மெகா சீரியல் ரசனைக்கு புதுப்பாதை வகுத்துக் கொடுப்பாளா இந்தப் பேரழகி? எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்!

தமிழ் சீரியல் உலகில் பல மெகாத்தொடர்கள் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் வெற்றிகரமானவையாகக் கருதப் பட்டிருக்கலாம். ஆனால் அவை எல்லாமும் தொலைக்காட்சி நேயர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்தமானவை என்று சொல்ல
மெகா சீரியல் ரசனைக்கு புதுப்பாதை வகுத்துக் கொடுப்பாளா இந்தப் பேரழகி? எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்!

பேரழகி மெகாத்தொடரை ஆரம்பம் முதலே பார்த்துக் கொண்டிருக்கும் நேயர்களில் ஒருத்தி என்ற முறையில் அத்தொடரைப் பற்றி நிச்சயமாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது தான் அதற்கான அவகாசம் கிட்டியது. வழக்கமான மெகாத்தொடர் இலக்கணங்களை மீறி இந்தத் தொடர் ஏன் ஈர்த்தது என்றால் முதல் காரணம் அந்த தொடர் எடுத்தாண்ட விஷயம். குள்ளமான, கருப்பான பெண்ணொருத்தி இந்த சமூகத்தை எப்படி எதிர்கொள்கிறாள்? அவளை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது? என்பதை அசலான கிராமிய மணம் கமழ எந்தவிதமான போலி அலங்காரங்களும் இன்றி உள்ளது உள்ளபடி பதிவு செய்தது தான் இத்தொடரின் சிறப்பு.

சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்தெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொரு காட்சியிலுமே வசனங்களை மிகைப்படுத்தாமலும் அர்த்தமற்று உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் இன்றி சரியான அளவுகளில் பதிவு செய்த விதத்தையும் பாராட்டலாம்.

கதையின் நாயகி போதும் பொண்ணு @ PP. அவள் பிறந்தது முதலே தனது பாட்டியால் வெறுக்கப்படுகிறாள். காரணம் பேத்தி தன்னையும் தன் மகனையும் போல சிவப்பாக, உயரமாக இல்லாமல் குள்ளமாகவும், கருப்பாகவும் இருப்பது தான். இந்த ஆரம்பமே சமூக மனப்பான்மையை கட்டுடைப்பதாகத் தான் துவக்கப்படுகிறது. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோரைப் போலத்தான் இருந்தாக வேண்டுமென்பதில்லை. அதன் பரம்பரையில் எவரது ஜீனும் குழந்தைக்குப் பொருந்திப் போகலாம். குழந்தைகள் தங்களது மூன்றாம் தலைமுறைத் தாத்தாவையோ, பாட்டியையோ கொண்டு கூடப் பிறக்கலாம். இதை இந்தச் சமூகம் அவதானிப்பதே இல்லை. இதற்கொரு நடைமுறை உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் இரு மாதங்களுக்கு முன்பு குழந்தை சிவப்பாகப் பிறந்த காரணத்தால் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு குழந்தையை எரித்துக் கொன்ற தகப்பனைப் பற்றிச் சொல்லலாம். இம்மாதிரியான மூடத்தனங்கள் பூண்டோடு வேரறுக்கப்பட வேண்டும். பேரழகி அப்படியொரு விஷயத்தை பேசுபொருளாக எடுத்துக் கொண்டு வெற்றி நடை போடுவதால் அவளோடு நாமும் கொஞ்சம் நடந்து பார்க்கலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இந்த சினிமா ஸ்பெஷல் கட்டுரைக்கு வித்திட்டது.

பேரழகி குறித்து அதன் இயக்குனர் வைத்தி சோமசுந்தரம்...

