ஸ்ரீதேவி நினைவுகள்... இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளாம்!

ஸ்ரீதேவி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே மது அருந்தியதில் தன்னிலை மறந்த ஏகாந்தத்தில்
ஸ்ரீதேவி நினைவுகள்... இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளாம்!

ஸ்ரீதேவி நினைவுகள்...

இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளாம்...

தேவதைக்குப் பிறந்தநாள் என்று மோனக் கனவுகளில் மூழ்கினீர்கள் என்றால் நீங்களும் ஒரு ராம் கோபால் வர்மா தான். ஆம், மனிதர் தீவிரமான ஸ்ரீதேவி உபாசகர்.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில் ‘ஆசைமுகம்’ என்றொரு புத்தகம் வெளிவந்திருந்தது. அதில் பல பிரபலங்கள் தங்களுடைய கனவுக்கன்னிகளைப் பற்றி பகிர்ந்திருந்தார்கள். அதில் ஆர் ஜி வி பகிர்ந்திருந்தது தமது ஸ்ரீதேவி குறித்த நினைவுகளைத்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு நடிகை அந்தந்த காலகட்டங்களில் கனவுக்கன்னியாக இருந்திருப்பார். அவர்களில் ஸ்ரீதேவி மட்டுமே தனித்துத் தெரியக் காரணம் அவரது அப்பாவித்தனமான குழந்தை முகம். 

மாசு மருவற்ற அந்தப் பளிங்கு முகத்தில் ஊசலாடிய கண்கள் மீன்கள்.

அஞ்சுகம் போலிருந்த மூக்கு தமிழுக்கு ரசிக்கத்தக்கதாக இருந்திருக்கலாம். ஆனால், ஹிந்திக்குப் போகையில் அது அதீத எடுப்பாகத் தெரிந்ததாலோ என்னவோ அதை அறுவைசிகிச்சை செய்து வழுவழுப்பான சின்னஞ்சிறு கோவைக்காய் மூக்குப் போலாக்கிக் கொண்டார். அதில் பழைய படங்கள் சிலவற்றில் பொடிப்பொடியாக 7 வெள்ளைகற்கள் பதித்த மூக்குத்தி அணிந்திருப்பார். பெரும்பாலும் ரஜினி, கமல் காம்போ. அந்தக் காலகட்டங்களில் எல்லாம் ஸ்ரீதேவி பேரழகி. நினைத்தாலே இனிக்கும் என்று போட்டியாக ஜெயப்ரதா வந்த போதும் ஸ்ரீதேவிக்கு ஈடு இணை எவருமில்லை என்றே ஆனது. பழைய இந்திய டுடே கட்டுரை ஒன்றில் எப்போதோ வாசித்திருக்கிறேன்.

மும்பையின் ட்ராஃபிக் சிக்னல்கள் தோறும் ஸ்ரீதேவி, ஹேமாமாலினி, ஜூஹி சாவ்லா, மாதுரி தீக்‌ஷித் போன்ற லக்ஸ் விளம்பர அழகுதேவதைகளின் மிகப்பெரிய விளம்பர ஹோர்டிங்குகளை வைத்தால் போதும் மக்கள் டிராஃபிக் சிக்னல்களைப் புறக்கணித்து விட்டு படுவேகமாக வாகனங்களைக் கிளப்பும் வேலையில் மறந்தும் இறங்க மாட்டார்கள். அப்படி ட்ராஃபிக்கையே ஸ்தம்பிக்க வைக்கச் செய்யும் அளவிலான பேரழகிகள் இவர்கள் - என’

அது உண்மை தான்.

ஸ்ரீதேவி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.

