இது கனவுக் கன்னிகளின் கதையல்ல... கனவுக் கண்ணன்களின் கதை!

நெடுநெடுவென்ற உயரம்... கள்ளமற்ற அப்பாவித்தனமான புன்னகை என ரஹ்மான் அப்போது பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற ஒரு தோற்றத்தில் இருந்ததால் அவர் நடித்த நிலவே மலரே...
இது கனவுக் கன்னிகளின் கதையல்ல... கனவுக் கண்ணன்களின் கதை!

நேற்று சி. மோகனின் ‘ஆசை முகங்கள்’ புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. தினம் ஒரு புத்தகம் என்ற வரிசையில் நேற்று இதை ஒரே ஸ்ட்ரெச்சில் வாசித்து முடிக்க முடிந்ததற்கான காரணம் சப்ஜெக்ட் அந்த மாதிரி பாஸ்! என்று மழுப்பத் தோன்றினாலும் நிஜம் அது தான். சினிமா என்றாலே நமக்கு எப்போதும் சுவாரஸ்யம் தான். அதிலும் ஆதர்ஷ நடிகைகள் என்றதும் அவர்களைப் பற்றி நமக்குத் தெரிந்த இந்த நவீன யுகப் படைப்பாளிகள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஒரு ஈர்ப்பு.

ஆண்கள் ஒவ்வொருவருக்குமே பதின் பருவத்தில் ஆதர்ஷ நடிகை என்று ஒருவர் இருந்திருப்பார். சரி... நீங்கள் ஒரு பெண் என்றால் நிச்சயமாக ஆதர்ஷ நடிகர் என ஒருவர் நிச்சயம் இருந்திருப்பார். அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள். உங்கள் மனதைத் திறந்து அவர்களைப் பற்றிய எண்ணங்களைக் கொட்ட ஒரு வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொள்வீர்கள் இல்லையா? அதைத்தான் இந்தப் புத்தகத்தில் சில இலக்கிய பிரபலங்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்திருக்கும் நடிகைகளின் லிஸ்ட் எவரொருவருக்கும் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடும். 

நீங்களே இந்த லிஸ்டைப் பாருங்களேன்... அப்புறம் சொல்வீர்கள்.

  • டி.ஆர். ராஜகுமாரி - சி.மோகன்
  • பத்மினி - அ.முத்துலிங்கம்
  • சாவித்திரி- எஸ்.ராமகிருஷ்ணன்
  • சரோஜாதேவி - சி.மோகன்
  • வைஜெயந்தி மாலா - அசோகமித்திரன்
  • விஜயகுமாரி - R.P. ராஜநாயஹம்
  • கே.ஆர்.விஜயா - வீ.எம்.எஸ். சுபகுணராஜன்
  • லட்சுமி - வஸந்த்
  • ஸ்ரீதேவி - ராம்கோபால் வர்மா
  • சரிதா - ஜெயமோகன்
  • ஸ்ரீவித்யா - சுகுமாரன்
  • ஷோபா - பாலுமகேந்திரா
  • ராதிகா - நாசர்
  • சில்க் ஸ்மிதா - வீ.எம்.எஸ். சுபகுணராஜன்
  • ராதா - யுக பாரதி
  • ரேவதி - சீனு ராமசாமி
  • அமலா - பாஸ்கர் சக்தி
  • குஷ்பு - ரவிக்குமார்
  • சிம்ரன் - அஜயன் பாலா
  • அசின் - எம். டி. முத்துகுமாரசாமி

இந்த தொகுப்பில் இருக்கும் கட்டுரைகளில் எஸ்.ராவின் ‘சாவித்ரி’ குறித்த கட்டுரையையும், பாலு மகேந்திராவின் ‘ஷோபா’ குறித்த கட்டுரையையும் முன்னெப்போதோ வாசித்த நினைவிருக்கிறது. மீண்டுமொரு முறை வாசிக்க நேர்ந்ததிலும் எந்தக் குறையும் இல்லை. மொத்தக் கட்டுரைகளில் எனக்கு மிகப்பிடித்திருந்தது அ,முத்துலிங்கத்தின் ‘பத்மினி’ குறித்த கட்டுரையும், ராஜநாயகத்தின் ‘விஜயகுமாரியையும்’, யுக பாரதியின் ‘ராதா’வையும், சீனு ராமசாமியின் ‘ரேவதி’ குறித்த கட்டுரையும் எனலாம். ஏனென்றால் அவற்றிலிருந்த வெள்ளந்தித் தனமான ரசனை. அதை வாசிக்கும் என் ரசனையோடும் ஒத்துப் போவதாக இருந்தது திருப்தியான உணர்வைத் தருவதாக இருந்தது.