         கலர்ஸ் தொலைக்காட்சியில் மெகாத்தொடர் இயக்குவது என்று தீர்மானித்த போது, கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் பெண்களில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்னை ஒன்றை மையமாக வைத்து மக்களுக்குப் பிடித்தமான வகையிலும், சமூக விழிப்புணர்வைத் தூண்டும் விதத்திலும் ஒரு கதையைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுத்தேன். அப்படி எங்களிடம் வந்து சேர்ந்தவள் தான் பேரழகி. பிறரது பார்வையில் அவள் கருப்பாக, குள்ளமான பெண்ணாகத் தெரிந்தாலும் அவள் மனதால் பேரழகி, அதை இந்தத் தொடரைப் பார்க்கும் ஒவ்வொரு நேயரும் மனதால் உணர வேண்டும் என்று முன்னரே உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டதால் அதற்கேற்ப கதையின் போக்கு தொய்வின்றித் தொடர்கிறது.

இந்தக் கதையின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை முன்னரே தீர்மானித்தவாறு அப்படியே தொடர்கிறது. காட்சிகளையும், வசனங்களையும் வேண்டுமானால் மெருகேற்றலாமே தவிர கதையில் டிஆர்பிக்காக நாங்கள் எந்தச் சமரசமும் செய்து கொள்வதாக இல்லை என்று முன்பே தெளிவாக முடிவு செய்து கொண்டு தான் பேரழகிக்காக களத்தில் இறங்கினோம். நான் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பதால் இந்தத் தொடரைப் பொருத்தவரை பார்வையாளர்களுக்கு ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி வர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்தும் அலெக்ஸா கேமராவைப் பயன்படுத்தியே அனைத்துக் காட்சிகளையும் படமாக்கி வருகிறோம். அதைவிட சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் சொல்ல வேண்டுமென்றால் இந்தத் தொடர் முடியும் போது இதை பார்த்துக் கொண்டிருந்த நேயர்களுக்கு குறைந்த பட்சம் 50 பாரதியார் பாடல்களையாவது அறிமுகம் செய்து விட வேண்டுமென்பதும் எனது விருப்பங்களில் ஒன்று. அதற்கேற்றாற் போல நாங்கள் பேரழகியை வார, வாரம் செதுக்கிக் கொண்டு இருக்கிறோம்.

அதே போல பேரழகிக்காக கதாபாத்திரங்களைத் தேர்வு செய்த போதும் ஒரு சிலரைத் தவிர அனைவருமே புதுமுகங்கள். ஏனென்றால் வேறு எந்த ஒரு மெகா சீரியலின் தாக்கமோ அல்லது பாத்திரங்களின் தாக்கமோ இதில் இருக்கக் கூடாது என்பது தான். இதில் அம்மணி பாட்டியையும், PP யின் அப்பாவையும் தவிர அனைவரும் புதுமுகங்களே. இதில் வில்லத்தனம் கலந்த அரசியல்வாதியாக என்னுடன் பயின்ற நண்பர் ஒருவரையே நடிக்க வைத்திருக்கிறேன். அடிப்படையில் படத்தொகுப்பாளரான அவரது வித்யாசமான நடிப்புக்கு இன்று ஏராளமான குழந்தைகள் கூட ரசிகர்கள் என்பது எனக்கு ஆச்சர்யமான விஷயம். அதே போல பேரழகி சென்னைக்குவந்த பிறகு அவளை ஆதரிக்கும் குடும்பத் தலைவியாக நடித்திருப்பவர் சாந்தா எனும் நடன இயக்குனர். இவர்களை எல்லாம் நீங்கள் இதற்கு முன்பு எந்த மெகா சீரியல்களிலும் கண்டிருக்க முடியாது. ஆனால் இந்த ஒரு தொடரிலே அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள். என்பதும் பேரழகியின் வெற்றி.

பேரழகி காயத்ரியைப் பற்றிச் சொல்லாவிட்டால் எப்படி? 

