்திற்கு உதவிகரமாக இருக்கிறது. த்ரிஷாவின் அண்ணன் மகளாக வரும் அனஸ்வரா ராஜனை மையமாகக் கொண்ட கதை என்றாலும் அவரை அதிகம் சுற்றாமல் ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குநர்.

தீவிரவாதியாக இருக்கும் ஆணிடமிருந்து வரும் வார்த்தைகள் மூலம் எது சரி எது தவறு என த்ரிஷா எண்ணும் இடங்கள் எல்லாம் அரசியல் வசனங்களாக வெளிப்படுகின்றன. ஒருவன் தீவிரவாதி என்பதற்கு எது அளவுகோல்? போன்ற கேள்வியை நமக்குள்ளும் ஏற்படுத்துகிறது. “எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்ன்னா அப்ப எதுக்கு தாழ்மையுடன்னு சொல்லனும்”, “ஒரு பொண்ணு நினைச்சா 8 பேரை பேரைக் கூட ஆட்டி வைப்பா” போன்ற வசனங்கள் கைகொடுத்துள்ளன. பின்னணி இசை, லிபியாவைக் காட்டும் கே.ஏ.சக்திவேலின் கேமரா கண்கள் அந்த இடத்தின் அருகில் நிறுத்தும் உணர்வை கடத்தியிருக்கின்றன. படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் சுபராக். 

படத்தின் பல இடங்களை சென்சார் போர்டு கைவைத்துள்ளது. நாட்டின் பெயரைக் குறிப்பிடும் செய்திக் காட்சிகள், நாடு, தலைவரின் பெயரைச் சொல்லும் இடங்கள் என பல இடங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளைக் குறிப்பிட்டு வரும் திரைப்படங்களில் இப்படி சென்சார் செய்யப்படாமல் இருக்கும்போது இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் எப்படி? என பார்க்கும்போது கேள்வி வருகிறது.

லிபியா போன்ற நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க அந்நாட்டின் தலைவர் கடாபியைக் கொல்லும் அமெரிக்க அரசு அங்கு பொம்மை அரசை ஏற்படுத்துகிறது என்பதில் அமெரிக்காவும், லிபியாவு, கடாபியும் சென்சார் போர்டால் மறைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு இது சிரமத்தையே கொடுத்துள்ளது. படத்தில் இறுதியில் வரும் அந்த தீவிரவாத ஆணின் இறுதி வார்த்தைகள் சிறப்பு.

படத்தில் குறிப்பிடும்படியான குறைகளும் இருக்கின்றன. தீவிரவாதியாக இருக்குமோ என சந்தேகப்படும் த்ரிஷா எப்படி தன்னுடைய முகவரியை அதுவும் கதவு எண் வரை பேஸ்புக் உரையாடலில் பகிர்ந்து கொள்வார்? தன்னால் ஒரு அமைச்சர் சிக்கிக் கொள்ளும்போது எப்படி தொடர்ந்து அந்த ஆணுடன் பேசி காதல் வலையில் விழுவார்? என்கிற கேள்விகளெல்லாம் கூடவே எழுகின்றன.

பெரிய சிக்கலை வெளிக் கொண்டுவரும் த்ரிஷா அதன்பின்னும் சகஜமாகவே இருக்கிறார். தான் மாட்டிக் கொண்டுவிட்ட பின்னும் அதே காதலுடன் தனது அண்ணன் மகளை பணயம் வைக்கும் இடங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அதேபோல் என்னதான் தைரியமான பெண்ணாக அவர் காட்டப்பட்டிருந்தாலும் நம் ஊரின் ஹீரோக்களைப் போல் லாஜிக்கே இல்லாமல் தீவிரவாதிகளுடன் சண்டையிடுவதெல்லாம் தவிர்த்திருக்கலாம்.

எங்கோ இருக்கும் ஒரு தீவிரவாதி திடீரென கிண்டியில் ஆள்வைத்து காவல்துறையினரைக் கொல்வதெல்லாம் நம்பும்படியாக காட்சிப்படுத்தப்படவில்லை. முதல்பாதியில் தனது அண்ணனின் மகளைக் பாதுகாப்பதற்காக எனக் கூறிக்கொண்டு அவரிடம் த்ரிஷா நடந்துகொள்வதே ஒரு வன்முறைதான். இதிலெல்லாம் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

எனினும் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகியிருக்கும் ராங்கி திரைப்படம் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் கருத்துடன் சேர்ந்த காதல் கதையையும் கொடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com