தொகுப்பை முழுவதுமாக வாசித்து முடித்த பின் எனக்குள் நான் கேட்டுக் கொண்டேன்... இப்படியொரு கட்டுரை எழுதுவதாக இருந்தால், நீ யாருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறாய் என? இதில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்துமே ஆண் படைப்பாளிகளிடமிருந்து மட்டுமே பெறப்பட்டிருந்தன. இதே பெண் படைப்பாளிகளிடமிருந்து கட்டுரைகள் வாங்குவதாக இருந்தால் அவர்கள் ஒருவேளை தத்தமது கனவுக்கண்ணன்களைப் பற்றி இதே விகிதத்தில் பகிர்ந்து கொண்டிருந்திருக்கக் கூடும்.

அந்த வரிசையை நாமே தொடங்கி வைத்தால் என்ன?

பள்ளிக்காலங்களில் எனக்கு மிகப்பிடித்த நாயகர்களாக இருந்தவர்கள் ரஹ்மானும், ராம்கியும். அது ஏன் என்றால்? சொல்லத் தெரிந்ததில்லை அப்போது. இத்தனைக்கும் அன்றெல்லாம் இவர்களை பெரிய திரையில் கண்டதில்லை. அடிக்கடி திரையரங்கம் சென்று படம் பார்க்கும் வாய்ப்புகளும் வெகு குறைவு. எப்போதாவது அழைத்துச் செல்லப்படும் உள்ளூர் தியேட்டருக்கு ‘புது’படங்கள் வந்து சேர்கையில் வாஸ்தவத்தில் பெருநகரவாசிகளுக்கு அது பழைய படமாகி இருக்கும். ரஹ்மானுக்காக மட்டுமே பல திரைப்படங்கள் எனக்குப் பிடித்தவையாக இருந்தன. நெடுநெடுவென்ற உயரம்... கள்ளமற்ற அப்பாவித்தனமான புன்னகை என ரஹ்மான் அப்போது பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற ஒரு தோற்றத்தில் இருந்ததால் அவர் நடித்த நிலவே மலரே, வசந்த ராகம், அறியாத பந்தம், ஒருவர் வாழும் ஆலயம், அன்புள்ள அப்பா திரைப்படங்களை ரஹ்மானுக்காகவே ஒன்றிரண்டு முறைகளுக்கு மேலும் அப்போது விசிஆரில் பார்த்து ரசித்தது உண்டு.  ரஹ்மான் நடித்த திரைப்படங்களில் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான அறியாத பந்தம் திரைப்படத்தில் இடம்பெறும் ...

‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா

தன்னையே சகியென்று சரணமெய்தினேன்... '

- இப்போதும் என் ஃபேவரிட் பாடல் லிஸ்டில் உண்டு. அந்தப் பாடலை எப்போது டி.வியில் கேட்க நேர்ந்தாலும் நேரமாவதைப் பற்றிய பிரஞ்சைகள் ஏதுமின்றி முழுவதும் முடிந்த பிறகு தான் நகர்வது வழக்கம். அந்தப் பாடலில் அமலாவின் அபிநயங்கள் ஏ கிளாஸாக இருந்த போதும் அதற்காக மட்டுமே நான் அந்தப் பாடலைப் பார்த்தேன் என்று சொல்ல முடியாது. 

இப்படி ரஹ்மானை ரசித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று 'சின்னப்பூவே மெல்லப்பேசு' என்று ராம்கி வந்து சேர்ந்தார். அந்தப் படத்தில் இந்தப் பையனை ரசிக்கலாமா... வேண்டாமா என்ற யோசித்துக் கொண்டிருக்கும் இடைவெளியில் 'செந்தூரப்பூவே' ரிலீஸ் ஆனது. 