தொடரின் நாயகியாக நடிக்க பல பெண்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் காயத்ரியை எதற்கு தேர்வு செய்தோம் என்றால், அவரும் சீரியல் உலகில் புதுமுகம் என்பதற்காக மட்டுமல்ல. எங்கள் கதையின் நாயகிக்கு அவரே கச்சிதமாகப் பொருந்தினார். கதைப்படி PP யின் பெற்றோரும், உடன்பிறந்தோரும் சிவப்பாக, உயரமாக இருப்பார்கள் ஆனால் PP  மட்டும் குள்ளமாக, கருப்பாக இருக்க வேண்டும். அவருக்கு நடிப்பும் இயல்பாக வர வேண்டும். அந்தத் தேடுதல் வேட்டையில் கிடைத்தவரே காயத்ரி. தொடரில் தான் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும் நிஜ வாழ்விலும் காயத்ரி சந்தித்தவர் என்பதால் அவருக்கு அந்தப் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பது எளிதாக இருக்கிறது. சீரியல் உலகில் இந்தத் தொடர் காயத்ரிக்கு நல்ல துவக்கம் என்று சொல்லலாம்.

பேரழகி தொடர் குறித்து அதன் கதை, திரைக்கதை, வசன கர்த்தா பொன் இளங்கோ...

பேரழகி என்பவள் சீரியலில் வரும் போதும்பொண்ணு ஒருத்தி மட்டுமே அல்ல. நிஜ வாழ்வில் நம் வீட்டில் இருக்கும் அம்மாவாக, அக்காவாக, நம்மைக் கடந்து போகும் பெண்ணாகவும் ஏராளமான பேரழகிகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். எனவே இத்தொடரில் வரும் ‘பேரழகி’ ஒரே ஒரு பெண்ணின் கதையல்ல. ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களின் உணர்வுகளின் நீட்சி! இந்தப் பேரழகி அவர்கள் ஒவ்வொருவரின் பிரதிநிதியாக தன் வாழ்வில் ஜெயித்து நின்று ஒட்டுமொத்த பெண்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதமாகத் திகழ்வாள். இவள் அவர்களின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே!

பேரழகி குறித்து போதும்பொண்ணு காயத்ரி...

பார்வைக்கு நடிகை சரிதா சாயலில் இருக்கும் காயத்ரி நடிப்பிலும் பல இடங்களில் சரிதாவின் இயல்பான நடிப்பை நினைவுறுத்துகிறார். அவரிடம் பேரழகி குறித்துப் பேசும் போது;

நான் பக்கா சென்னைப் பொண்ணு. மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து நடிக்க வந்திருக்கிறேன். நடிப்பதற்கான வாய்ப்புத் தேடுகையில் பலமுறை என்னை டிஸ்கரேஜ் செய்யும் விதத்தில் தான் அனுபவங்கள் அமைந்தன. பலரும் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் நிறம் கூடுதலாக இருந்திருக்கலாம் என்று சொல்லி என்னை நிராகரித்திருக்கிறார்கள். அதனால் ஒரு கட்டத்தில் நடிப்பே வேண்டாம் என வெறுத்துப் போய் சிஏ படிக்கப் போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தேன். அப்போது கிடைத்தது தான் பேரழகி வாய்ப்பு!

இத்தொடரில் வரும் பொதும்பொண்ணு @ PP வேறு, நான் வேறு அல்ல. எனக்கிருக்கும் எல்லாவிதமான பிரச்னைகளும் அந்தக் கதாபாத்திரத்துக்கும் உண்டு. எனவே நான் இதில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். 

