Enable Javscript for better performance
Bigboss season 2 interes|பிக் பாஸ் சீஸன் 2 சுவாரஸ்யங்களும், பொறுப்பான பொதுஜனத்தின் புது கவலைகளும்...- Dinamani

சுடச்சுட

  

  பிக் பாஸ் சீஸன் 2 சுவாரஸ்யங்களும், பொறுப்பான பொதுஜனத்தின் புது கவலைகளும்...

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 18th June 2018 06:35 PM  |   அ+அ அ-   |    |  

  bigboss_season_2

   

  பிக் பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேற்று (17/6/18) முதல் தொடங்கியுள்ளது. இந்த ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளர், வழக்கம்போல சீஸன் 1-ஐ தொகுத்து வழங்கிய அதே கமல் ஹாசன்.

  பிக் பாஸ் சீஸன் 2 போட்டியாளர்கள் லிஸ்ட்...

  1. இம்முறை போட்டியில் கலந்துகொள்ள வந்தவர்களுள் முதல் போட்டியாளராக அறிமுகமானார், இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படப் புகழ் யாஷிகா. இம்முறை அவர்தான் பிக் பாஸ் சீஸன் 2-ன் இளம்போட்டியாளர். அவரது வயது 18.
  2. அவரையடுத்து இளம் நடிகர் மஹத். பிக்பாஸ் சீஸன் 2 பங்கேற்பாளர்களுள் ஒருவராக அறிமுகமானார்.
  3. அவரைத் தொடர்ந்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படப் புகழ் நடிகர் டேனியல் அனி போப்.
  4. மூத்த வில்லன் நடிகர் பொன்னம்பலம்.
  5. அவன் இவன் நாயகிகளுள் ஒருவரான நடிகை ஜனனி ஐயர்.
  6. விஜய் டிவியில் ஒளிபரப்பான பழைய ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஹலோ தமிழா விஜே & பிக் எஃப்.எம். ஆர்ஜேவும் நடிகையுமான மமதி சாரி.
  7. மூத்த எழுத்தாளர், பதிப்பாளர் கம் பத்திரிகையாளரான சாவியின் பேத்தியும் ஆர்ஜேவுமான வைஷ்ணவி. 
  8. விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் வாய்ஸ் டிரெய்னர் அனந்த் வைத்யநாதன்.
  9. பாடகியும் பழம்பெரும் நடிகர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தியுமான ரம்யா.
  10. கேரக்டர் கம் காமெடி ஆர்டிஸ்ட் சென்ராயன்.
  11. மெட்ராஸ், கபாலி திரைப்படப் புகழ் ரித்விகா.  
  12. நடிகை மும்தாஜ்.
  13. தாடி பாலாஜி.
  14. அவரது மனைவி நித்யா.
  15. ரியாஸ்கான் - உமா தம்பதியினரின் மூத்த மகன் சாரிக் ஹசன்.
  16. தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் திரைப்படப் புகழ் ஐஸ்வர்யா தத்தா.

  ஆகியோர் பிக் பாஸ் சீஸன் 2 போட்டியாளர்களாக நேற்று கமல் ஹாசனால் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் காலெடுத்து வைத்தனர்.

  லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்... 17-வது போட்டியாளராக இல்லை.. இல்லை விருந்தினராக, சீஸன் 1 புகழ் ஓவியாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

  ஆரம்பமெல்லாம் அமர்க்களமாகத்தான் இருக்கிறது.

  கலாட்டாக்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத்தானே கட்டவிழும்.

  பிக் பாஸ் சீஸன் 2-ன் முதல் நாளான நேற்றைய நிகழ்வு, கமல்ஹாசனின் அறிமுகப்பேச்சோடு துவங்கியது.

  பிக் பாஸ் சீஸன் 1 தொடங்குகையில் கமல், அரசியல் கட்சி தொடங்கியிருக்கவில்லை. நாடறிந்த நடிகராக மட்டுமே சின்னத்திரையில் முதல்முறையாக கமல் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானார். ஆனால் இம்முறை அப்படி அல்ல. இப்போது கமல் தனது அரசியல் கட்சியான ‘மக்கள் நீதி மய்யத்தை’ தொடங்கிவிட்டார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே, ஒரு அரசியல் கட்சியின் தலைவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பங்கேற்று நடத்தும் முதல் ரியாலிட்டி ஷோ இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஏன் அப்படி என்றால், சொல்வதற்கு கமலிடம் ஒரு நல்ல காரணமும் இருக்கிறது. அதையும் நேற்று அவரே தன் வாயால் பிக் பாஸ் மேடையில் சொன்னார்.

