
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
’ஒரு ஊரில் அழகான ராஜகுமாரி இருந்தாளாம்’ என்கிற கதைக்கு ஏற்ப வள்ளுவன்பேட்டையைச் சேர்ந்த நாயகி கயல்விழி (கீர்த்தி சுரேஷ்) தமிழ் மொழியின்மேல் பெரும்பற்று கொண்டவர். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஹிந்தித் திணிப்பு பிரச்னை வந்தபோது முதல் ஆளாகக் களத்தில் இறங்கி, அதற்கு எதிராக போராடி சொந்த ஊரிலிருந்த ஹிந்தி சபாவை மூடுகிறார். அதேபோல், பெண்களின் உரிமைகளையும், பெண்ணடிமைத் தனங்களைக் கேள்வி கேட்பதற்காக கா.பாண்டியன் என்கிற ஆண் புனை பெயரில் சிறுகதைகளையும் எழுதிவருகிறார்.
மொழித் திணிப்பை எப்படி கயல்விழியால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லையோ அதைவிட ஒருபடி மேலாக தனக்குத் திருமணம் வேண்டாம் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். பள்ளிப்படிப்பு முடித்ததும் பெண்களுக்குத் திருமணம் நடந்துகொண்டிருந்த காலத்தில் 25 வயதுக்கு மேலாகியும் கல்யாணம் வேண்டாம் எனக் கூறும் கயல்விழியால் மொத்தக் குடும்பமும் புலம்புகிறது.
ஒருகட்டத்தில், நாயகியின் தாத்தாவுக்கு (எம்.எஸ்.பாஸ்கர்) புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. நீண்டநாள் தன்னால் வாழமுடியாது எனக் கூறுபவர், மூன்று ஆசைகளைக் குடும்பத்தினரிடம் சொல்கிறார். சென்னை புகாரி உணவகத்தில் பிரியாணி சாப்பிடுவது, எம்ஜிஆரை நேரில் சந்திப்பது மற்றும் கயல்விழியின் திருமணத்தைப் பார்ப்பது. தாத்தாமீது பாசம் வைத்திருக்கும் கயல், வேறுவழியில்லாமல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். இதற்கிடையே, கா. பாண்டியன் என்கிற கயல்விழியின் புத்தகங்களைப் படித்து அவரை ஒருதலையாகக் காதலித்து வருபவரிடம், ‘நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?’ எனக் கேட்கிறார் நாயகி. இருவருக்கும் திருமண நிச்சயம் நிகழ்கிறது. தன்னைக் காதலிப்பவர் பரந்த சிந்தனையும் பெண்களுக்கான சுயமரியாதையையும் மதிப்பவர் என நினைக்கும் நாயகியின் வாழ்க்கையில் ஒரு ‘டுவிஸ்ட்’.
புத்தகங்களைப் படித்தாலும் நாம் தேர்ந்தெடுத்தவன் ஆணாதிக்கவாதிதான் என அறியவரும்போது கீர்த்தி சுரேஷுக்குத் தலை சுற்றுகிறது. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என திட்டமிடுகிறார். ஊரைவிட்டு ஓடமுடியாது, அப்படி ஓடி ஒளிகிற பெண்ணல்ல நாயகி. அப்போது, அவருக்கு முன் ஓரே ஒரு வாய்ப்பு வருகிறது. நாயகி பணிபுரியும் வங்கியில் ஹிந்தி தேர்வெழுதி வென்றால், வேறு மாநிலத்திற்கு பணியிடமாற்றமும் சம்பள உயர்வும் கிடைக்கும். அதைக் காரணமாக வைத்து திருமணத்தை நிறுத்தலாம். மொழித் திணிப்புக்கு எதிரான நாயகி ஹிந்தி தேர்வெழுதினாரா? கயல்விழிக்குத் திருமணம் நடந்ததா? என்கிற மீதிக்கதை அல்ல, முழுக்கதையும் நம்மைக் கேள்விகேட்டுக்கொண்டே இருக்கின்றன.