கையில் டேப்பைத் தட்டிக் கொண்டே முழு வெள்ளை உடையில் கழுத்தில் சிவப்பு மப்ளர் சுற்றிக் கொண்டு 

‘செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா வா
வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகைத் தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை
அது தானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூரப் போவே இங்கு தேன் சிந்த வா வா
தெம்மாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா’

- என்று பாடிக் கொண்டே வந்து அன்றைய இளம்பெண்களின் உள்ளத்தில் பச்சக்கென வந்து உட்கார்ந்தார் ராம்கி. ராம்கி நடித்ததில் எனக்குப் பிடித்த படங்கள் கொஞ்சமே கொஞ்சம் தான்... சின்னப்பூவே மெல்லப்பேசு, செந்தூரப் பூவே, அம்மா பிள்ளை, இணைந்த கைகள், மருது பாண்டி, ஆத்மா,  இரட்டை ரோஜா, என்று விரல் விட்டு எண்ணத்தக்க படங்கள் மட்டுமே! இவற்றைத் தாண்டி ராம்கி நடித்த பிற படங்களை அவர் நடிக்காமலே இருந்திருக்கலாம் என்று நினைத்ததுண்டு.
 
ரஹ்மானையும் கூட புதுப்புது அர்த்தங்களுக்குப் பிறகு ரசிக்கவே முடிந்ததில்லை. அந்தப் படத்திலேயே கூட 'வசந்த ராகம்' ரஹ்மான் போல இந்த ரஹ்மான் ஏன் இல்லை? என்று மனம் முரண்டியது உண்மை. இப்போது யோசித்துப் பார்க்கையில் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ திரைப்படத்தில் எஸ்.வி.சேகர் நடித்த கதாபாத்திரத்தில் பேசாமல் ரஹ்மானை நடிக்க வைத்திருக்கலாமோ என்று கூட ஆர்வக்கோளாறாய் சில வேளைகளில் தோன்றியதுண்டு. அந்த அளவுக்கு ரஹ்மான் மேல் கொள்ளைப் ப்ரியம் வைத்தலைந்த நாட்கள் அவை. பிறகு ‘சங்கமம்’ என்றோரு திரைப்படம் ஏகமாக விளம்பரப்படுத்தப்பட்டு வெளிவந்தது. அதில் ரஹ்மான் சித்தப்பா கம் அங்கிள் நடிகர் போல மாறியிருந்தார். அந்தப் படத்தில் தோன்றியதை விட தற்போது ஏதோ ஒரு ஹேர் டை விளம்பரத்தில் வருகிறார் அது பார்க்க எவ்வளவோ தேவலாம் என்றிருக்கிறது. அப்படியெல்லாம் ரசித்த ரஹ்மானை சிங்கம் 2 வில் வில்லன் தங்கப்பனாக்கி சூர்யாவிடம் அடிவாங்க வைத்த இயக்குனர் ஹரி மீது கோபம் வந்த பொழுதுகளும் உண்டு.

ரஹ்மான், ராம்கியுடன் ஒருவழியாக எட்டாம் வகுப்புக்கு வந்தாயிற்று. அப்போது தான் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு விருட்டென்று மனசுக்குள் புகுந்து புது வெள்ளை மழையை கால நேரமின்றி பொழிய வைக்க வந்து சேர்ந்தார் ரோஜா மூலமாக அரவிந்த் சாமி.

‘செம கியூட் மச்சி’ என்று கத்தத் தோன்றியது. சில நேரங்களில் வகுப்பறைகளில் வாத்தியார் இல்லாத நேரங்களில் கத்தியும் இருக்கிறோம். முன்னவர் இருவரையும் கனவுக் கண்ணன்கள் என்று சொல்ல முடியாது. அதெல்லாம் பப்பி லவ். அவர்களை ஏதோ ஒரு காரணத்தால் பார்க்கப் பிடித்திருந்தது பார்த்தோம்... ரசித்தோம் என்று கடந்து விட முடிந்தது.

ஆனால் அரவிந்த் சாமியை அப்படிக் கடந்து விட முடிந்ததில்லை. அதனால் நிலைபெற்ற கமெண்ட் தான் ‘மாப்பிள்ளை அரவிந்த் சாமி மாதிரி ஜம்முன்னு இருப்பார்’ என்பது போலான பாராட்டுகள். 