  ‘பெரியதிரை என்பது தனது தாய்வீடாக இருந்தபோதும், அதில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளிவந்தால் மட்டுமே அது சுமார் 1000 திரையரங்குகளில் வெளியிடப்படும். அப்படி வெளியாகும் திரைப்படங்களையும் பொதுமக்கள் அனைவருமே சென்று பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சின்னத்திரை அப்படியல்ல. தினந்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் நம்மைப் பார்ப்பார்கள். பெரிய திரையைவிட சின்னத்திரையில் நடிகர்களுக்கு கிடைக்கக்கூடிய பிரபல்யம் அதிகம். எனவே, கடந்த முறை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தயக்கம் காட்டியவர்கள்கூட இம்முறை ஆர்வமுடன் பங்கேற்க முன்வந்திருக்கிறார்கள்’

  என்ற ரீதியில் கமல் பேசினார். 

  அவரது அறிமுக உரைக்கு ஏற்றாற்போலவே, நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் பேச்சும் இருந்தது. ஜனனி ஐயர், மஹத், ரித்விகா உள்ளிட்டோர் பெரிய திரையைக் காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மூலமாக இன்னும் அதிகமாகவும், விரைவாகவும் ரசிகர்களைத் தங்களால் சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையில் சீஸன் 2-ல் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

  நேற்றைய பிக்பாஸ் சீஸன் 2 அறிமுகப் பங்கேற்பாளர்களில் கவனம் ஈர்த்தவர்கள் என்று குறிப்பிட வேண்டுமானால்...

  அவர்களுள் முதல் நபர் நடிகை மும்தாஜ்

  தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான மும்தாஜ், தான் இதில் கலந்துகொண்டதற்கான காரணமாகச் சொன்னது, பிரபல்யத்தை அல்ல. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று வாழ்க்கை ஒரே மாதிரியாகச் சென்றுகொண்டிருந்த நிலையில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று கருதியதால் பிக்பாஸ் 2-ல் பங்கேற்றதாகக் குறிப்பிட்டார். தனது திரை வாழ்வில் தான் பார்க்காத ஏற்ற, இறக்கம் இல்லை. இனி புதிதாக தன்னைப் பற்றி என்ன விமர்சனம் வந்துவிடப்போகிறது. அதெல்லாம் தன்னைப் பாதிக்கப்போவதில்லை. பிக் பாஸில் கலந்துகொள்வதால் தனக்கொரு புது அனுபவம் கிடைக்கும் என்று மட்டுமே தான் இங்கு வந்ததாகக் கூறினார் மும்தாஜ். அவரைப் பார்க்க, பிக்பாஸ் சீஸன் 1 பங்கேற்பாளரான நடிகை நமீதாவின் இடத்தை சீஸன் 2-ல் நிரப்ப வந்தவர் போலத் தோன்றினாலும், முதல் நாளிலேயே ஒருவரைப் பற்றி எதையும் தீர்மானமாகக் கூறிவிட முடியுமா என்ன?!

  வில்லன் நடிகர் பொன்னம்பலம்

  மைக்கேல் மதன காமராஜன், நாட்டாமை, முத்து, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த வில்லன் கம் காமெடி நடிகர்களில் ஒருவரான பொன்னம்பலத்தை, வெகு நாட்களுக்குப் பின் பிக்பாஸ் சீஸன் 2-ல் காண்கையில் அவருக்கு சுகரோ என்று தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. மனிதர் அத்தனை மெலிந்திருந்தார். பல திரைப்படங்களில் ரஜினி, கமல், சரத்குமாரை தூக்கிப் பந்தாடிய உருவமா இது என்று சந்தேகமாகிவிட்டது. மனிதர் குடும்பத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒரு வில்லன் நடிகருக்கு வாழ்க்கை நிதர்சனமில்லை. எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால், தான் இல்லாமலும் தன் குடும்பத்தால் ஜீவிக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தவே தான் பிக் பாஸ் சீஸன் 2-ல் கலந்துகொண்டதாகக் கூறினார். அந்தவகையில், பிக் பாஸ் சீஸன் 1-ல் பல வாரங்கள் தாக்குப்பிடித்து பப்ளிக் ஓட்டில் ஏராளமான ரசிகர்களைச் சம்பாதித்த நடிகர் வையாபுரியை ஞாபகப்படுத்தினார் பொன்னம்பலம். 

