மகன்களால் தீவிர மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் பிரபல தயாரிப்பாளர்!

திரைப்படத்துறையில் மட்டுமல்ல, பொதுவாழ்விலும் கூட ராமா நாயுடுவும் அவரது மகன்களும் கால் நூற்றாண்டாகச் சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அபிராமின் செயல்பாடு அமைந்து விட்டது
மகன்களால் தீவிர மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் பிரபல தயாரிப்பாளர்!

டோலிவுட்டில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.ராமாநாயுடுவைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது. அவர் தெலுங்குப் படங்கள் மட்டுமல்ல, தமிழ், இந்திப் படங்களையும் தயாரித்து பல வெற்றிப்படங்களை அளித்து டோலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளராகக் கோலோச்சியவர். குறைந்த காலத்தில் அதிகத் திரைப்படங்களை வெளியிட்டு திரைப்படத் தொழிலை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய தயாரிப்பாளர்களில் இவர் முதன்மையானவர் என்பதால் இவருக்கு டிராமா நாயுடு என்ற பட்டப் பெயரும் கூட உண்டு. ராமா நாயுடுவுக்கு திரைப்படத் தொழிலின் மீது இருந்த பக்தி மற்றும் ஆர்வத்தின் காரணமாக அவரது இரு மகன்களில் ஒருவரை தயாரிப்பாளராகவும் மற்றவரை நடிகராகவும் கூட அவரே அறிமுகப்படுத்தினார். அவர்கள் வேறு யாருமல்ல, இன்று டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கருதப்படும் சுரேஷ் பாபு மற்றும் வெங்கடேஷ் இருவரும் தான். நடிகர் வெங்கடேஷுக்கு தெலுங்கில் ‘விக்டரி’ வெங்கடேஷ் என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. அந்த அளவுக்கு அவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் அடித்த காலம் உண்டு. இன்று அண்ணன் மகனும் பாகுபலி செகண்ட் ஹீரோவுமான ராணா டகுபதி வெற்றிகரமான ஹீரோவாக உலா வரும் நிலையிலும் வெங்கடேஷால் இந்த வருட ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் பெஸ்ட் ஆக்டர் கிரிடிக்ஸ் அவார்ட் வாங்க முடிகிறதென்றால் அதற்கு அவருக்குத் தனது தொழிலின் மீதிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு தான் பிரதான காரணம்.

டி.ராமாநாயுடு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பின் அவரது இடத்தை அவரது மகன் சுரேஷ் பாபு அடைந்தார். அப்பாவைப் போல சிறந்த வெற்றிகரமான திரைப்படங்களை அளிக்கும் முனைப்பில் தனது தம்பியும் நடிகருமான வெங்கடேஷ் மற்றும் மகன் ராணாவை வைத்து திரைப்படங்களை தயாரித்து வழங்கி வருகிறார். இவர்களது தயாரிப்பில் கடந்தாண்டில் வெளிவந்த காஸி மற்றும் நேனே ராஜு, நேனே மந்திரி திரைப்படங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. காஸி வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியடையாவிட்டாலும் விமர்சன ரீதியாக நற்பெயர் பெற்ற திரைப்படங்களில் ஒன்று. இவர்களது குடும்பம் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிற குடும்பம் என்பதால், வழக்கமான மசாலா திரைப்படங்கள் அல்லாது, வித்யாசமான கதைகளைத் தேர்வு செய்து அவற்றை வெற்றிகரமான திரைப்படங்களாக்கும் ஆர்வம் சுரேஷ் பாபுவின் மகனும் நடிகருமான ராணாவுக்கு இருந்து வந்தது. அந்த முயற்சியில் வெளிவந்த திரைப்படம் தான் காஸி. காஸியைத் தொடர்ந்து அடுத்ததாகவும் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதாக முடிவு செய்திருக்கும் ராணாவுக்கு கண்களில் பிரச்னை இருப்பதால் தற்போது அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் கூறி வருகின்றன. இதை ராணா மறுப்பதாகவும், தனக்கு எவ்விதமான உடல்நலப் பிரச்னையும் இல்லை. தான் ஆரோக்யமாக இருப்பதாகவும் ராணா தெரிவித்திருப்பதாகச் சில ஊடகங்கள் எழுதி வருகின்றன. 

சில மாதங்களுக்கு முன்பு ராணா, தான் பங்கேற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றில் பார்வைக் குறைபாடு கொண்ட சிறுவன் ஒருவன் மற்றும் அவனது தாயாரிடம் பேசுகையில், தனக்கும் கூட சிறுவயதில் நீச்சல் குளத்தில் அடிபட்டு ஒரு கண் பாதிக்கப்பட்டதாகவும், அந்தக் கண்ணில் பார்வை பறிபோனதால் ஐ டொனேஷன் பெற காத்திருந்து, தனக்குப் பொருத்தமான டோனர் கிடைத்ததும் மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அந்தக் கண் பொறுத்தப் பட்டதாகவும் தெரிவித்திருந்தார். ராணாவின் தற்போதைய உடல்நலக் கோளாறை இந்தப் பிரச்னையுடன் தொடர்பு படுத்தி தெலுங்கு ஊடகங்கள் எழுதி வரும் நிலையில்... முன்னதாக ராணாவே தெரிவித்திருந்தபடி, அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தப்பட்ட ராணாவின்  கண்களில் மீண்டும் ஏதோ பிரச்னை ஏற்பட, அதனால் தான் ராணாவால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மீண்டுமொரு அறுவை சிகிச்சை மூலமாக இந்தப் பிரச்னையை சரி செய்யலாம் என்ற போதும், ராணாவுக்கு சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் தனது தம்பி அபிராமின் பெயர் தென்னிந்திய ஊடகங்களில் எதிர்மறையான விதத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு குடும்பத்துக்கென தென்னிந்தியத் திரையுலகில் இருந்து வந்த நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டபடியால் நேர்ந்த மன உளைச்சல் காரணமாக பிளட் பிரஸ்ஸர் அதிகரித்து விட்டதால் உடனடியாக ராணாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாதென மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படி, ராணா தற்போது தனது பிளட் பிரஸ்ஸரைக் குறைக்கும் மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும், பிளட் பிரஸ்ஸர் சீராகி கட்டுக்குள் வந்த பின்பு அயல்நாட்டு மருத்துவமனையொன்றில் அவருக்கு கண்களில் அறுவை சிகிச்சை நடத்தப்படும் எனவும் அக்கடபூமியின் ஊடகங்கள் எழுதி வருகின்றன.