‘கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
ஒரு மின்சாரப் பார்வையின் வேகம்...வேகம் உன்னோடு நான் கண்டு கொண்டேன் 
ஒரு பெண்ணோடு தோன்றிய காமம் காமம் என்னோடு நான் கண்டு கொண்டேன்’
என்னை மறந்து விட்டேன் இந்த உலகத்தில் நானில்லை நானில்லை’ 

- என்று அந்தப்படத்தில் மனிஷா கொய்ராலா மட்டுமா பாடினார்?! அந்தப் படத்தைப் பார்க்க வாய்த்த ஒட்டுமொத்த தமிழகத்துப் பெண்களும் சேர்ந்து தானய்யா பாடிக் கொண்டிருந்தார்கள் அப்போது. ஆனாலும் என்ன ஒரு துரதிருஷ்டம் பாருங்கள்! அரவிந்த் சாமியின் மீதான காதலைச் சொல்ல ரோஜா, பம்பாய் என்று இரண்டு படங்கள் மட்டுமே வாய்த்தன. அதைத்தாண்டி அவரது வேறெந்த திரைப்படங்களும் ஈர்த்ததாக நினைவில்லை.  என் கல்லூரிக் காலங்களில் ‘அலைபாயுதே’ வில் சும்மா கெஸ்ட் ரோலில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும் விருப்ப முன்னுரிமையில் எனக்கப்போது ஹீரோ மாதவனைக் காட்டிலும் அரவிந்த் சாமியைத்தான் அதிகம் பிடித்திருந்தது என்று சொன்ன போது கிளாஸ்மேட் நித்யா என்னை வினோதமாகப் பார்த்த்து விட்டுப் போனது இன்னும் ஞாபகமிருக்கிறது.

அரவிந்த் சாமிக்கு முன்பே விஜயும், அஜித்தும் கோலிவுட்டில் அறிமுகமாகி இருந்த போதும் பெரிதாக ஈர்த்தார்கள் என்று சொல்ல முடியாது. விஜய்க்கு ஒரு ‘பூவே உனக்காக’ வரவேண்டியிருந்தது. அஜித்தை ‘ஆசை’ யில் பிடித்திருந்த போதும் மனம் கவர்ந்த நாயகனானது காதல் கோட்டை, வாலி போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு தான். இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்களில் ஒரு ரசிகையாக எனக்குப் பிடித்த படங்கள் என்றால் அவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்றபடி இவர்களை கனவுக் கண்ணன்கள் என்றெல்லாம் சொல்ல முடிந்ததில்லை. இவர்களது வரிசையில் மாதவனை ‘அலைபாயுதே’ வில் மட்டும் பிடித்திருந்தது. அப்பாஸுக்கு ஒரே ஒரு ‘காதல் தேசம்’ மட்டும். அப்புறம் இவர்கள் நடித்த எந்தப் படமும் மனதில் நின்றதில்லை.

பிளஸ் டூ முடித்து விட்டு விடுமுறையில் வீட்டிலிருந்த நேரத்தில் ‘தொலி பிரேமா’ என்றொரு தெலுங்குப் படத்தின் தமிழ் டப்பிங் திரைப்படம் காண வாய்த்தது. அன்று முதல் பவன் கல்யாண் ஃபேனாக மாறி சில காலம் பவன் நடித்த தெலுங்குப் படங்களைத் தேடித் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் அந்த முகம் போர் அடிக்கவே நாகார்ஜூன்(இதயத்தைத் திருடாதே, சிவா, ஜீவா திரைப்படங்களுக்காக), மம்மூட்டி (மெளனம் பேசியதே படத்துக்காக மட்டும்... கல்யாணத் தேன் நிலா பாடல் வருமே அந்தப் படம்), கமல், அமீர் கான் (கயாமாத் சே கியாமத்) இப்படி சில காலம் ஓடியது.