  மூன்றாவதாக கவனம் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன்

  அதென்னவோ கடந்த பிக் பாஸில் நடிகர் பரணி விட்டுச் சென்ற இடத்தை இவர் செவ்வனே நிரப்புவாரோ என்றொரு ஐயம். அறிமுகத்தின்போதே வெள்ளந்தியாக கமலிடம், தான் நடிக்க சான்ஸ் தேடி சென்னைக்கு வந்த புதிதில், கமல் படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்ற அனுபவத்தை எல்லாம் புட்டுப் புட்டு வைத்துவிட்டார். பாவம் மேடையில் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்று அறியாத வெள்ளந்திப் பேச்சு. அதற்காக கமலிடம் அட்வைஸ் வாங்கிக் கட்டிக்கொண்டதோடு, பிக் பாஸ் வீட்டில் தான் தரையில் அமர்ந்து சாப்பிடலாமா? என்று கோரிக்கை வைத்துவிட்டு உள்ளே நுழைந்திருக்கிறார். பார்க்கலாம்... இவர் பிக் பாஸ் வீட்டில் எத்தனை நாட்கள் தேறுவார் என்று யோசிக்கையில், சற்று சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

  மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் & பதிப்பாளர் சாவியின் பேத்தி வைஷ்ணவி

  தமிழ் வாசகப் பரப்பில் எழுத்தாளர் சாவியைத் தெரியாதவர்கள் யார்? அவரது  ‘வாஷிங்டனில் திருமணம்’ ஒன்று போதுமே, சாவியைப் பற்றி அறியாதவர்களும் அவரைப் பற்றி அறிந்துகொள்ள. நேற்றைய பிக் பாஸில் சாவியின் பேத்தி வைஷ்ணவியும் கவனம் ஈர்த்தார். காரணம், அவரது தாத்தாவின்  எழுத்தின் மீதான அபிமானமாக இருக்கலாம்.

  விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ்  வாய்ஸ் ட்ரெய்னர் அனந்த் வைத்யநாதன்

  சிஷ்ய கோடிகள் புடை சூழ பிக் பாஸ் சீஸன் 2 அரங்கில் பிரசன்னமான அனந்த் வைத்யநாதனை தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சூப்பர் சிங்கரில் ஜட்ஜாக வந்து பல இளம் பாடகர்களின் குரலைப் பண்படுத்தியவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் தங்கள் குரு, திரும்பி வருகையில் ஒரு துணையுடன் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவரது சிஷ்யகோடிகளைப் பார்த்து ஒரு நொடி ஜெர்க் ஆகிவிட்டாரோ மனிதர்!

  பாடகி என்.எஸ்.கே. ரம்யா

  ‘நீதானே என் பொன் வசந்தம்’ திரைப்படத்தில் வரும் ‘சாய்ந்து... சாய்ந்து நீ பார்க்கும் போது’ பாடலைப் பாடிய அருமையான குரலுக்குச் சொந்தக்காரர். அழகான குரலுக்கு மட்டுமல்ல, பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணனுக்கும், பழம்பெரும் சூப்பர் ஸ்டார் கே.ஆர். ராமசாமிக்கும்கூட இவர் உறவுக்காரர்.

  ரம்யாவை ஒரு பாடகியாக அறிந்தவர்களுக்குகூட இந்தச் செய்தி புதுமையாகத்தான் இருக்கக்கூடும். என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி என்றுகூட சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், இவர் கே.ஆர். ராமசாமிக்கும் பேத்தி என்று பலருக்குத் தெரிந்திருக்காது. கே.ஆர். ராமசாமி எம்ஜிஆர், சிவாஜியெல்லாம் ஹீரோக்கள் ஆவதற்கு முன்பே பாகவதர் காலத்தில் தமிழ்த்திரையை ஆண்ட கதாநாயகர்களில் ஒருவர். பராசக்தியில் சிவாஜி பேசி நடித்து அப்ளாஸ் வாங்கிய கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் உருவான கோர்ட் சீன் டயலாக்கை, பராசக்தி மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்ட ஆரம்பகாலங்களில் ஆக்ரோஷம் பொங்க முதலில் பேசி கைதட்டல் பெற்ற அதிர்ஷ்டசாலி இவர். இவரும் என்.எஸ்.கே.வும் இணைந்து கொழும்புவுக்குச் சென்றெல்லாம் இசைக் கச்சேரிகள் நடத்தியிருக்கிறார்கள். அந்த நட்பே பிறகு என்.எஸ்.கே. மகன், கே.ஆர். ராமசாமியின் மகள் திருமணத்துக்கு வித்திட்டிருக்கலாம். இதோ அவர்களது மூன்றாம் தலைமுறையாக பாடகி என்.எஸ்.கே. ரம்யா இன்று நம்முன் பிக் பாஸ் சீஸன் 2-ல். 

