சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா?

ரமாபிரபாவை மாஜி மனைவியாக ஏன் குறிப்பிட விரும்பவில்லை என்பதற்கு சரத்பாபு தந்த விளக்கம்;
சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா?

‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ பாடலைக் கேட்க வாய்க்கும் யாருக்கும் சரத்பாவுவைப் பிடிக்காமலிருக்க வாய்ப்பில்லை. தமிழில் அவர் ஏற்று நடித்த பல திரைப்படங்கள் மிக முக்கியமானவை.

நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், அண்ணாமலை, பகல்நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு, அன்று பெய்த மழையில் இத்யாதி... இத்யாதி என்று தமிழின் பெருமைக்குரிய அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் சரத்பாபு நடித்திருக்கிறார். மாஸ்டர் பீஸ் என்றால் அது முள்ளும் மலரும் மற்றும் சலங்கை ஒலியைச் சொல்லலாம்.

முதலாவதில் ரசனையான இதயம் படைத்த ஸ்ட்ரிக்ட் கவர்ன்மெண்ட் ஆஃபீஸர். இரண்டாவதில் கலைக்கிறுக்கனும், காதல் கிறுக்கனுமான குடிகார அப்பாவி சினேகிதனுக்கு எல்லாமுமாக இருக்கும் ஆப்த நண்பன் கதாபாத்திரம். இரண்டு கதாபாத்திரங்களையுமே மிக அருமையாகச் செய்திருப்பார். அவரே ஒரு நேர்காணலில் சொல்லியபடி சரத்பாவு எப்போதுமே டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைத் தன் போக்கில் கனகச்சிதமாக நடித்து பாராட்டுதல்களை அள்ளிக் கொள்வார்.

சரி.. சரி அதனாலென்ன? இப்போது திடீரென்று எதற்கு சரத்பாபு புராணம் என்பவர்களுக்கு சொல்லிக் கொள்ள விஷயம் உண்டு.

சரத்பாபு தன்னை உணவுக்காகவும், தாம்பத்யத்துக்காகவும் மட்டுமே திருமணம் செய்து கொண்டார். அதைத்தாண்டி அவர் மிக சுயநலமானவர்... என் பெயரைப் பயன்படுத்தி சினிமா வாய்ப்புகள் பெற்று அவரது வாழ்க்கையில் முன்னேறிய பின் என்னை அம்போவென விட்டு விட்டு என் பெயரிலிருந்த சொத்துக்களையும் அபகரித்துச் சென்று விட்டார் என்று சரத்பாபுவின் முதல் மனைவி என்று மீடியா அடையாளம் காட்டும் ரமாபிரபா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்.

தெலுங்கு நடிகை ரமாபிரபாவை தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கக் கூடும். 70 களில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘சாந்தி நிலையம்’ என்றொரு மெகா ஹிட் திரைப்படம் வெளிவந்ததே... ஜெமினி, காஞ்சனா, நாகேஷ், மஞ்சுளா, ஸ்ரீதேவி, விஜயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்குமே அதில் நாகேஷுக்கு ஜோடியாக நடித்திருப்பாரே அவர் தான் ரமாபிரபா.

ரமாபிரபாவின் சமீபத்திய நேர்காணல்களில் சரத்பாபு குறித்த கேள்விகள் வரும்போதெல்லாம் அவரது பதில் மேலே சொல்லப்பட்ட வகையில் தான் இருந்தது. 

ஆனால்.... சரத்பாபு இதுவரை ரமாபிரபா தன் மீது வைத்த குற்றச்சாட்டை ஒருபோதும் மறுத்ததும் இல்லை, ஆம் என்று ஒப்புக்கொண்டதும் இல்லை. தெலுங்கு மீடியாக்கள் சரத்பாபுவின் பதிலைப்பெற முயற்சிக்கும் போதெல்லாம் அவர் அணுக முடியாதவராக இருந்தார் என்றே கூறப்பட்டது. ஆனால், டிவி9 சேனல்காரர்கள் இந்த விஷயத்தில் சரத்பாபுவின் பதில் என்ன என்பதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கி இதோ அவரது பதிலைப் பெற்று வந்திருக்கிறார்கள். இதுவரை சரத்பாபு எந்த நேர்காணலிலும் தனது சொந்த வாழ்க்கை குறித்து பெரிதாக எதையும் வெளிப்படுத்தியதில்லை எனும் போது இந்த நேர்காணலில் குறைந்தபட்சம் தன் மீது நல்லபிப்ராயம் வைத்திருக்கும் தனது தென்னிந்திய ரசிகர்களுக்கு தன் மீது மோசமான அபிப்ராயம் வந்து விடக்கூடாது என்றெண்ணி உண்மையை வெளிப்படுத்தி இருப்பதாகக் கூறியுள்ளார்.