இந்த லிஸ்டில் அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக்கையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவர்களை கனவுக் கண்ணன்கள் என்று சொல்ல முடியாது. 80 களின் இறுதியில் இவர்கள் நடித்த சில திரைப்படங்கள் உயிர்ப்புடன் அன்றைய டீன் ஏஜர்களை கவரும் விதத்தில் இருந்ததால் இவர்கள் நடித்த சில திரைப்படங்களை எப்போது பார்க்க நேர்ந்தாலும் அது திகட்டவே திகட்டாது. அந்த லிஸ்டில் பிரபுவுக்கு மை டியர் மார்த்தாண்டனும், கார்த்திக்குக்கு மெளனராகம், உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் போன்ற திரைப்படங்களும் எவர் கிரீன் ஃபேவரிட்.

இவர்களைத் தாண்டி பிறகு வெகுநாட்களுக்கு கனவுக் கண்ணன்கள் என்று சொல்லத்தக்க வகையில் வேறு எந்த ஹீரோவிலும் பெரிதாக மனம் லயித்ததில்லை...

பிறகு சில வருடங்கள் கழித்து...

திருமணமாகி முதல் குழந்தை பிறந்திருந்த நேரம்... கணவர் வேலைக்குச் சென்று விட்டார் என்றால் பகலெல்லாம் குழந்தையின் வேலைகளை முடித்து அவளைத் தொட்டிலில் இட்ட பிறகு ஒரு மூன்று மணி நேரம் சும்மா வெட்டியாகத்தான் உட்கார வேண்டியதாயிருக்கும்... வாசிப்பதற்குப் பெரிதாக புத்தகங்கள் எல்லாம் அப்போது இருந்ததில்லை. அப்படி போரடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததொரு மத்யான வேலையில் கணவர் த்ரீ இன் ஒன் டிவிடி ஒன்றை வாங்கி வந்து கொடுத்தார். அவரிடம் நான் கேட்டிருந்தது பவன் கல்யாண் திரைப்படங்களை. ஆனால், அவர் வாங்கி வந்ததோ வர்ஷம், அடவி ராமுடு, சத்ரபதி என்ற மூன்று படங்களும் இருந்த த்ரீ இன் ஒன் டிவிடி. அப்போது அவருக்கு வேலை நிமித்தம் ஆந்திராவையும் கவனிக்க வேண்டியிருந்தது. ஆந்திராவில் அப்போது த்ரிஷாவுக்கு செம கிரேஸ். தெலுங்கு மகா ஜனங்கள் த்ரிஷா என்றால் ‘நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்ட்டானா’ என்று எட்டுத்திக்கிலும் பித்துப் பிடித்துத் அலைந்து கொண்டிருந்தார்கள். ஆக, யாரோ ஒரு தெலுங்கு கிளையண்ட் வர்ஷம் ‘பாக உந்தி சார்... த்ரிஷா சூஸ்தே மல்லி மல்லி தியேட்டர் அதிரி போயிந்தி’ என்று கொழுத்திப் போட இவர் அந்த டிவிடிக்களை வாங்கி வந்து தந்தார்.

அடச்சே! நான் என்ன வாங்கச் சொன்னேன், இவர் எதை வாங்கி வந்திருக்கிறார் என்று கொஞ்சம் கோபத்துடன் தான் அந்த டிவிடிக்களை வேண்டா வெறுப்பாக பார்க்கத் தொடங்கினேன். அட அதற்கப்புறம் ஒரே ஸ்ட்ரெச்சில் குழந்தை தூங்கும் நேரமெல்லாம் கர்மமே கண்ணாக மூன்று படங்களையும் பார்த்து முடித்த பின் தான் எனக்கு திருப்தியாச்சு. மூன்றுமே வெவ்வேறு விதமான ஜானர்களில் எடுக்கப்பட்ட படங்கள். மூன்றிலும் வர்ஷம் ராக்கிங்... அந்தப் படம் தமிழில் ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் ஆனது. ஆனாலும் ஒரிஜினலுக்கு நிகரில்லை. மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி கதையாக பிரபாஸைப் பார்த்த கண்ணால் ஜெயம் ரவியைப் பார்க்க முடியலை... வர்ஷம் அப்படி இருந்தது பாஸ்! இதை நீங்களும் ஒரு பிரபாஸ் ரசிகையாக இருந்தால் மட்டுமே உணர முடியும். 

