பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குட்டி மருமகன் அலப்பறைகள்! மாமனாக வென்றாரா சூரி? திரை விமர்சனம்

நடிகர்கள் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள மாமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

News image
Updated On :16 மே 2025, 4:00 am

மாமன்

3/5

DIN

நடிகர்கள் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள மாமன் திரைப்படம் எப்படி இருக்கிறது? 

மாமனின் கதைக்களம் எனப் பார்த்தால், டிரைலரில் பார்த்ததுபோல சூரியும் அவரது குட்டி மருமகனும் இணைபிரியாத காம்போவாக ஊருக்குள் வலம் வருகிறார்கள். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு பிறந்த தன் மருமகனை சூரி பொத்தி பொத்தி அதிக செல்லம் கொடுத்து வளர்த்துவருகிறார். அப்படி அவர்களது ஆழமான உறவால், அலாதி செல்லத்தால் சூரியின் திருமண வாழ்க்கையில் உருவாகும் பிரச்னைகளும், அவை எப்படி பெரிதாகி குடும்பப் பிரச்னைகளாக மாறுகின்றன, அவற்றை எப்படி சூரி சரி செய்கிறார் என்பதும்தான் இந்த மாமனின் கதை!

மாமன் திரைப்படத்தில் சூரி

மாமன் திரைப்படத்தில் சூரி

இது ஒரு கமெர்ஷியல் குடும்ப பேக் என்பதால் ஆங்காங்கே சில சினிமாத்தனங்கள் தெரிந்தாலும், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற பெயரைப் பெறுவதற்கான எல்லா விஷயங்களையும் இந்த மாமன் கொண்டுள்ளார்.  முதல்பாதி நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் கலந்து தரப்பட்டு, இரண்டாம்பாதி முழுக்க உணர்வுப் பூர்வமான ‘அழுகாச்சி’ காட்சிகள் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தப்படம்.  

படத்தில் நன்றாக இருந்தவை எனப் பார்த்தால், முதலில் கதையும் திரைக்கதையும் தான். குட்டி மருமகனுக்கும் தாய்மாமனுக்குமான உறவைப் பற்றி பேசும் படங்கள் எதுவும் சமீபத்தில் உருவாகிடாத நிலையில் கதைக்களம் ஆர்வமூட்டும் விதமாகவே உள்ளது. ஆரம்பத்தில் குழந்தை பிறப்பதிலிருந்து, சூரி குழந்தையை வளர்ப்பது, ஒன்றாக ஊரைச் சுற்றுவது எல்லாம் படத்தில் வேக வேகமாக கொண்டுசெல்லப்பட்டது தேவையானதாகவே படுகிறது. முதல் 20 நிமிடம் என்னதான் நடக்கிறது என யோசித்துக்கொண்டே இருக்கும்போது சூரியின் திருமணத்தில் அந்தக் குட்டியால் ஆரம்பிக்கும் அலப்பறைகள் பார்வையாளர்களை கண்டிப்பாக ரசிக்கவைக்கும்.

படத்தின் பல இடங்களில் வரும் வசனங்கள் மிக இயல்பாக எழுதப்பட்டிருப்பது மற்றொரு + எனலாம். முதல் பாதியில் வரும் காமெடிக் காட்சிகளுக்கு அரங்கம் குலுங்குகிறது. மெதுவாக அதே நகைச்சுவைக் காட்சிகள் சீரியசாக மாறுவது திரைக்கதைக்கு கவனம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இடைவேளைக் காட்சிகள் எதிர்பாராத கதாபாத்திரத்தைப் பற்றி பேசியது மற்றொரு +. இரண்டாம் பாதி முழுக்க பாசப்போராட்டமாகவே நகர்ந்து செல்வது சற்று சோர்வைத் தருவதாக அமைந்தாலும், ராஜ்கிரணின் ‘பவுன்’ காதல் கதை அந்த சோர்வை மறக்கவைத்துவிடுகிறது. படத்தின் முடிவை முடிந்த அளவுக்கு வழக்கமான குடும்ப படங்களின் கிரிஞ்ச் கிளைமாக்ஸாக இல்லாமல் இருக்க படக்குழு முயற்சித்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று. 

மாமன் திரைப்படத்தில் சூரி

மாமன் திரைப்படத்தில் சூரி

நடிப்பு எனப் பார்த்தால் நம் ஹீரோ சூரி தான் முதல் இடம்! எத்தனையோ படங்களில் சூரியை நாம் நகைச்சுவை நடிகராகவே பார்த்து ரசித்திருந்தாலும் இந்தப் படத்தில் ஒரு இடத்தில் கூட அந்த நகைச்சுவை முகம் தெரியவில்லை. நகைச்சுவைக் காட்சிகளில்கூட சூரி ஹீரோவாகவே மின்னுகிறார். நடிப்பிலும் பின்னி எடுத்திருக்கிறார். சில இடங்களில் அவர் ஏற்கனவே நகைச்சுவை நடிகனாக இருந்தது குறித்து கிண்டலாக பேசப்படும் இடங்களைத் தவிர ‘சூரி ஒரு நகைச்சுவை நடிகர்’ என்ற எண்ணமே வரவில்லை.

