அனுஷ்கா, பிரபாஸ் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தச் செய்தி!

விட்டால், இவர்களது ரசிகர்களே, இருவருக்கும் திருமணம் நடத்தி முடித்து விடுவார்கள் போல, அத்தனை ஆர்வம் காட்டப்படுகிறது இவர்களது காதல் வதந்தியில்
அனுஷ்கா, பிரபாஸ் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தச் செய்தி!
Published on
Updated on
3 min read

பாகுபலி 1&2 திரைப்படங்களின் அசகாய வெற்றிகளின் பின் இந்தியத் திரையுலகில் குறிப்பாக தென்னிந்தியப் படவுலகில் இந்த இருவரைப் பற்றிய வதந்திகளுக்குப் பஞ்சமில்லை. விட்டால், இவர்களது ரசிகர்களே, இருவருக்கும் திருமணம் நடத்தி முடித்து விடுவார்கள் போல, அத்தனை ஆர்வம் காட்டப்படுகிறது இவர்களது காதல் வதந்தியில். 

நிஜத்தில் இவ்விருவரும் தனித்தனியாக அளித்த பல நேர்காணல்களிலும் ஒளிவு மறைவின்றிச் சொன்ன ஒரு விஷயம். தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். தொழில்முறையில் மிக இணக்கத்துடன் பணியாற்றி தங்களது படங்களை வெற்றிப்படங்களாக ஆக்கிக் கொள்ளும் முனைப்பு தான் தங்களுக்கிடையில் இருக்கிறதே தவிர; யாருக்கும் சொல்ல முடியாத கண்ணாமூச்சு காதல் இல்லை. பரஸ்பர புரிதல் இருப்பதால், நாங்கள் இணைந்து நடிக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் போல எளிதாக உணர்கிறோமே தவிர, எங்களுக்குள் காதல் என்பது வதந்தி! என்பதே.

ஆனால் அதை இந்தப் பாழும் ரசிகர்களும், வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பும் கூட்டமும் தான் கொஞ்சமும் ஏற்றுக் கொள்வதே இல்லை.

அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொண்டால் ரீல் ஜோடி, ரியல் ஜோடியாக அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றெண்ணி, ரசிகர்கள் அவர்களைப் பற்றிய வதந்திகள் நிஜமானால் தேவலாம் என இவர்களைப் பற்றிய வதந்திகளை மேலும், மேலுமென கொளுத்திப் போட முயல ஒரு கட்டத்தில் இருவருமே டென்சனின் உச்சத்திற்குச் சென்று வதந்திகளை மறுத்து சட்ட ரீதியாக வதந்தியை எதிர்கொள்வோம் என்றெல்லாம் செய்தியாளர்களுக்குப் பதிலளிக்க வேண்டியதாயிற்று.

காதல் வதந்திகளைப் பற்றி அனுஷ்காவின் எளிமையான பதில்;

‘ஒரு ஹீரோவுடன் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து விட்டால்... அவருடன் காதலா? என்கிறார்கள். அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை. நீங்கள் திரையில் பார்க்கும் ஹீரோ, நிஜத்திலும் அப்படியே இருப்பார் என்று ஏன் நம்புகிறீர்கள்? ரசிகர்களுக்குப் பிடித்த ஹீரோ என்றால் ஹீரோயின் முதற்கொண்டு எல்லாப் பெண்களும் அவரைக் காதலித்துத் தான் ஆக வேண்டும் என்பதில்லை. ஹீரோ அழகாக இருக்கிறார், ரசிகர்களுக்குப் பிடித்தமானவராக இருக்கிறார், எங்களது ஜோடிப்பொருத்தம் திரையில் அழகாக இருக்கிறது என்பதற்காகவெல்லாம் நிஜ வாழ்வில் ஒரு ஹீரோவை, ஒரு ஹீரோயின் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஜோடிப்பொருத்தம் நன்றாக இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒருவரை திருமணம் செய்து கொண்டால், பிறகு மிச்ச வாழ்க்கையை என்ன செய்வது? அழகழகான ஃபோட்டோக்களாக எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கவா முடியும்? வாழ்க்கையில் அதைத் தாண்டியும் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? அதற்கெல்லாம் யார் பொறுப்பு? ரசிகர்களா? அல்லது வதந்தி கிளப்புபவர்களா? அதனால் தயவு செய்து இப்படியெல்லாம் வதந்தி கிளப்பாதீர்கள்.’

பிரபாஸின் பதில்...