இந்நிலையில் திரைப்பட ஆடியோ வெளியீடு மற்றும் விருது விழாக்களில் பளிச்செனக் காட்சியளிக்கும் பழக்கம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் இன்றைய வறுத்தம் தோய்ந்த கவலை கலந்த தோற்றத்துடன் கூடிய புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தெலுங்கு ஊடகங்கள்... தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவுக்கு நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தாலும், மகன் ராணாவின் கண் அறுவை சிகிச்சை தொடர்பாகவும் தீவிரமான மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும். அதனால் சுரேஷ் பாபு தற்போதெல்லாம் தன் வீட்டை விட்டு வெளியில் வர விரும்பவில்லை எனவும் எழுதித் தள்ளி வருகின்றனர். இதை ராணா மறுத்த போதும் இப்படியான செய்திகள் வெளிவருவது நின்றபாடில்லை. காரணம் ராமாநாயுடு  குடும்பம் இதுவரை தெலுங்குத் திரையுலகிலும், பொதுவெளியிலும் இதுவரை ஈட்டிய நற்பெயரே! 

மறைந்த ராமாநாயுடு குறித்துப் பேசுகையில், பலரும் முதலில் முன்வைக்கும் ஒரு கருத்து, ராமாநாயுடு திரைப்படத் தொழிலில் இருந்த போதும் தனது பிள்ளைகளுக்கு திரைப்படத் துறையின் மோசமான பழக்க வழக்கங்கள் படிந்து விடக்கூடாது என்பதற்காக குடும்பத்தினருக்கு என சில கட்டுப்பாடுகளை விதித்து அதன்படி தன் மகன்களையும் ஒரேமகளான லஷ்மியையும் வளர்த்து ஆளாக்கியிருந்தார். (லஷ்மி, நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவி என்பதோடு நாக சைதன்யாவின் அம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது) இரண்டாம் தலைமுறை நடிகரான வெங்கடேஷ் ஹீரோவாக அறிமுகமான காலம் தொட்டு இன்று வரையிலும் கூட தன்னுடன் நடிக்கும் நடிகைகளை கெளரவமாக நடத்துவதோடு, அவர்களது நற்பெயருக்கு களங்கம் வராத அளவில் கண்ணியமாக நடந்து கொள்ளக்கூடிய ஹீரோக்களில் ஒருவர் என்றும் பெயரெடுத்திருந்தார். தயாரிப்பாளர் சுரேஷ் பாபு குறித்தும் தவறான செய்திகள் எதுவும் இதுவரை வெளிவந்ததில்லை எனும் நிலையில் சமீப காலமாக ராமாநாயுடு குடும்பம் இதுவரை டோலிவுட்டில் ஈட்டி வந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சுரேஷ் பாபுவின் இளைய மகன் அபிராம் நடந்து கொண்டதால் அதை எண்ணி, எண்ணியே சுரேஷ் பாபு தீவிர மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கிறார் எனக்கூறப்படும் குற்றச்சாட்டில் நியாயமிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்நிலையில் நடிகர் ராணா... பாகுபலி திரைப்படத்தில் தனக்குக் கிடைத்த அகில இந்திய புகழைத் தக்க வைத்துக் கொண்டு மீண்டும் சிறப்பான திரைப்படங்களை அளிக்கும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட நினைத்த நேரத்தில் அவருக்கு கண் அறுவை சிகிச்சை தொடர்பாக பிரச்னை ஏற்பட.. தனது இரு மகன்களாலும் தற்போது சுரேஷ் பாபுவின் நிம்மதி பறிபோயிருப்பதாகத் தெரிகிறது. இதை அவரது முந்தைய புகைப்படத் தோற்றத்துக்கும், இன்றைய புகைப்படத்தோற்றத்துக்குமான மாபெரும் வித்யாசமே எளிதில் புலப்படுத்தி விடக்கூடும்.

திரைப்படத்துறையில் மட்டுமல்ல, பொதுவாழ்விலும் கூட ராமா நாயுடுவும் அவரது மகன்களும் கால் நூற்றாண்டாகச் சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அபிராமின் செயல்பாடு அமைந்து விட்டது டகுபாட்டி(தெலுங்கில் ராமாநாயுடு குடும்பத்தாரை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்) குடும்பத்துக்கு கடும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com