ஸ்ரீரெட்டியின் நியாயங்கள்!

என்னுடைய போராட்டமெல்லாம், சினிமாவில் நடிக்க வரும் பெண்களை, அவர்களது வேலையை நிம்மதியாகச் செய்ய விடுங்கள். அவர்கள் நடிக்கத்தான் வருகிறார்களே தவிர, உங்களோடு படுப்பதற்காக அல்ல. அந்தப் பெண்களுக்கும்
ஸ்ரீரெட்டியின் நியாயங்கள்!

தற்போது கோலிவுட்டை மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி தமிழ் இணைய ஊடகங்களுக்கு தொடர்ந்து நேர்காணல்களை அளித்து வருகிறார். அதில் அவர் தன்னைப் பற்றித் தெரிவித்திருக்கும் பல தகவல்கள், ஐயோ பாவம் இந்தப் பெண்ணுக்கு இப்படியா நடக்கனும்? என்ற ரேஞ்சில் இருந்தாலும்... அவர் தனது ‘காஸ்டிங் கெளச்’ போராட்டத்துக்காக முன்வைத்திருக்கும் காரணம் நியாயமானதாகவே இருக்கிறது. 

ஓவர் டு ஸ்ரீரெட்டி...

‘திரைப்பட உலகில் நுழையும் முன் அது மோசமான உலகம் என்று எனக்கும் தெரிந்தே இருந்தது. ஆனால், அது இந்த அளவுக்கு இருக்கும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருமுறை நானும், எனது முன்னாள் பாய் ஃப்ரெண்டும் ஒரு பஃப்புக்கு சென்றிருந்தோம். அங்கே ராணாவும், திரிஷாவும் வந்திருந்தார்கள். இருவரும் மது அருந்திக் கொண்டும் நடனமாடிக் கொண்டும் இருந்ததைக் கண்ட என் பாய் ஃப்ரெண்ட், என்னை மறந்து த்ரிஷாவின் புகழைப் பாடிக் கொண்டிருந்தார். அவர் நடித்த அத்தனை திரைப்படங்களையும் குறிப்பிட்டு, அந்தப் படத்தில் அவர் அப்படி நடித்திருக்கிறார்.வர்ஷம் படத்தில் எத்தனை கியீட் தெரியுமா? என்றெல்லாம் கூறி என் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தார். எனக்கு உண்மையிலேயே அப்போது த்ரிஷாவைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. நானும் லைம்லைட் நடிகையானால் என்னைப் பார்த்தும் ரசிகர்கள் இப்படித்தான் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். த்ரிஷா இஸ் ஸோ லக்கி என்று நான் நினைத்தேன். அபோது தொடங்கின எனது தவறுகள்.

முதல் வேலையாக எனது செய்தி வாசிப்பாளர் வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டு சினிமாவுக்குள் நுழைந்தேன். என் குடும்பத்தினருக்கு நான் சினிமாவில் நுழைவதில் சுத்தமாக விருப்பமில்லை. என் அம்மா,  ‘உனக்கு சினிமா வேண்டாம், அங்கே சென்றால் உன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? உன் எதிர்காலம் கேள்விக்குறியாகும்’ என்றெல்லாம் என்னை எச்சரித்தார். என்னுடையது அப்பர் மிடில் கிளாஸ் குடும்பம். அப்பாவுக்கு ஸ்வீட்ஸ் பிசினஸ், அம்மா ஹோம் மேக்கர். அக்கா பொட்டீக் வைத்திருக்கிறார். அண்ணா லண்டனில் வசிக்கிறார். நானும் என்னுடைய செய்தி வாசிப்பாளர் வேலையில் அப்படியே தொடர்ந்திருந்தால் இந்நேரம் நிம்மதியாக இருந்திருப்பேன். நான் சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்று நினைத்தது தான் முதல் தவறு. அதனால் கடந்த பத்தாண்டுகளாக என் குடும்பம் என்னை ஒதுக்கி வைத்து விட்டது. அவர்கள் என்னுடன் இப்போது தொடர்பில் இல்லை. 