அதோடு ரமாபிரபா... தனது முதல் மனைவி என்கிற ஸ்டேட்மெண்ட்டையும் சரத்பாபு மறுக்கிறார், (8 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தாலும் கூட ரமாபிரபாவுடனான உறவுக்குப் பெயரே இல்லை என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது). சரத், ரமாபிரபு... இவர்களது திருமணம் 1980 ல் நடந்தது. ஆனால் அந்தத் திருமணத்தின் ஆயுள் வெறும் 8 வருடங்களே! பிறகு இருவரும் விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். பிறகு சரத்பாபு நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. ஆயினும் இவருடனான திருமணத்தை மட்டுமே தான் செய்து கொண்ட உண்மையான திருமணமாகக் கருதுகிறார் சரத்பாபு.

ரமாபிரபாவை மாஜி மனைவியாக ஏன் குறிப்பிட விரும்பவில்லை என்பதற்கு சரத்பாபு தந்த விளக்கம்;

அப்போது எனக்கு 22 வயது. ரமாபிரபா என்னை விட ஐந்தாறு வயதுகள் மூத்தவர். அவரது தம்பி என்னை விட ஒரு வயது இளையவர்.  ரமாபிரபாவுடனான விவாகரத்துக்குப் பின்பும் கூட இப்போதும் அவரது தம்பி என்னுடன் தான் இருக்கிறார். நானும், ரமாபிரபாவும் சேர்ந்து வாழ்ந்த போது அது திருமண பந்தம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதான தத்துவமே நான் அறிந்திராத காலகட்டமாக இருந்தது.

என் குடும்பம் முற்றிலும் சினிமா என்றால் என்னவென்றே அறிந்திராத குடும்பம். அங்கிருந்து வந்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த எனக்கு அப்போது வயது வெறும் 22. அந்த வயதில் என் அப்பா என்னை படித்து முடித்து விட்டு வந்து குடும்பத் தொழிலான ஹோட்டல் பிஸினஸை பார்த்துக் கொள்ளச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கதில் பெரிதாக ஆர்வமிருந்ததில்லை. எனவே என் கல்லூரி நண்பர்களும், ஆசிரியர்களும் அவ்வப்போது என்னிடம் ‘நீ ஆள் பார்க்க ஜம்முன்னு இருக்க, சினிமால நடிக்கலாமே’  என்று உசுப்பேற்றியதில் மகிழ்ந்து போய் சினிமா தான் எனக்கு சரியாக வரும் என்று அதில் முழு மூச்சாக இறங்கி விட்டேன். அப்போது நான் சந்தித்தவர்களில் ஒருவர் தான் ரமாபிரபா. இரண்டு நபர்களுக்குள் உறவு முகிழ்க்க வேண்டுமென்றால் இருவருக்குள்ளும் அந்நியோன்யம் இருந்தாக வேண்டும். எங்களது உறவில் அதெல்லாம் பெரிய வார்த்தை. அப்படிப்பட்ட ஒன்றே எங்களுக்குள் இருந்ததில்லை என்பது பிரிவிற்கான முதல்  தருணத்தின் போது தான் தெரிய வந்தது. நாங்கள் பதின்மூன்று ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததாக இன்று பத்திரிகைகளில் ஊடகங்களில் சொல்கிறீர்களே... அந்த 13 ஆண்டுகளும் எப்படி வாழ்ந்திருந்தோம் என்று உங்களில் யாருக்கும் தெரியாது. ஒருவர் சொல்வதை மட்டுமே உண்மை என்றெண்ணி என்னை வில்லனாகச் சித்தரிக்கக் கூடாது. நான் ஒரு பக்கம் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு படங்களில் வெவ்வேறு ஊர்களிலும், மாநிலங்களிலும் நடித்துக் கொண்டிருக்க அவர் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து வாழ்ந்தது என்பது சில மாதங்களாக இருக்கலாம். அப்போதும் கூட  அவரென்னவோ அவரது ஆஸ்திகள் அத்தனையையும் சரத்பாபு கொள்ளையடித்துச் சென்று விட்டார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எனக்குத் தெரிந்து ரமாபிரபாவுக்கு இருந்தது ஆஸ்திகள் அல்ல. ஆஸ்தி... ஒரே ஒரு ஆஸ்தி மட்டும் தான். அது சென்னையில் இருந்த வீடு. அதை விற்று விட்டு தனித்தனியாக இரண்டு ஃப்ளாட்டுகள் வாங்க விரும்பினார் ரமாபிரபா. அவருக்கு இரண்டு தம்பிகள். அதில் ஒரு தம்பியின் பெயரிலும் அவரது மனைவியின் பெயரிலும் தான் அந்த ஆஸ்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேண்டுமென்றால் பத்திரங்களை வாங்கிப் பாருங்கள். நான் பொய் சொல்வதாக இருந்தாலும் பத்திரப் பதிவுத்துறையின் சான்றுகள் பொய் சொல்லாது இல்லையா? அது மட்டுமா? சென்னை உமாபதி சாலையில் ஒரு வீடு நான் என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது. என்னிடமிருந்த விவசாய நிலத்தை விற்று அதில் வாங்கிய வீடு அது. அந்த வீட்டை ரமாபிரபாவுக்குக் கொடுத்தேன் நான். இதற்கெல்லாம் பத்திர ஆதாரங்கள் உண்டு. எதையும் நான் சும்மா சொல்லவில்லை. நான் அன்று விற்ற விவசாய நிலத்தின் இன்றைய மதிப்பு 60 கோடி ரூபாய். வாங்கிக் கொடுத்த வீட்டின் இன்றைய மதிப்பு எனக்குத் தெரியாது. இப்போது சொல்லுங்கள் யாருடைய ஆஸ்தியை யார் ஏமாற்றி அபகரித்தார்கள் என்று.