அனுஷ்கா என்னுடைய நல்ல நண்பர். அனுஷ்காவை மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினர் அனைவரையுமே எனக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த திரைப்படங்களில், அனுஷ்கா, தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டேனும் சிறந்த உழைப்பை வழங்கத் தயங்கமாட்டார். அவரால் யாருக்கும் எந்தவிதமான தொல்லைகளும் நேரிடக் கூடாது என்று எண்ணக்கூடியவர் அவர். இப்படி ஒரு பெண்ணைக் காண்பது அபூர்வம். அதனால் அனுஷ்கா என்றால் எனக்கு மட்டுமல்ல, திரையுலகினர் அனைவருக்குமே அவருடன் பணிபுரிவதில் விருப்பம் தான். அவ்வளவு தானே தவிர, அவரோடு எனக்குக் காதல் என்பதெல்லாம் வதந்தி. ரசிகர்கள் விரும்பினால் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வீர்களா? என்றொரு ரசிகர் நேர்காணலொன்றில் கேட்டிருந்தார். நான் அவருக்கு அளித்த பதில்;

ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று திருமணம் செய்து கொண்டால், நாளை அந்தத் திருமணத்தால் ஏதாவது பிரச்னை என்றாலும் அந்த ரசிகர்களே வந்து தீர்த்து வைப்பார்களா? என்று கேட்டேன். என் திருமணத்தைப் பற்றி இப்போது வரை எனக்கு எந்த விதமான ஐடியாக்களும் இல்லை. திடீரென்று தோன்றலாம். தோன்றும் போது பெண் யாரென்று நிச்சயம் அறிவிப்பேன். அதுவரை ஒரு நல்ல நட்பை கொச்சையாக்காமல், வதந்தி பரப்பாமல் இருந்தால் சந்தோசம் என்றார்.

இருவருக்கிடையிலும் காதல் இல்லையே தவிர; இருவருக்குமே தங்களது வாழ்வில் வேறொருவரிடத்தில் இனம் புரியாத கிரஷ் இருந்திருக்கிறது; அந்த கிரஷ் பற்றி அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பாருங்கள்;

அனுஷ்கா...

எனக்கு ராகுல் திராவிட் என்றால் கொள்ளை இஷ்டம். சிறு வயது முதல் அவரது விளையாட்டை ரசித்து வருகிறேன். ஒரு கட்டத்தில் அவர் மீது பெரிய காதலாகி விட்டது. அந்த அளவுக்கு எனக்கு திராவிட் என்றால் இஷ்டம். என தனது டோலிவுட் நேர்காணலொன்றில் அனுஷ்கா தெரிவித்திருக்கிறார். 

இதை அனுஷ்கா, வழக்கமான கிரிக்கெட் ரசிகர்களின் தொனியில் கேஷுவலாகவே சொல்லி இருக்கலாம். ஆனால், ஆனால், வதந்தியாளர்கள் உடனடியாக கிரிக்கெட் வீரர்களைக் காதல் மணம் புரிந்த பாலிவுட், டோலிவுட் நடிகைகளின் லிஸ்டைத் தயாரிக்கத் தொடங்கி விட்டது. அஸாருதீனை மணந்து கொண்ட சங்கீதா பிஜ்லானி முதல், அப்பா, தாத்தா காலத்தில் பட்டோடியை காதல் மணம் புரிந்த சர்மிளா தாகூர், விராட் கோலியுடன் கிசுகிசுக்கப்படும் அனுஷ்கா ஷர்மா, முதலில் தோனியோடும் பின்பு யுவராஜுடனும் காதலில் விழுந்ததாகக் கிசுகிசுக்கப்பட்ட தீபிகா படுகோன், ஹர்பஜன் சிங், கீதா பாஸ்ரா என்றெல்லாம் பட்டியலைத் தூசு தொடங்கி விட்டார்கள் சில ஆர்வக் கோளாரர்கள். விட்டால் முன்னரே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் அருமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் ராகுல் திராவிட்டிடம் அனுஷ்கா உங்களைக் காதலிக்கிறாராமே? அதற்கு உங்களது பதில் என்ன? என்று கேட்டு அவரையும் அதிரடிப்பார்கள். எல்லாம் வல்ல இணையம் அதற்கும் பயன்படலாம்.

பிரபாஸ்...

பிரபாஸைப் பொருத்தவரை அவர் சென்னை டான்பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில் தனது ஆங்கில ஆசிரியையின் மேல் தனக்கு மிகப்பெரிய கிரஷ் இருந்ததாக தனது நேர்காணலொன்றில் தெரிவித்திருந்தார். இப்போதும் கூட அந்த ஆசிரியையின் முகம் தன் கண்ணுக்குள் நிற்பதாக வெட்கத்துடன் தன் ரசிகைகளுக்குப் பதிலளித்திருந்தார் பிரபாஸ். எதிர்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? எனும் அவரது எதிர்பார்ப்பு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில்; அழகெல்லாம் அடுத்த பட்சம், எனக்கு மனைவியாக வரப்போகிறவர், செயற்கைத்தனங்கள் எதுவுமற்ற நல்ல மனம் படைத்த பெண்ணாக இருக்க வேண்டும். அன்பானவராக இருக்க வேண்டும். எனக்கு அவரைப் பிடித்திருக்க வேண்டும். அவ்வளவு தான். அப்படி ஒரு பெண்ணை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்ததும் திருமணம் செய்து கொள்வேன். என்றார்.

தங்களது காதல், மற்றும் திருமணம் குறித்த தீர்மானங்களில் அவர்கள் இருவரும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பிறகும் வதந்திகளுக்கு மட்டும் ஓய்வே இருப்பதில்லை என்றால் அதற்கு அர்த்தம் அவர்களுக்குள் காதல் என்பதல்ல, இருவருமே தங்களது கேரியரின் உச்சத்தில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே! காய்த்த மரம்; கல்லடி கதை தான்! வேறென்ன?!

Image courtesy: India TV

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com