அஜித்தின் 'வலிமை' - ரசிகர்கள் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா? திரை விமர்சனம்

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் விமர்சனம்
அஜித்தின் 'வலிமை' - ரசிகர்கள் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா?  திரை விமர்சனம்

வழக்கமான காவல்துறை படங்களைப் போல  போதைப் பொருள் கடத்தல்,  அதனை நாயகன் எப்படி தடுக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதையும்கூட. ஆனால் வலிமையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் இருசக்கர வாகன பந்தய இளைஞர்கள். அர்ஜுன் என்ற காவல்துறை உதவி  ஆணையராக வரும் அஜித்தும், முன்னாள் இருசக்கர வாகன பந்தய வீரர். படத்தின் திரைக்கதை எப்படி இருக்கும் என்பதை  எளிதாக யூகித்துக் கொள்ளலாம். 

மழையில் நடக்கும் சண்டைக் காட்சியில் அறிமுகமாகிறார் அஜித். படம்  முழுக்க நிறையவே என்னை அறிந்தால் சத்யதேவை நினைவுபடுத்துகிறார்.  வேலையில்லாத அண்ணன், தம்பி, வயதான அம்மா என அனைவரையும்  பார்த்துக்கொள்ளும் பொறுப்பான மகனாக அஜித் வருகிறார். 

நடிகர் அஜித்திடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதனை மனதில் வைத்துக் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் வினோத். நேர்கொண்ட பார்வை படத்தில்கூட, வலிந்து திணிக்கப்பட்ட கணவன் மனைவி பாடல் இடம்பெற்றிருக்கும். இந்தப் படத்தில் காதல், அது சார்ந்து வரும் பாடல் இல்லாதது சிறப்பு. முதல் பாதி முழுக்க அஜித் ரசிகர்களுக்கான காட்சிகள் நிறையவே இருக்கின்றன. அஜித் பைக்கைத் தொட்டதுமே அரங்கமே அதிர்கிறது. 

அஜித்தின் அம்மாவாக சுமித்ரா படத்தின் சென்டிமென்ட் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.வழக்கமான வில்லனாக கார்த்திகேயா. உடல் முழுக்க டாட்டூ போட்டிருப்பதைத் தவிர அவருக்கென எந்த தனித்துவமும் இல்லை. முடிந்த வரை தனது நடிப்பால் அந்த வேடத்துக்கு உயிர்கொடுக்க முயற்சித்திருக்கிறார். இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு நடிகை ஹுமா குரேஷியின் வேடம் வடிக்கப்பட்டிருப்பது சிறப்பு. 

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், ஆங்காங்கே வரும் சுவாரசியமான திருப்பங்கள் படத்தை ரசிக்க வைக்கிறது. வினோத்தின் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. 

வேலையின்மையின் காரணமாக சமூகத்தில் இளைஞர்கள் எவ்வாறு தவறான வழிக்குச் செல்கிறார்கள் என்பது அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. படத்தில் இசை யுவன் ஷங்கர் ராஜா. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு நன்றி சொல்லப்பட்டிருந்தது. ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. வேற மாறி, நான் முதல் முகம் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளன. 

படத்தில் பைக் ரேஸ் காட்சிகள், சண்டைக் காட்சிகள் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான தரத்தில் இருக்கின்றன. அந்த காட்சிகளைப் படமாக்குவதில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் பங்கு பாராட்டும்படி இருந்தது. பைக் ரேஸ் காட்சிகளில் ஒருசில இடங்களில் விஎஃப்எக்ஸ் பணிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

களம் புதிதாக இருந்தாலும் கதையும் திரைக்கதையும் பழைய பாணியில்  இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் கைதியைக்  காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும்போது வில்லன்கள் தாக்குவது, நாயகனின் குடும்பத்தை வில்லன் கடத்திவைத்து மிரட்டுவது, அம்மா சென்டிமென்ட், இறுதிக் காட்சியில் நாயகனும், வில்லனும் வெற்றுடம்புடன் அடித்துக்கொள்வது என மிகவும் பழைய பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 

எதற்கு எடுத்தாலும் வில்லன்கள், அர்ஜுன் அர்ஜுன் என அஜித்துக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.   போதைப் பொருள் கடத்தலை விசாரிக்கும் காட்சிகள் எல்லாம் வழக்கமாகக் காவல்துறையினர் எப்படி விசாரிப்பார்களோ அப்படித்தான் இருக்கிறது. அதற்கு எல்லோரும் அஜித்தை பாராட்டத் தொடங்கி விடுகிறார்கள். காவல்துறை செயல்படாமல் இருக்கிறது என்பதை  மறைமுகமாக சொல்கிறார்களோ என்று தோன்றியது. 

முதல் பகுதியில் திருப்பங்கள் நன்றாக இருந்தாலும், படத்தில் நாயகனுக்கு ஏதாவது தவறாக நடந்தாலே, அங்கு ஏதோ நடக்கப் போகிறது என ரசிகர்கள் திடீர் திருப்பத்தை எதிர்பார்க்க ஆரம்பித்துவிடும் அளவுக்கு இருக்கிறது.

'வலிமைனா என்ன தெரியுமா' என  அஜித் அடிக்கடி தத்துவம் பேச ஆரம்பித்துவிடுகிறார். யதார்த்தமாக பேசுவதுபோல் வசனங்களை எழுதியிருக்கலாம். குறிப்பாக இறுதிக்காட்சியில் அஜித்  பேசுவதெல்லாம்,  நமக்கு நன்னெறிக் கதைகள் கேட்பதுபோல இருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம்.  அஜித்தின் ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியவில்லை.

செம கொண்டாட்டமா? அல்லது 3 ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டுக்  காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் விஞ்சியிருக்கிறதா? அடுத்து ரசிகர்கள் ஏகே 61  அப்டேட் கேட்டுக் காத்திருக்க வேண்டுமா? சில நாள்களில் தெளிவாகத் தெரிந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com