ஹாட்ரிக்காக ஒரே ஹீரோவின் மூன்று திரைப்படங்களை பார்க்க வாய்த்த போதும்... மீண்டும் உடனடியாக அவரது படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. பிறகெப்போதோ ஜெமினி டிவியிலோ, மா டிவியிலோ பிரபாஸின் ‘ஈஸ்வர்’ மற்றும் ‘ராகவேந்திரா’ திரைப்படங்களைக் காண நேர்ந்தது. அந்தப் படங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பிறகு பல வருடங்கள் கழித்து ராஜமெளலி இயக்கத்தில் ‘பாகுபலி’ என்றொரு மெகா பட்ஜெட் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதில் பிரபாஸ் தான் ஹீரோ என்று விகடனில் வாசித்த நினைவு. பாகுபலி சிலையை கோமதீஸ்வரர் சிலையோடு ஒப்பிட்டு இது ஏதோ ஜெயின் தீர்த்தாங்கரரது சரித்திரக் கதை என்று எழுதியிருந்தார்கள். படம் குறித்த அந்த அறிமுகத்தில் படத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென்ற ஈர்ப்பே எழவில்லை. பிறகு சில மாதங்களில் பாகுபலியின் இரு ஹீரோக்களும் இணைந்து நிற்கும் போஸ்டர் வெளியானது. அதிலும் பெரிதாக ஈர்ப்பில்லை. அப்புறம் சில மாதங்கள் கழித்து நியூஸ் பேப்பர் விளம்பரமொன்றில் பிரபாஸ் சிவலிங்கத்தை தோளில் தூக்கிச் செல்லும் ஸ்டில் விளம்பரமாக இடம்பெற்றிருந்தது. அதைப் பார்த்ததும் மனதுக்குள் அட! என்றொரு ஆச்சர்யக்குறி. 

பிறகு படம் வெளிவந்ததும் அதைப் பெரிய திரையில் காண முடியவில்லை. ஒரு வயது கூட நிரம்பாத என் சின்ன மகளைத் தூக்கிக் கொண்டு தியேட்டருக்குச் செல்லும் மனோதைரியம் இல்லாததால் படம் வெளிவந்து ஜம்போ ஹிட் அடித்து மூன்று மாதங்கள் கழித்து டிவிடி கிடைத்தது. அதற்குள் 50 இஞ்ச் டிவி வாங்கியிருந்ததால்... ஆசை, ஆசையாக அதில் பாகுபலியை ஓட விட்டேன். குழந்தை தூங்கி விட்டதால் ரசித்து, ரசித்து அந்தப்படத்தைப் பார்க்க முடிந்தது. அப்போது என் அம்மா, அப்பா இருவரும் எங்களைப் பார்க்க வந்திருந்தார்கள்... பாவம் ரெண்டு பேரையும் தூங்க விடாமல் எனக்குப் பிடித்த ஒவ்வொரு சீனிலும் அம்மாவையோ, அப்பாவையோ எழுப்பி, எழுப்பி அட... அட என்னமா நடிச்சிருக்கான் பாருங்களேன்... ச்சே...ச்சே இப்படி ஒரு டெடிகேட்டட் ஹீரோ தமிழில் இல்லை. ம்மா... ம்மா... இங்க பாருங்க ஒரு அருவியில இருந்து இன்னொரு அருவிக்குத் தாவுறான்மா! சான்ஸே இல்லை.... பொறந்ததுல இருந்து இப்படி ஒரு ஃபெண்டாஸ்டிக் மூவி நான் பார்த்ததே இல்லை’ என்றெல்லாம் அதீத உற்சாகத்துடன் தொணதொணத்துக் கொண்டே படம் பார்த்து முடித்தேன். முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த பல சிக்நேச்சர் சீன்கள் அனைத்தும் சிறு வயதில் நான் படித்து ரசித்த அம்புலி மாமாவில் இருந்து உறுவப்பட்டது என்று தெரிந்த போதும் என்னால் அந்தப் படத்தை முழு மனதுடன் ரசிக்க முடிந்ததென்றால் காரணம் பிரபாஸ் ஹீரோ என்பதால் மட்டுமே அல்ல. நான் எதிர்பார்த்த ஃபேண்டஸியை பிரபாஸ் மாதிரியான ஒரு பொருத்தமான ஹீரோவை வைத்து அளிக்க முயன்றதில் இருக்கிறது அந்தப் படத்தின் வெற்றி. அந்தப் படத்தைப் பொருத்தவரை ஹீரோ பிரபாஸ் அல்ல அதன் ஃபேண்டஸி மட்டுமே!

முதல் பாகம் பார்த்து முடித்தேனா இல்லையா? இரண்டாம் பாகம் எப்போதடா வரும் என்றிருந்தது. முதல் பாகம் விசுக்கென முடிந்து போன சோகத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அத்துடன் அப்போது அலுவல் ரீதியாகவும் வீடு, குழந்தையின் படிப்பு, இரண்டாவது குழந்தை, குழந்தை வளர்ப்பு என்றொரு லாங் பிரேக்குக்குப் பின் தினமணியில் வேலைக்கும் சேர்ந்தாச்சா? பாகுபலி 2 குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்ததில் ஒரு சிறு திருப்தி. 

ஒருவழியாக படத்தை முடித்து 2016 ல் ரிலீஸ் செய்தார்கள். இரண்டாம் பாகம் முதல் பாகத்தைக் காட்டிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இந்திய சினிமா வரலாற்றில் சாதனை படைத்தது. 

பிரபாஸைப் பொறுத்தவரை அவர் எந்தப் படத்தில் நடித்திருந்த போதும் அத்தனை படங்களிலும் தன்னுடைய போர்ஷனுக்குண்டான உழைப்பை எவ்வித காம்ப்ரமைஸ்களும், நிபந்தனைகளுமின்றி பக்காவாகக் கொட்டியிருப்பார். அவரது சில படங்களில் கதையை ரசிக்க முடியாவிட்டாலும் கூட ஒரு ஹீரோவுக்குண்டான அந்த உழைப்பை ரசிக்கலாம்.

‘இந்தக் காட்சியில் இப்படி நின்றால் நன்றாக இருக்கும்,  ஹீரோயினைப் பார்த்து இப்படிச் சிரித்தால், இப்படிப் புன்னகைத்தால், இவ்வளவு காதலைக் கொட்டினால், இவ்வளவு சோகம் காட்டினால், கண்களில் இவ்வளவு பாசம் காட்டினால் போதும் ரசிகர்களுக்கு குறிப்பாக ரசிகைகளுக்கு நிச்சயம் பிடித்துப் போகும், ஆக்‌ஷன் காட்சிகளில் இவ்வளவு ஆக்ரோஷம் போதும், எனும் அவரது திட்டமிடல் குறித்து பிரபாஸ்... ரசிகைகளுடனான தனது நேர்காணலொன்றில் பகிர்ந்து கொண்டிருந்தார்... அதில் அவருக்கே உரித்தான கண் நிறைந்த குறுஞ்சிரிப்புடன் அவர் சொன்ன,

‘எல்லாமும் உங்களுக்காகத் தானே, உங்களை மனதில் வைத்து தானே!

- என்ற வார்த்தைகளைக் கேட்டதும் ஒரு ரசிகை அடக்க முடியாமல் சொன்னார்...  ஏமி உன்னாடுரா பாபோய்?! (என்னமா இருக்கான்டா இவன்?) அதைக்கேட்டு மற்றவர்கள் அனைவரும் ஆர்ப்பரித்துச் சிரித்தனர்.