அரசியலையும் அரசியல்வாதிகளையும் பகடி செய்யும் நகைச்சுவை திரைப்படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு எந்த கட்சியையும், தலைவர்களையும் விவாதத்திற்குள் இழுக்காமல் 1970-களின் பின்னணியில் ஹிந்தித் திணிப்புடன் சேர்த்து பெண்களின் முன்னேற்றத்தையும் உரிமைகளையும் பேசியிருக்கிறார் இயக்குநர் சுமன் குமார். திடீரென வந்த மொழித் திணிப்புக்கு எதிராக போராடிய ஆண்கள், ஆண்டாண்டு காலமாக கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் மீது செலுத்திய ஆதிக்கத்தையும், அவர்களுக்கு மறுக்கப்பட்ட சுயமரியாதைகளையும் ஏன் கண்டுகொள்ளாமல் விட்டனர் என்பதை நுட்பமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
முக்கியமாக, பெரியார் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற பெண்களுக்காக குரல் கொடுத்தவர்களின் புத்தகங்களை வாசிக்கும் ஆண்கள், வெளியுலகில் பெண்களுக்கான உரிமைகளுக்கும் பெண்ணிய கருத்துகளுக்கும் ஆதரவாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் எவ்வளவு முரணான ஆணாதிக்கவாதிகளாக இருக்கின்றனர் என்பதை அழுத்தமாக காட்சிப்படுத்திருக்கிறார்.
மொழித் திணிப்புக்காக நாம் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை இன்றைய காலகட்ட பின்னணியில் சொல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகள் இன்றும் மாறாமல்தான் இருக்கின்றன என்கிற அரசியலை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
நடிகையர் திலகம் படத்திற்குப் பின் கீர்த்தி சுரேஷுக்கு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும். படம் முழுவதும் தன் நடிப்பால் கவர்கிறார். அதீத நடிப்பை வழங்கி காட்சிகளைக் கெடுக்காமல் என்ன வேண்டுமோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். ஹிந்தித் திணிப்புக்கு எதிராக அவர் பேசும் வசனமும் கிளைமேக்ஸ் காட்சியில் சுயமரியாதை சிந்தனைகளைப் பதிவு செய்யும் இடங்களிலும் கைதட்டல்கள் கிடைக்கின்றன. தனக்கிருக்கும் மார்கெட்டை சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார். நடிகையர் திலகம், சாணிக்காயிதம், ரகு தாத்தாபோல் கதைநாயகியை மையமாக வைத்து உருவாக்கப்படும் வித்தியாசமான கதைகளில் தைரியமாக கீர்த்தி நடிக்கலாம்.
துணைக் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் தேவ தர்ஷினி, இஸ்மத் பானு, ரவிந்திர விஜய், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். நம் வீடுகளில் இருப்பதுபோல் அன்பான, என்ன நடந்தாலும் நமக்கு ஆதரவாக இருக்கும் தாத்தா கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கர் அசத்துகிறார். ‘யாராவது தனக்கு ஆண்மை இல்லைன்னு டைரில எழுதுவாங்களா?’ என அவர் பேசும் வசனத்தில் திரையரங்கில் சிரிப்பு சத்தம் காதைக் கிழிக்கிறது.
இயக்குநருக்கு அடுத்ததாக ஒளிப்பதிவாளர் யானிமி யக்ஞமூர்த்தி மற்றும் கலை இயக்குநர் அட்டகாசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். 1970-களின் காலகட்டத்தை முடிந்த அளவிற்கு நம்பகப்பூர்வமாகக் கொண்டு வந்தது பாராட்டத்தக்கது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை பெரிதாகக் கவரவில்லை. ’அருகே வா’ மற்றும் ‘ஏக் காவ் மே.. நீ ஆம்பளையாமே’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
படத்தின் குறை, திரைக்கதையே. மிக மெதுவாக படம் நகர்கிறது. முதல்பாதியில் சில இடங்களில் கைகள் தானாகவே, ’எங்க செல்போன்’ எனத் தேடுகின்றன. ஹிந்தி திணிப்பை அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டிய இடங்களை எதற்கு சிக்கல் என இயக்குநர் மென்மையாகக் கடந்துவிட்டார். சில நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுக்கவில்லை.
ஹிந்தி என்கிற மொழியை அதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாதவர்களிடம் திணித்தால், எவ்வளவு கோபமும் ஆத்திரமும் வருகிறது? அதுபோல, பெண்களிடம் இப்படித்தான் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும், பேச வேண்டும் என அவர்களின் விருப்பத்திற்கு எதிரான கருத்துகளைத் திணிக்கலாமா?
சுதந்திர நாளன்று பெண்களுக்கான உரிமைகளையும், பெண்ணிய கருத்துகளையும் மென்மையாக ஆண்களுக்கு போதிக்கும், பெண்களுக்கான படமாகவே இது வெளியாகியிருக்கிறது. ஏமாற்றாத அனுபவமே கிடைத்திருப்பதால், கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா ’மறைவதற்குள்’ பார்த்துவிடலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.