சந்தானத்தின் 'குலு குலு' - படம் எப்படி இருக்கிறது? - திரை விமர்சனம்

ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குலு குலு படத்தின் திரை விமர்சனம் 
சந்தானத்தின் 'குலு குலு' - படம் எப்படி இருக்கிறது? - திரை விமர்சனம்

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்கள், திரில்லர் படங்கள், நகைச்சுவைப் படங்களுக்கு மத்தியில் எப்பொழுதாவது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகும். அப்படியான ஒரு படம்தான் குலு குலு. 

சில ஆண்டுகளுக்கு முன் ஜிப்ஸி என்ற படம் வெளியாகியிருந்தது. ஊர், பெயர் போன்ற எந்த அடையாளமும் இல்லாத நாடோடி வாழ்க்கை வாழும் இளைஞரின் கதை. கிட்டத்தட்ட குலு குலு பட நாயகனும் அப்படிப்பட்டவர்தான். 

வெளிநாட்டை பூர்விகமாக கொண்ட பழங்குடியினத்தவராக சந்தானம். குலு குலு என்கிற கூகுள். கூகுள் என்ற பெயருக்கு ஏற்ப, என்ன கேட்டாலும்  சொல்வார்.

யார் என்ன உதவி கேட்டாலும் உடனே செய்துவிடுவார். அதனாலேயே சில சிக்கல்களைச் சந்திக்கிறார். இருப்பினும் உதவி என்று யார் கேட்டாலும் அவரால் மறுக்க முடிவதில்லை. அப்படி இளைஞர்களுக்கு அவர் உதவி செய்ய பெரிய ஆபத்து ஒன்றில் சிக்கிக்கொள்கிறார். அந்த சிக்கலில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்பதுதான் இந்த குலு குலு. 

குலு குலுவாக சந்தானம். பொதுவாக எல்லோரையும் சகட்டுமேனிக்குக் கலாய்க்கும் சந்தானம், இந்த படத்தில் அமைதியான, பெரிதாக எந்த சலனமும் காட்டாத முக பாவனை, பொறுமையாக பேசுதல் என முற்றிலும் மாறுபட்ட சந்தானமாக களமிறங்கியிருக்கிறார். நகைச்சுவையாக மட்டுமல்ல உணர்வுபூர்வமாகவும் நடிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.  

அவருடன் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், சாய் தீனா, கவி, லொள்ளு சபாவின் சேசு, மாறன், தீனா எனத் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள். சில காட்சிகளே வந்தாலும்  மாறன், சேசு இருவரும்  தங்களுக்கே உரிய பாணியில் பேசும் வசனங்களால் திரையரங்கைச் சிரிப்பொலிகளால் அதிரவைக்கின்றனர். 

ஒருவர் மீது இயல்பாக வரும் ஈர்ப்பு வேறு, காதல் என்பது வேறு என்பதைத் தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குநர். இதுவரை தமிழ் சினிமாவில்  நாயகன், நாயகிக்கு காதல் உருவாகும் தருணங்களை இது  கேள்விக்குறியாக்குகிறது. படத்தின் வசனங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. தாய் மொழியின் அவசியம் குறித்து சந்தானம் பேசும் வசனம் சிறப்பு. 

சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் தன்மைக்கு சரியான நியாயம் செய்திருக்கிறது. சந்தானத்துக்கு பிறகு அதிகம் கவனம் ஈர்ப்பது ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். சென்னையைத் தனது மாறுபட்ட கோணங்களால் மிக அழகாகவும் வித்தியாசமாகவும் காட்டிக்  கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். 

சந்தானம் கதாபாத்திரம் மூலம் வாழ்க்கையின் அர்த்தம், பெண் சுதந்திரம் உள்ளிட்டவற்றைப் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். அவை பெரிதாக அழுத்தம் இல்லாமல் கடந்துபோகின்றன. 

வழக்கமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு, மாறுபட்ட பார்வையால் வாழ்க்கையை அணுகும் ஒருவன் நுழைந்தால் என்ன ஆகும் என்பதை இந்தக் குலுகுலு பேச முயற்சிக்கிறது. 

முதல் பாதியை ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி ஓரளவுக்கு சுவாரசியமாகவே நகர்கிறது. சில இடங்களில் சிரிக்க முடிகிறது. படத்தின் நீளம் ஒரு குறை. 

குறிப்பாக இரண்டாம் பாதியில் ஜார்ஜ் மரியம் வரும் காட்சிகள்,  சண்டைக் காட்சிகள் வழக்கமான நகைச்சுவை படங்களில் வருவதுபோல மிகை  யதார்த்தமாக இருக்கின்றன. ஆனால் சந்தானம் வரும் காட்சிகள் யதார்த்தமாகக் காட்டப்படுகின்றன. இயக்குநர் ஏனோ இங்கே தெளிவுறச் செய்யவில்லை.

வழக்கமான சந்தானம் படமாக எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தப் படம்  ஏமாற்றலாம். மாறாக, ஒரு வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்த்துச்  செல்பவர்கள் இந்த குலுகுலுவை ரசிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com