இந்தத் தொடருக்கான ஆடிஷனின் போது கூட முந்தைய பல ஆடிஷன்களைப் போலவே இதிலும் நம்மை நிறத்துக்காகவும், உயரத்துக்காகவும் புறக்கணித்து விடுவார்கள் என்று தான் கடைசி வரை நம்பினேன். ஆனால், எப்படியோ அதிர்ஷ்டவசமாக இந்தத் தொடரின் போதும்பொண்ணு கதாபாத்திரம் கோரிய அத்தனை அம்சங்களும் எனக்குப் பொருந்திப் போனதால் அவர்கள் என்னையே PP யாக     நடிக்க வைத்து விட்டார்கள். திரையுலகிலும் சரி, சீரியல் உலகிலும் சரி நான் எனக்கு நேர்ந்த முந்தைய நிராகரிப்புகளை எண்ணி ஒருவேளை இந்தத் துறையே வேண்டாம் என்று நான் எடுத்த முடிவை செயல்படுத்தியிருந்தால் நிச்சயம் இப்படியொரு அருமையான வாய்ப்பை இழந்திருப்பேன். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் போதும்பொண்ணுவாக எனக்கு இப்போது மிக்க மகிழ்ச்சி!

தொடரில் எனது இயல்பான நடிப்பு குறித்துச் சொல்வதென்றால் அதற்கு எங்களது குழுவினரின் ஒத்துழைப்பைத் தான் பாராட்ட வேண்டும். இந்தத் தொடரில் நடிக்கும் அத்தனை நடிகர், நடிகைகளும், டெக்னீசியன்களும் ஒரே குடும்பமாகத் தான் இணைந்து பழகுகிறோம். அந்த பிணைப்பு தான் திரையில் ஒவ்வொரு காட்சியிலும் அருமையான நடிப்பாக மிளிர்கிறது. அதோடு, காட்சிக்கு காட்சி இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா? என ஒவ்வொரு முறையும் இயக்குனரை அணுகும் போது அவர் நடிப்பதில் எங்களுக்கு அளிக்கும் சுதந்திரத்தைப் பற்றியும் இங்கே குறிப்பிட வேண்டும். மிக அருமையானதொரு படக்குழு எங்களுக்கு வாய்த்திருக்கிறது. எங்கள் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு தான் சீரியலுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பும், வெற்றியும்.

பேரழகி குறித்து அதன் இயக்குனர், கதை, திரைக்கதை மற்றும் வசன கர்த்தா, நாயகி மூவரின் எண்ண ஓட்டங்களையும், பகிர்தலையும் இதுவரை பார்த்தாயிற்று.

இப்போது ரசிகர்கள் பேரழகி குறித்து என்ன நினைக்கிறார்கள் என நேரடியாகவும், கூகுள் செய்தும் பார்த்த போது தொடரைப் பற்றி தெரிய வந்த பொதுவான விமர்சனம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

‘நிஜ வாழ்வின் சாயல் சிறிதும் இன்றி கொடூர வில்லத்தனங்களை வலிந்து உருவாக்கித் திணித்து வன்முறைகளும், அழுகாச்சிக் காட்சிகளும், மாமியார், மருமகள், ஓரக்கத்திகளின் வரைமுறை கடந்த சாடல்களையும் மட்டுமே முழுக்கதைக் கருவாகக் கொண்டு பல மெகாசீரியல்கள் பார்வையாளர்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ரசிகர்களின் ரசனைக்கொரு தென்றலாக தான் பேச வந்த விஷயத்தை தனது பிரச்னை சார்ந்த மன உணர்வுகளை மென்சாறலாகப் பொழியும் இந்தப் பேரழகி கணிசமான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறாள். அவள் இப்போது தான் நகரத்துக்கு வந்திருக்கிறாள்... இந்த நகரம் அவளுக்கு அளிக்கவிருக்கும் அனுபவங்களை இப்போதே எங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஏனென்றால் அவள் எங்களில் ஒருத்தி. அந்த அனுவங்களில் இருந்து அவள் எவ்விதமாக தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்? தனது பிரச்னைகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு அவளுக்கான வெற்றியை எப்படி அடையப் போகிறாள்? என்பதைப் பார்க்க மிக மிக ஆவலாக இருக்கிறோம். என்பதே பலரது பதிலாக இருக்கிறது.

