பிரமாண்டத்தின் பலன் கிடைத்ததா? ரணபலி திரைவிமர்சனம்
ராகுல் சங்ருதியான் இயக்கத்தில் வெளியான ரணபலி படத்தின் விமர்சனம் தொடர்பாக....

ரணபலி படத்தின் காட்சி - படம்: விடியோ கிளிப்
பிரமாண்டத்தின் பலன் கிடைத்ததா? ரணபலி திரைவிமர்சனம்
இந்திய உணவு தானியங்களை அதிகப்படியாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யத்துடிக்கும் பிரிட்டிஷாரின் முயற்சியை கதாநாயகன் முறியடிக்கும் முயற்சியே ரணபலி திரைப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தை இயக்குனர் ராகுல் சங்ருதியான் இயக்க, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1800களின் இறுதியில் நடக்கும் கதையில் ஆந்திராவில் இருந்து குறைவான அளவே தானியங்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி ஆகின்றன. பம்பாய், கல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் மதராஸ் பகுதியில் இருந்தும் அதை செய்து காட்ட பொறுப்பேற்கிறார் பிரிட்டிஷ் அதிகாரி அர்னால்ட் ஓஸ்லோ. அதற்காக இரட்டை வரி, சேமித்து வைக்கப்பட்ட தானியங்களை கைப்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார். இதனால் மக்களின் உணவுக்கு தேவையான தானியங்கள் கிடைக்காமல் போக செயற்கையான பஞ்சம் உருவாகிறது.
இதற்கு மத்தியில் ரணபலியாக வரும் விஜய் தேவரகொண்டா மக்களின் பஞ்ச நெருக்கடியை அறிந்து அவர்களுக்கு உணவு கிடைக்க போராடுகிறார். இறுதியில் அதை அவர் எப்படி சாதித்தார் என்பதே மீதிக் கதை.
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் திரைக்கதை என்பதால் அதற்கேற்ற உடல் மொழியை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. சண்டை காட்சிகளுடன், மக்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு தவிக்கும் இடங்களிலும் கவனம் ஈர்க்கிறார். முந்தைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட அவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. அவருக்கு இணையாக வரும் ராஷ்மிகா முதல் பாதியில் துள்ளல் மிகுந்த நடிப்பால் கட்டிப் போடுகிறார். விஜய்யுடன் முதல் காட்சியில் ஏற்படும் மோதல் அதன் பின் காதலாக பரிணமிக்கும் இடங்களில் அவரது நடிப்பு கைதட்டல் பெறுகிறது. விஜய் தேவரகொண்டாவிற்கு ஈடு கொடுத்து வில்லனாக மிரட்டி இருக்கிறார் மம்மி திரைப்படத்தில் நாம் ரசித்த அர்னால்டு ஓஸ்லோ. இவர்களுடன் வினோத் சாகர், சீலா ராஜ்குமார், ஈஸ்வரி ராவ் என பல நடித்துள்ளனர்
முதல் பாதி முழுக்க கதைக்குள் கொண்டு செல்ல திரைக்கதை வெகுவாக பயன்பட்டிருக்கிறது. சாமியாரின் குரல், அவரின் அழைப்பு என விறுவிறுப்பை கூட்டும் காட்சி அமைப்புகள் படத்திற்கு உதவியுள்ளன. குழந்தையை காப்பாற்றுவதற்காக குதிரையுடன் சென்று பிரிட்டிஷாரருடன் விஜய் போடும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியின் சற்று நீளமான திரைக்கதை சற்று பார்வையாளர்களை நெளியச் செய்கிறது. 1800களில் நடக்கும் கதைக்களம் என்பதால் அப்போது ஏற்பட்ட பஞ்சம் தொடர்பான காட்சிகளை திரையில் காட்டி இருக்கின்றனர். ஏனிந்த பலவீனமான உத்தி?
படத்திற்கு பெரிய பலமாக ஒளிப்பதிவு உள்ளது. பஞ்சம் தொடர்பான காட்சிகளை அதன் வீரியம் குறையாமல் திரையில் கடத்தியதே ஒளிப்பதிவின் நேர்த்தி. கலை இயக்கமும் நன்றாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக வந்திருக்கிறது ரணபலி.
ஆனால்...
முதல் பாதையுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பாதியில் வரும் அதிகப்படியான டிராமா காட்சிகள் படத்தை பின்னுக்கு இழுக்கின்றன. உணவு தானியத்தை பதுக்கும் நவாப், சிவராத்திரியில் மீட்கும் நாயகன் என சற்று தற்கால அரசியல் வாடை எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகளை நீக்கி இருக்கலாம். கதாநாயகன் காப்பாற்றுவான் என்றாலும் ஒட்டு மொத்த ஆங்கிலப்படைகளையும் ஓட விடும் அளவிற்கு அவர் பலசாலி என்பதெல்லாம் டூ மச். வரலாற்று ரீதியாக தவறாக புரிந்து புரிந்து கொள்ளக்கூடிய காட்சிகள் இடம் பெற்றிருப்பது கவனிக்கப்பட வேண்டியவை. விஜயின் நடிப்பு ஒரு கட்டத்திற்கு மேல் காட்டுக்கத்தலாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பஞ்சம் தொடர்பான காட்சிகளை காட்சிப்படுத்தும் அதே வேளையில் அவை உண்மைக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் வழக்கம் போல கமர்சியல் மசாலா படத்திற்கான அம்சம் மட்டுமே.
குறைகளை நீக்கிவிட்டு ஒருமுறை பார்க்கலாம் ரணபலி.
Summary
The plot of the film *Ranabali* revolves around the protagonist’s efforts to thwart the British, who are keen on exporting large quantities of Indian food grains to England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