அங்கே மது அருந்தியதில் தன்னிலை மறந்த ஏகாந்தத்தில் மிதந்து கொண்டிருந்த ஸ்ரீதேவி, தன் ரசிகர்களைப் பார்த்து போதையில் சிரித்தவாறு ஃப்ளையிங் கிஸ்களை வாரி வழங்கிய காட்சியொன்று அவர் இறந்த சமீபத்தில் இணையத்தில் பலமுறை பகிரப்பட்டது. போதையில் தன்னிலை மறந்து கட்டுப்பாடிழந்து சிரிக்கும் அளவுக்கு ஸ்ரீதேவிக்கு அப்படி என்ன சோகம்? அல்லது மன அழுத்தம்? என்று அவரது குழந்தைப் பருவ சக நடிகர், நடிகைகளுக்கு அப்போது தோன்றியிருக்கக் கூடும். இதை ஸ்ரீதேவிக்கான நினைவஞ்சலி உரையில் நடிகை குட்டி பத்மினி கூடத் தெரிவித்திருந்தார். ஒருமுறை விமானப் பயணமொன்றில் திடீரென ஸ்ரீதேவியைச் சந்தித்த போது, அவரிடம் சென்று... உனக்கென்ன தலையெழுத்து, நீ ஏன் ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகள் இருக்கற ஆணுக்கு இரண்டாம் தாரமாகனும்? என்று கேட்டதற்கு, ஸ்ரீதேவி அழத்துடித்த முகத்துடன் ‘இதைப்பற்றி பேசாதே,  என் வாழ்க்கைச் சூழல் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது’ என்று அத்துடன் உரையாடலைத் துண்டித்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இப்படி சிறு வயதிலிருந்தே உடன் நடித்த பழகிய பழைய நண்பர்களுக்கே கூட ஸ்ரீதேவி அணுக முடியாதவராகவே இருந்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேவியின் காதல் மற்றும் திருமணம் குறித்த வதந்திகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல பரிணாமங்கள் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென  ஸ்ரீதேவி, போனி கபூரை மணந்து கொண்டது நடிகர் விஜயகுமார், மஞ்சுளா தம்பதிக்குச் சொந்தமான வீட்டில் வைத்துத்தான் என்று குமுதம் கவர் ஸ்டோரி வெளியிட்டது. அப்போது முதற்குழந்தையை கருவுற்றிருந்த நிலையில் ஸ்ரீதேவி, போனி கபூர் இருவரும் தங்களது திருமண உறவு குறித்து குமுதத்திற்கு நேர்காணல் அளித்திருந்தனர். அதை வாசித்து தெளிவடைவதற்குப் பதிலாக மேலும் றெக்கை கட்டிப் பறக்கவே செய்தன ஸ்ரீதேவியின் திருமணம் குறித்த வதந்திகள்.

திருமணத்திற்குப் பிறகு சில காலம் திரைப்பட உலகை விட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, இரண்டு குழந்தைகள் பிறந்த பினு மிஸஸ். மாலினி அய்யர் என்ற பெயரில் பாலிவுட் சின்னத்திரையில் தலைகாட்டினார். அந்த சீரியல் அவரது சொந்த தயாரிப்பு, மெகா வெற்றிபெற்ற சீரியலாக சக்கைப் போடு போட்டது. 

அதற்குப் பிறகு தமிழ் ரசிகர்களுக்கு ஸ்ரீதேவியின் தரிசனம் கிட்டியது ‘தேவராகம்’ திரைப்படத்தில் தான். படம் இங்கு தோல்விப்படமான போதும் பாடல்கள் அனைத்தும் ஹிட். அந்தப் படத்திற்கான விமரிசனத்தில் ஸ்ரீதேவியின் முகத்தில் முற்றிய களை வந்து விட்டதென ஒரு நிருபர் துடுக்குத்தனமாக எழுதியிருந்தார். தேவராகத்துக்குப் பிறகு இங்லீஷ் விங்லீஷ் திரைப்படத்தில் சாமான்ய நடுத்தரக் குடும்பத்து இல்லத்தரசியாக நடித்து பெண் ரசிகர்களின் மனதைக் கவரா நினைத்தார். படம் வெற்றிப்படமாகவே அமைந்தது. 

பிறகு அதைத் தொடர்ந்து ‘புலி’ திரைப்படத்தில் வில்லியாக ஸ்ரீதேவி கமிட் ஆகியிருந்தார்.

படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவன்று மேடையேறிய ஸ்ரீதேவி; ‘எல்லோரும் தென்னிந்திய ரசிகர்கள் பாகுபலிக்காக காத்திருக்காங்கன்னு சொல்லிக்கிறாங்க, ஆனால், உண்மையில் எனக்குத் தெரிந்து விஜய் ரசிகர்கள், தென்னிந்திய ரசிகர்கள்னு எல்லோருமே புலிக்காகத் தான் காத்திருக்காங்கன்னு தோணுது. என்று தற்பெருமையாகப் பேசி கற்பனையில் மூழ்கிப்போனார். ஆனால், படம் வெளிவந்த பிறகு தான் தெரிந்தது அவர் தட்டிக் கழித்த கதாபாத்திரத்தை மக்கள் குறிப்பாக தென்னிந்தியா மட்டுமல்ல வட இந்தியா உட்பட தமிழர்கள் வாழும் அயல்நாடுகளிலும் கூட ரசிகர்கள் எப்படிக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் என்பது.

இப்படி ஸ்ரீதேவி தன் படங்களின் வெற்றி குறித்து கணிக்கத் தவறியது அவரது துரதிருஷ்டமே!

புலி படத் தோல்விக்குப் பிறகு ஸ்ரீதேவிக்கான திரைப்பட வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து விட்டதாகத் தகவல்கள் கசிந்தன. காரணம், அவரது அதீத சம்பளம் மட்டுமல்ல, திரைப்பட ஷூட்டிங்குக்காக அவர் எங்கு செல்வதாக இருந்தாலும் தன்னுடன் வந்து தங்கும் தனது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஸ்டார் ஹோட்டல்களில் சூட்ரூம் புக் பண்ணச் சொன்னதோடு, எல்லோருக்கும் சேர்த்து மொத்தமாக விமான டிக்கெட் செலவையும் ஏற்றுக் கொள்ளச் சொல்லி டிமாண்ட் வைத்தது தான் என்கிறார்கள்.

ஆயினும் ஸ்ரீதேவிக்கான வாய்ப்புகளுக்கு எங்கும், எப்போதும் பஞ்சமே இருந்ததிலை. 

அப்படியே நடித்துக் கொண்டோ அல்லது சும்மாவேனும் இல்லத்தரசியாக, இரு வளர்ந்த பெண்களுக்கு அம்மாவாகவோ நீடித்திருக்கலாம்.

ஸ்ரீதேவியின் கடைசித் திரைப்படமான ‘மாம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், உறவினர் ஒருவரது இல்லத்திருமண விழாவுக்காக துபாய் சென்றவர் மீண்டும் இந்தியா திரும்பவில்லை.

ஆம், அங்கு மது போதையில் குளியலறைத் தொட்டியில் விழுந்து மூச்சுத்திணறி மறைந்து விட்டார் என மாலை மங்கிய நேரத்தில் இணையத்தில் வெளியானது அந்தப் பகீர் செய்தி.

இன்று ஸ்ரீதேவி நம்மோடு இல்லை. அவர் மறைந்து விட்டார். ஆயினும்; அவரது நினைவுகள் என்றென்றும் நம்மோடு;

மூன்றாம் பிறையாக, மீண்டும் கோகிலாவாக, வறுமையின் நிறம் சிகப்பாக, சிவப்பு ரோஜாக்களாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் சாகாவரம் பெற்றுத் திகழ்கிறார் என்பது மிகையில்லை.

பிராய்லர் கோழிகளைப் பற்றி கவலைப்படும் நாம், சிறு வயது முதலே ஸ்ரீதேவி விஷயத்தில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் குழந்தைப் பருவம் முதலே படிக்கவே செல்லாமல் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கான சுதந்திர எல்லைகள் இன்னும் விஸ்தரிக்கப்படிருக்க வேண்டும். ஆனால், இங்கு பாருங்கள், ஸ்ரீதேவி ஆரம்பம் முதல் தன் தாயின் மரணம் வரையிலும் அவரைச் சார்ந்து வாழ்ந்திருக்கிறார். அம்மா இறந்த பின் கணவர் போனியின் கட்டுப்பாட்டில் இருந்தார். இதில் போனியின் மூத்த மனைவி குடும்பத்தாரால் ஸ்ரீதேவி பலமுறை அவமானப்படுத்தப் பட்ட நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. தன் கணவரின் மூத்த மனைவியின் வாரிசுகளுடன் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தவரை அவருக்கு சுமுகமான உறவு நீடித்தது இல்லை.

அப்போதேனும் அவர் கொஞ்சம் சுதாரித்திருக்கலாம். இப்படி அநியாயமாக பாத்டப்பில் விழுந்து உயிர் விட்டிருக்கத் தேவையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com