அப்புறம் ரமாபிரபா, அவருடைய பெயரைச் சொல்லி நான் சினிமாவுக்குள் நுழைந்து வாய்ப்புக் கேட்டேன் என்று. இதெல்லாம் அவதூறு. ரமாபிரபாவை சந்திக்கும் போதே நான் ஹீரோவாகி இருந்தேன். தமிழில் கே.பாலசந்தர், மகேந்திரன், அசோக்குமார், என்று பெரிய இயக்குனர்களின் படங்களில் எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் ரமாபிரபாவுக்காகத் தான் எனக்கு வாய்ப்பு தந்தார்கள் என்று சொல்வீர்களா? என் குடும்பம் மிகுந்த ஆர்த்தோடக்ஸ் குடும்பம். அங்கிருந்து கல்லூரிப் படிப்புடன் வெளியில் வந்த எனக்கு சினிமாவுக்குள் நுழைந்த பின் வாழ்க்கையை எப்படிக் கட்டுதிட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியாமல் போய்விட்டது. மனைவி என்று நம்பி ஒரு உறவில் விழுந்து அது தீயாகச் சுட்டதில் மனம் நொந்து அந்த உறவில் இருந்து வெளிவந்தேன். பிறகு அந்த வாழ்க்கையை நான் கனவிலும் நினைத்துப் பார்க்க நான் விரும்பியதில்லை.

என்னைப் பொறுத்தவரை மனைவி என்பவர் போகியன்று நெருப்பில் இடும் விறகு போல இருக்கக் கூடாது. ஹோமகுண்டத்தில் இடும் தர்ப்பைக் குச்சிகள் போல எரியும் போது அந்தப் புகையைச்  சுவாசிப்பவர்களுக்கு எவ்விதத் தீங்கும் இன்றி நன்மை செய்யத் தக்கவராக இருக்க வேண்டும். இந்த உதாரணத்தைக் கேட்டு நானென்னவோ கணவர் சொல்படி கேட்டு கையைக் கட்டிக் கொண்டு ஆமாம் சாமி போடும் மனைவியை மட்டுமே விரும்பினேன் என்று சொல்லி விடத் தேவையில்லை. இந்த உலகில் எல்லாக் கணவர்களும் தங்கள் மனைவிகளிடத்தில் எந்தக்குணம் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேனோ அதையே தான் நான் என் மனைவியிடமும் எதிர்பார்த்தேன். ஆனால் நானொடு டாக்டரின் பெயரை ஞாபகப்படுத்தி உங்களுக்குச் சொல்கிறென் அவர் உங்களுக்கு ஆதார பூர்வமாகச் சொல்லக் கூடும்.

குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லாமல் ஒரு பெண் தனது ஃபெல்லோபியன் டியூபைக் கட் செய்து கொண்ட கதையை.

பிறகெப்படி அந்த உறவின் அந்நியோன்யம் இருக்க முடியும்.

எனவே இனிமேல் என்னைப் பற்றி அவதூறு நினைப்பவர்கள் தயவு செய்து உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு பிறகு உங்கள் கற்பனைச் சிறகை விரியுங்கள். வீண் வதந்திகளை நம்பி என்னை வில்லனாக நினைக்கத் தேவையில்லை. அப்படியே நினைத்தாலும் அதில் எனக்கொன்றும் பெரிய சங்கடமெல்லாம் இல்லை என்றாலும் உண்மை வெளியில் வர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நேர்காணலுக்குச் சம்மதித்தேன் என்கிறார் சரத்பாபு.

இவர் சொல்வதைப் பார்த்தால் இவர் தான் நிஜமோ. ரமாபிரபா சொல்வதெல்லாம் பொய்யோ என்று தோன்றத்தான் செய்கிறது.

எல்லாம் சரி தான் ஆனால் இந்த் நேர்காணலைச் செய்த ஜாஃபர் என்பவர்... சரத்பாபுவிடம் முன் வைத்த கேள்விகளில் ஒன்று ... ‘நீங்கள் இன்னொரு ஜெமினியாக இருப்பீர்களோ என்று நினைத்தேன். ஆனால், நீங்கள் உடைத்துப் பேசிய பிறகு தான் உங்கள் மீது தவறில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது’ என்று கூறினார். அது தான் உதைக்கிறது. நடிகை சாவித்ரியின் வாழ்க்கைத் தோல்வி மற்றும் மரண விஷயத்தில் ஜெமினி தான் குற்றவாளி எனும் நிலைப்பாடு அக்கடபூமியின் நடிகர்களிடம் மட்டுமல்ல ஊடகவியலாளர்களிடையேயும் மிக அழுத்தமாகவே பதிந்து போயிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது போலிருக்கிறதே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com