  தாடி பாலாஜி & நித்யா

  விஜய் டிவி கலக்கப்போவது யாரு காமெடி புகழ் தாடி பாலாஜியின் வாழ்வில் கடந்த சில வருடங்களாக நீடித்துவரும் பல குழப்பமான சங்கடங்களுக்கு மத்தியில், தற்போது அவரது மனைவி நித்யாவும், பாலாஜியும் பிரிந்து தனித்து வாழ்கிறார்கள். மகள் போஷிகாவின் மீதான உரிமை யாருக்கு என்பதில் கணவன், மனைவி இடையே வழக்கு. பெண்ணை வளர்க்கும் பொறுப்பு யாருக்கெனத் தெரிந்துகொள்ளும்முன், மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழும் எதிர்பார்ப்புடன் இருக்கும் பாலாஜி, பிக் பாஸ் சீஸன் 2-ல் கலந்துகொண்டதில் ஆச்சர்யம் இல்லாவிட்டாலும், அதே நிகழ்ச்சியில் அவரது மனைவி நித்யாவும் போட்டியாளராகக் கலந்துகொண்டிருப்பது நிச்சயம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஆச்சர்யம்தான். இந்த ஜோடி பிக் பாஸ் சீஸன்-2க்குப் பிறகு இணையுமா இல்லையா என சீஸன் முடிந்தால் தெரியும்.

  ரியாஸ்கான் - உமா தம்பதியின் மகனும் நடிகை கமலா காமேஷின் பேரனுமான சாரிக் ஹசன்

  கால்பந்தாட்ட வீரரான இந்த இளைஞர் பிக் பாஸில் கலந்துகொண்ட ஆண் போட்டியாளர்களில் இளையவராக இருக்கலாம். பாட்டி கமலா காமேஷின் ஆசைக்காக பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் சாரிக் சாதிப்பாரா எனப் பார்க்கலாம்.

  மமதி சாரி

  இன்றைக்கு விஜய் டிவியில் டிடி எத்தனை பிரபலமான தொகுப்பாளராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு ஒருகாலத்தில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியின் படுபிரபலமான தொகுப்பாளராகப் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தவர் மமதி சாரி. மமதியின் அழகான தமிழுக்கு அன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் கலக்காமல் அழகுத் தமிழில் நிகழ்ச்சியை மமதி நடத்திச்செல்லும் அழகே அழகு. ஆனால், இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை மமதியை தொலைக்காட்சி வட்டாரத்தில் எங்கும் காண முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ராதிகாவின் வாணி ராணி தொடரில் திடீரென பப்லுவின் ஆஸ்திரேலியக் காதலி கோகிலாவாக சின்னத்திரையில் ரீ எண்ட்ரி ஆனார். ஆனவர் தொடர்ந்து பிக் பாஸ் சீஸன் 2-ல் வந்து குதித்திருக்கிறார்.

  இவர்களைத் தவிர டேனியல் அனிபோப், மஹத், யாஷிகா, ஜனனி ஐயர், ரித்விகா என எல்லோருமே ஒருவகையில் அவரவர் பெரிய திரையில் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வாயிலாக மக்களிடையே நன்கு அறிமுகமானவர்கள் தான்.

  16 போட்டியாளர்களுடன் விருந்தினராக ஓவியாவும் நேற்று பிக் பாஸ் வீட்டில் தஞ்சமடைந்திருக்கிறார்.

  இனி பிக் பாஸ் வீட்டில் இவர்களில் யாரும் 100 நாட்களுக்கு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

  இனி வரும் நாட்களில் இரவுகளில் பிக் பாஸ் வீட்டில் நடக்கப்போகும் கலாட்டாக்களை கண்டு ரசிப்பதைத் தவிர, தமிழ்கூறும் நல்லுலகில் சின்னத்திரை ரசிகர்களுக்கு வேறு ஆகச்சிறந்த முக்கிய வேலைகள் எதுவும் இருக்கப்போவதில்லை.

  கடந்தமுறை ஓவியா ஆர்மி உருவாக்கி ஓவியாவின் புகழை ஓஹோவெனப் பரப்பிய ஆர்வலர்கள், இன்றைய போட்டியாளர்களில் யாருக்கு ஆர்மி ஆரம்பித்துச் சிறப்பிக்கப்போகிறார்கள் என்பதும் இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.

  ஆக மொத்தம், பிக் பாஸ் சீஸன் 2 ஜுரம் தொற்றிவிட்டது. 

  ஒரு ரியாலிட்டி ஷோவை ரசிப்பது தவறில்லை. ஆனால், அந்த ரசனையின் எல்லையென்பது பொதுமக்களிடையே சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடும், கேள்வியெழுப்பும் மனப்பான்மையைக்கூட தள்ளி வைத்துவிட்டு, சதா பிக் பாஸ் பற்றியே பேசுவதாகவும், விவாதிப்பதாகவுமே அமைந்துவிடக் கூடாது என்பதுதான், பொறுப்புள்ள பொதுஜனத்தின் பொதுவான கவலை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai