பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' - திரை விமர்சனம் : ஜோசியம் பலிக்குமா?

பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்பட விமர்சனம் 
பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' - திரை விமர்சனம் : ஜோசியம் பலிக்குமா?

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

காலத்துக்கும் காதலுக்கும் இடையிலான போட்டியில் வெல்லப்போவது எது என்பதை சொல்லியிருக்கும் படமே ராதே ஷ்யாம். கைரேகை நிபுணரான விக்ரமாதித்யா மக்களுக்கு அவர்களது எதிர்காலத்தை கணித்து சொல்கிறார். தனது காதல் வாழ்க்கை குறித்த அவரது கணிப்பு பலிக்குமா?  என்பதே ராதே ஷ்யாம் படத்தின் கதை. 

விக்ரமாதித்யாவாக பிரபாஸ் மற்றும் பிரேரனாவா பூஜா ஹெக்டே என இருவரும் முழுக்க முழுக்க காதல் படத்துக்கு தேவையான பங்களிப்பை சரியாக செய்துள்ளார்கள். படம் முழுக்க இருவர் கதாப்பாத்திரங்கள் மட்டும்தான் பிரதானம் என்பதால் அதனை சரியாக உணர்ந்து கொண்டு நன்றாக நடித்துள்ளார்கள்.  

சத்யராஜ், ஜெயராம், சச்சின் கடேகர், பிரியதர்ஷி, ஜெகபதி பாபு, முரளி சர்மா உள்ளிட்ட குறைவான துணை நடிகர்களே படத்தில் இருக்கிறார்கள். அவர்களில் சத்யராஜ், ஜெயராம், சச்சின் கடேகர் உள்ளிட்டோர் தங்களது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். சத்யராஜின் குரல் வழியே நமக்கு கதை சொல்லப்படுகிறது. 

ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள், தமனின் பின்னணி இசை ஆகியவை படத்தை சுவாரசியப்படுத்துகிறது. ஒரு காதல் படத்தில் பாடல்கள் முக்கியம் என்பதால் இசையமைப்பாளர் ஜஸ்டின் இன்னும் சிறப்பாக முயற்சித்திருக்கலாம். ஆனால் பாடல்கள் மான்டேஜாக வருவதால் பெரிதாக குறையாகத் தெரியவில்லை. 

வண்ணமயமான காட்சி அமைப்பின் மூலம் கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. நேரடி மற்றும் விஎஃப்எக்ஸ் மூலம் படமாக்கப்பட்ட காட்சிகள் மூலம் இத்தாலி, லண்டன் என ஐரோப்பாவுக்கு சுற்றுலா சென்று வந்த உணர்வை படக்குழு அளித்துள்ளார்கள்.. 

1976களில் நடக்கும் கதை. முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு அவரது எதிர்காலத்தை கணித்து சொல்லும் காட்சியில் அறிமுகமாகிறார் பிரபாஸ். இப்படி ஆங்காங்கே சில காட்சிகள் படத்தை சுவாரசியமாக உள்ளன.

இடைவேளைக்கு முந்தைய காட்சிகள், இறுதிக்காட்சிக்கு முன் கதையில் நிகழும் திருப்பம் உள்ளிட்டவை நன்றாக எழுதப்பட்டுள்ளன. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்றாலும் மதன் கார்க்கியின் வசனங்கள் நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது. 

பிரபாஸுக்கும் பூஜாவுக்கும் இடையேயான காதல் காட்சிகள்தான் முதல் பாதி முழுக்க வருகின்றன. ஆனால் அவை எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் மேலோட்டமாகவே உள்ளது குறை. அதனால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இறுதிக்காட்சியில் பிரபாஸும் பூஜாவும் இணைவார்களா மாட்டார்களா என்ற பதைபதைப்பு பார்வையாளர்களுக்கு தோன்ற வேண்டும். ஆனால் இருவருக்குமான காதல் காட்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதால் இறுதிக்காட்சியும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

காதலிக்கவே கூடாது என உறுதியாக இருக்கும் பிரபாஸிற்கு பூஜா ஹெக்டே மீது ஏன் காதல் வருகிறது என்பது கூட தெளிவாக இல்லை. உலக தரத்தில் படமாக்க காட்டிய முனைப்பை, கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருந்தால் இந்த ராதே ஷ்யாம் ஒரு நல்ல காதல் படமாக இருந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com