அவரது கதாப்பாத்திரம் எளிதாக உணர்ச்சிவசப்படக்கூடியது என்பதால் அதிகமாக அழுக வேண்டிய இடங்களில் அவர் மெனக்கெட்டிருக்கிறார். சில இடங்களில் காட்சிகளே ஓவராக தெரிந்தாலும், அவரது நடிப்பில் அந்த இடங்களையும் காப்பாற்றுகிறார். படத்தின் துவக்கத்தில் அவர் குழந்தைக்காக காத்திருப்பதும், குழந்தை பிறந்ததும் 'பெத்தாரு…’ எனக் கண்ணீருடன் குழந்தையைக் கொஞ்சுவதும் மருமகன் இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக ஏக்கத்தைக் கொடுக்கும்! 

அடுத்ததாக ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் அழகிலும் சரி, நடிப்பிலும் சரி டாப்பராக வலம் வருகிறார். படம் முழுக்க மிக முக்கியக் கதாபாத்திரத்தில் படம் முழுக்க பயணிக்கும் அவர், தனது கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார். பல அழகான நாயகிகள் நடிப்பில் திணறுவதையும், சிலர் தன் திறமையைக் காட்ட சரியான கதைகள் அமையாமல் திக்குமுக்காடுவதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், லட்சுமி சரியான படத்தைத் தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.

ரொமாண்டிக்காக கண்ணால் பேசும் காட்சிகளும் சரி, முறைப்பாலேயே சூரியை நடுங்க வைக்கும் காட்சிகளும் சரி, அழுது புலம்பும் காட்சிகளும் சரி Hold My Beer என அசாட்டாக டீல் செய்திருக்கிறார். முக்கியமாக பலர் அழுகும்போது கூட அழகாக அழுக முயற்சித்து கடுப்பேற்றும் நிலையில்,  அழுகும் காட்சிகளில் நமக்கும் கண்கலங்குமளவுக்கு நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா! 

மாமன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி

மாமன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி

அடுத்ததாக ராஜ்கிரண் Cutipieஆக வலம் வந்து மனதில் இடம் பிடிக்கிறார். மொட்டை மாடியில் தண்ணி அடிப்பதும், அடுப்படியும் சுடு தண்ணி வைப்பதுமான காட்சிகள் அவரை மனதில் நிற்கவைக்கின்றன. அவருடைய காதல் கதை படத்தில் முக்கியமான ஒன்றாக இருப்பது, அவரது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்துகிறது. சமீபத்தில் அவரை பல இயக்குநர்கள் சரியான கதைகளில், நல்ல கதாபாத்திரங்களில் பொருத்தி நன்றாக பயன்படுத்திவரும் நிலையில் பிரசாந்த் பாண்டியராஜும் அதில் வெற்றி கண்டுள்ளார். 

அடுத்ததாகச் சொல்ல படத்தில் மீதக் கதாபாத்திரங்களுக்கு பெரிய களம் அமைத்துத்தரப்படவில்லை என்பதால் தேவையான நடிப்பை வழங்கி படத்தை நகர்த்தியுள்ளனர். 

மாமன் திரைப்படத்தில் ராஜ்கிரண்

மாமன் திரைப்படத்தில் ராஜ்கிரண்

படத்திற்கு இசையமைத்துள்ள ஹெசாம் அப்துல் வஹாப் மனதில் நிற்கக்கூடிய பாடல்களையும், படத்தோடு ஒன்றக்கூடிய பின்னணி இசையையும் கொடுத்துள்ளார்.  ஒளிப்பதிவு எனப் பார்த்தால் தனித்துவமாக எதுவும் தெரியவில்லை. சண்டைக் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருப்பதைத் தவிர மீத இடங்கள் எதுவும் கண்ணில் பட்டு மனதில் நிற்பதாக இல்லாதது குட்டி -. 

இது ஒரு கமெர்ஷியல் படம் என்பதால் ஒரு சில காட்சிகள் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தலாம், ஆனால் அவை பெரிய தொந்தரவாக இருக்காது! குடும்பத்தோடு சென்றுவர சரியான படத்தைத் தேடுகிறீர்கள் என்றால் மாமனைக் கண்டிப்பாக நீங்கள் கண்டுகளிக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.