குடும்பத்தின் சப்போர்ட் இல்லாத காரணத்தால் என்னுடைய அத்தனை தேவைகளையும் நானே தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். எனக்கும் பசிக்குமில்லையா? சாப்பிட சம்பாதிக்க வேண்டும். என் வீட்டுக்கு வாடகை தர வேண்டும். என் மாதாந்திர தவணைகளைக் கட்ட வேண்டும். நானொரு நடிகை என்பதால் தினமும் ஜிம்முக்குச் செல்ல வேண்டும். இத்தனையையும் தொடர்ந்து செய்ய பணம் வேண்டும். அதற்காகத் தான் நான் சிலரது செக்ஸுவல் இன்விடேஷன்களுக்கு ஓக்கே சொல்ல வேண்டியதாயிற்று. நான் அவர்களை நம்பினேன். இவர்கள் எனக்கு வாய்ப்பு தருவார்கள் என. ஆனால், அவர்கள் கடவுளின் பேரில் சத்தியம் செய்து என்னை ஏமாற்றினார்கள். அப்படிப் பட்டவர்களைத்தான் இப்போது தோலுரிக்க நினைக்கிறேன். அதற்காக அவர்கள் எனக்கு சினிமாவில் சொன்னபடி வாய்ப்பளித்திருந்தால் நான் இந்தப் போராட்டத்தில் இறங்கியிருக்க மாட்டேனோ?! என்ற கேள்வி அனாவசியமானது.

என்னுடைய போராட்டமெல்லாம், சினிமாவில் நடிக்க வரும் பெண்களை, அவர்களது வேலையை நிம்மதியாகச் செய்ய விடுங்கள். அவர்கள் நடிக்கத்தான் வருகிறார்களே தவிர, உங்களோடு படுப்பதற்காக அல்ல. அந்தப் பெண்களுக்கும் கணவர்கள் உண்டு. அவர்கள் அவர்களது கணவருடனோ, அல்லது மனதுக்குப் பிடித்தமானவர்களுடனோ மட்டுமே உறங்கட்டும். அவர்களை பட வாய்ப்புகள் எனும் தூண்டிலில் சிக்க வைத்து சீரழித்து வாழ்க்கையை நிர்மூலமாக்காதீர்கள். என்பது தான் எனது கோரிக்கை.

நான் ஏன் நானியை இத்தனை அழுத்தமாகக் குற்றம் சாட்டுகிறேன் என்றால், நானி வெளியில் காட்டும் முகம் வேறு. உண்மையான நானி மிகவும் மோசமான நபர். அவரும் அவரது நண்பர்கள் குழுவும் சேர்ந்து என்னை போதை மருந்து உட்கொள்ளச் செய்து செக்ஸில் ஈடுபடுத்தினார்கள். மனிதாபிமானமற்ற அச்செயல் என்னை இப்போதும் பயமுறுத்தக்கூடிய ஒன்று. ஆனால் அவர்கள் வெளிஉலகுக்கு தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொள்கிறார்கள். இதை எப்படி ஜீரணிப்பது? அப்படியானால் நான் செய்தது மட்டும் தான் தவறா? அவர்கள் செய்தவை இந்த சமூகத்தின் முன் சரியான செயலா? குடும்பத்தைப் பிரிந்து தனித்திருக்கும் நான் எனது கேரியரில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள சிலருக்கு இணங்கியது தவறு என்றால் இவர்கள் செய்தது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? 

நானி மட்டுமல்ல, சுரேஷ் புரடக்‌ஷன்ஸ் அபிராம் டகுபாட்டி (ராணாவின் தம்பி) ஒருமுறை என்னைக் கேட்டார், நீயெல்லாம் எந்த விதத்தில் எனக்கு சமம்? என் கேர்ள் ஃப்ரெண்ட் உன்னைப் போல வெர்னா காரில் வந்து இறங்கக் கூடியவளாகத் தான் இருப்பாள் என்று நீ நினைக்கிறாயா? நான் நினைத்தால் ஆயிரம் பெண்கள் வருவார்கள் என்னைத் தேடி. உன்னையெல்லாம் என் வீட்டுக்கு அழைத்துப் போய் அறிமுகப்படுத்தி வைக்கும் அளவுக்கு நீ வொர்த் அல்ல’ என்றார். என்னுடனான உறவை அம்பலப் படுத்தப் போகிறாயா? தாராளமாகச் செய்து கொள். அதனாலெல்லாம் என்னுடைய ஒரு ------- கூட பிடுங்க முடியாது என்றார்’ அவர் சொன்னது தான் இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. தெலுங்கானா அரசின் மீதான நம்பிக்கையை நான் இழந்து விட்டேன். மா அசோஸியேஷன் மீதான நம்பிக்கையையும் இழந்து விட்டேன். ஆனால், நடிகர் சங்கம் அவர்களைப் போல ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்ளாது என்று நினைத்து தான் இப்போது கோலிவுட்டில் இருக்கும் சிலரது முகத்திரையைக் கிழித்திருக்கிறேன். இனிமேலும் கிழிப்பேன். எனக்கான நியாயம் கிடைக்கும் வரை இது தொடரும்.