தமிழ் சீரியல் உலகில் பல மெகாத்தொடர்கள் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் வெற்றிகரமானவையாகக் கருதப் பட்டிருக்கலாம். ஆனால் அவை எல்லாமும் தொலைக்காட்சி நேயர்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்தமானவை என்று சொல்லி விடமுடியாது. சில தொடர்களை பார்க்கத் தொடங்கி அந்தப் பழக்க தோஷத்தில் தினமும் பார்த்துத் தொலைக்கும் பலரை நானறிவேன். இன்னும் சிலரோ, மெகா சீரியல்கள் போரடிக்கையில் சமீபத்தில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ , ‘ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’, ‘வில்லா டு வில்லேஜ்’ போன்ற சென்ஷேசனால விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோக்களுக்கு மாறி விடுகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளின் கான்செப்ட்களில் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனாலும் அடுத்தென்ன? அடுத்தென்ன? என்ற ஒற்றைக் கேள்வியால் தூண்டிலிடப்பட்டு அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை திட்டிக் கொண்டோ, பழித்துக் கொண்டோ தினமும் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இம்மாதிரியான நிகழ்ச்சிகளில் வெறும் த்ரில்லும், சம்மந்தப்பட்ட போட்டியாளர்களுக்கான சுய விளம்பர வாய்ப்புகள் மட்டுமே உறுதி செய்யப்படுகின்றனவே தவிர நிஜ வாழ்வின் அசல் பிரச்னைகள் குறித்த தாக்கம் அவற்றில் கொஞ்சமும் கிடையாது. தினசரி வாழ்க்கையில் பலர் எதிர்கொள்ளும் உளவியல் பிரச்னைகளுக்கான எந்தத் தீர்வுகளையும் அவை முன் வைப்பதில்லை. 

அப்படியான சூழலில் பேரழகி மாதிரியான மெகாத் தொடர்களின் வருகை சீரியல் ரசிகர்களிடையே ஒரு ஆசுவாசத்தை தருகிறது. இன்னும் அழுத்தமாகச் சொல்லவேண்டுமென்றால்;

தமிழ் மெகா சீரியல் உலகில் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் பெருக ஆரம்பித்து விட்ட கடந்த 20 ஆண்டுகளில்;

ரசிகர்களின் ரசனைக்குத் தீனியிட்ட, தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான சீரியல் ரசிகர்களை பாஸிட்டிவ் உணர்வுடன் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த மெகாத்தொடர்களைப் பட்டியலிடத் தொடங்கினால், அந்த லிஸ்ட்’

 ஒரே ஒரு 

‘சித்தி’

ஒரே ஒரு 

‘மெட்டி ஒலி’

 ஒரே ஒரு 

‘கோலங்கள்’

ஒரே ஒரு 

‘தென்றல் ’

என்பதிலேயே நிற்கிறது.

அந்த வரிசையில் ரசிகர்களுக்குப் பிடித்த ரசனையான பாஸிட்டிவ் மெகாத்தொடராக தற்போது ‘பேரழகி’ வந்து நம் முன் நிற்கிறாள்.  

இவள் ஆண்டுக் கணக்கில் நம்முடன் பயணித்து போரடிக்க வைக்கப் போவதில்லையாம். அவளது வருகையைப் போலவே அவள் நம்மைக் கடந்து செல்லும் விதமும் கூட ஒரு இனிமையான தாக்கமாக ஆண்டுகள் பல கடந்தும் நம் மனதில் நிற்கும் என்கிறார் அதன் இயக்குனர். 

பார்க்கலாம்... பேரழகி இன்று போல் என்றும் நம்மை ஈர்ப்பாளா என்று!

பேரழகி தொடர் குறித்து தினமணி இணையதளத்துக்காக தங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர், வசன கர்த்தா, மற்றும் நாயகிக்கு நமது வாழ்த்துக்களும், நன்றியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com