பெரிய நடிகைகள் எனது போராட்டத்துக்கு ஆதரவு தந்திருக்கிறார்களா? என்று கேட்கிறீர்கள்.

இப்போது வரை இல்லை. சினிமா ஒரு பிசினஸ் உலகம். அங்கே தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்று வரும் எந்த நடிகையும் என்னுடன் தெருவில் இறங்கிப் போராட முன் வரமாட்டார். என்று எனக்குத் தெரியும். அப்படி இறங்கிப் போராட நினைத்தால் அடுத்து அவர்களுக்கு சினிமா எதிர்காலமே இல்லாமலாகி விடும். அதற்கு பயந்து கொண்டு அவர்கள் வாயைத் திறப்பதில்லை. நயன்தாரா, த்ரிஷா, சமந்தாவெல்லாம் வாயைத் திறந்தால் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வரலாம். ஆனால், அவர்கள் பேச மாட்டார்கள்.

நான் ஏன் வந்திருக்கிறேன் என்றால், நான் ஏமாற்றப்பட்டேன். இதைப்போல இனியொரு பெண் சினிமாவை நம்பி வந்து தயாரிப்பாளர் முதல் இயக்குனர், ஹீரோக்கள், வசனகர்த்தாக்கள், கோ ஆர்டினேட்டர்கள். மேக்அப் மேன்கள் வரை எல்லோரிடமும் ஏமாந்து தன் வாழ்க்கையக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்பதால்.

தமிழ் சினிமா உலகைப் பொருத்தவரை, விஷால், நானிக்கு வக்காலத்து வாங்குகிறார். அவருக்கு நானியை பார்த்தால் நல்லவராகத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்கு அப்படியல்ல. எனக்குத் தெரிந்த நானி மோசமானவர். அதைப் பற்றி என்னிடம் விசாரிக்காமல் நானிக்காக வக்காலத்து வாங்குவது நியாயம் அல்ல. நடந்தது என்ன? யார், யாரெல்லாம் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்களோ அவர்களைப் பற்றியெல்லாம் நடிகர் சங்கம் விசாரிக்க முன் வரவேண்டும். அதற்காகத் தான் நான் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறேன். என் குடும்பம் பற்றியோ, திருமணம் பற்றியோ, எதிர்காலம் பற்றியோ, திரை வாய்ப்புகள் பற்றியோ கூட யோசிக்காமல் துணிந்து நான் காஸ்டிங் கெளச் குறித்துப் போராட பொதுவெளிக்கு வந்தது இதனால் தான்.

என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.’ 

- என்கிறார் ஸ்ரீரெட்டி.

அவர் எந்த விதத்தில் போராடினாலும் சரி. சினிமா உலகில் அவர் சிலர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு மட்டும் எந்த விதப் பலனும் இதுவரை கிட்டியதாகத் தெரியவில்லை.

ஸ்ரீரெட்டி எதிர்க்கும் சினிமா பெருந்தலைகள் வட்டாரத்தில்...

‘நாங்கள் அப்படித்தான் இருப்போம், எங்களால் ஆளப்படும் திரை உலகமும் இப்படித்தான் இருக்கும். உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்’ அதனாலெல்லாம் எங்களது -------- ஐக்கூட பிடுங்க முடியாது எனும் அறைகூவலும் அலட்சியமும் மாத்திரம் தான் இப்போது வரை நீடிக்கிறது.

ஸ்ரீரெட்டிக்கும் டோலிவுட், கோலிவுட் சினிமா பெரு முதலைகளுக்குமான டக் ஆஃப் வார் இப்போதைக்கு ஓயாது போல் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com