இந்த டயலாக் ‘மிர்ச்சி’ படத்தில் இடம்பெறும். தன்னைப் பெண் பார்க்க வரும் வரன்களை எல்லாம் தவிர்த்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா, ராஜா போல மனசுக்குப் பிடித்த மாப்பிள்ளைக்காக காத்திருப்பார். பிடிக்காத மாப்பிள்ளைகளை விரட்ட வீட்டிலேயே இருக்கும் முறைப்பையன் ஒருவனை அழைத்துச் சென்று வரவிருக்கும் வரனின் முன் நிறுத்தி, நானும், இவரும் காதலிக்கிறோம்,  நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள் என்று சொல்வது தான் அனுஷ்காவின் நோக்கம். அந்த நோக்கத்தில் அவர் வரும் போது தான் திடீரென பிளாக் அண்ட் பிளாக் உடையில் சார்மிங் லுக்கில் கார் கதவைத் திறந்து கொண்டு பிரபாஸ் இறங்குவார். பார்த்ததுமே அனுஷ்காவின் மனதில் பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கி விடும். பக்கத்தில் நிற்கும் முறைப்பையனிடம், 
‘ஏமி உன்னாடுரா பாபு! இண்டிகெல்லி போத்தாம்... ஓக்கே செப்பேத்தாம் ஓக்கே செப்பேத்தாம்...  நா மாட்ட வினு இட்டாண்டிவாடு மல்லி மல்லி தொரகடுரா...’ (வீட்டுக்குப் போய் ஓக்கே சொல்லிடலாம், இப்படிப்பட்ட மாப்பிள்ளை மறுபடி, மறுபடி கிடைக்க மாட்டாண்டா’)

பாகுபலிக்குப் பிறகு ஒருமுறை குடும்பத்துடன் ரிஸார்ட் ஒன்றில் தங்க நேர்ந்த போது இரவில் மொத்தக் குடும்பமும் சேர்ந்து பிரபாஸின் அத்தனை தெலுங்குப் படங்களையும் வரிசையாகப் பார்க்கத் தொடங்கினோம். முதலில் ஈஸ்வர், இரண்டாவதாக ராகவேந்திரா, வர்ஷம், அடவி ராமுடு, சக்ரம், பெளர்ணமி, யோகி, முன்னா, புஜ்ஜிகாடு, பில்லா, ஏக் நிரஞ்சன், டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட்,  ரெபல், மிர்ச்சி என்று பாகுபலி தவிர்த்த பிரபாஸ் திரைப்படங்கள் அத்தனையையும் பார்த்துத் தீர்த்தோம்.

அவற்றில் பெளர்ணமி, மிஸ்டர். பெர்ஃபெக்ட், டார்லிங், சுமார் ரகம்.

மிர்ச்சி இன்னொருமுறை பார்க்கத் தூண்டியது.

புஜ்ஜிகாடு சுத்தமாகப் பிடிக்கவில்லை. பில்லா படு சுமார் ரகம். தமிழில் ரஜினியின் பில்லாவுக்கு உறை போடக் காணாது இந்த பில்லா. இத்தனைக்கும் ரஜினியின் பில்லாவில் அவருக்கு சிக்ஸ் பேக் இல்லை. இன்றைக்கிருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவுமே இல்லை. ஆனாலும் அந்த பில்லாவாக இந்த பில்லா இல்லாமல் போய் விட்டதே என்ற வருத்தம் எனக்குண்டு.

யோகி, முன்னா, ஏக் நிரஞ்சன், ரெபல் திரைப்படங்கள் எல்லாம் கடுப்படித்தன. பிரபாஸ் இதில் நடிக்காமல் இருந்திருக்ககூடாதா என்றிருந்தது.

நயன்தாரா, அசின் எல்லாம் ஜோடியாக இருந்தும் கூட  படு திராபையாக இருந்த படங்கள் என்றால் அது  ‘முன்னா’ மற்றும் ‘சக்ரம்’ திரைப்படங்கள்.

பிரபாஸ் நடிப்பில் மிகப்பிடித்திருந்த திரைப்படங்கள் என்றால் அது வர்ஷம், மிர்ச்சி, பாகுபலி 1 & 2 என்ற மூன்றே திரைப்படங்கள் மட்டுமே!

இப்போது அவரது அடுத்த திரைப்படமான சாஹூவுக்காக வெயிட்டிங்... படத்தை எடுக்கிறார்கள், எடுக்கிறார்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ரிலீஸானால் முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.

இதேதடா வம்பா போச்சு, ஒரு புத்தகத்தை வாசித்ததால் வந்த வினை! ஆண்கள் சர்வ சாதாரணமாகச் சொல்லி விடுகிறார்கள் தங்களது கனவுக் கன்னிகள் லிஸ்டை. ஆனால், பெண்களுக்கு அப்படிச் சொல்லி விட முடிவதில்லை. இப்படி நீட்டி, முழக்கித்தான் சொல்லியாக வேண்டியிருக்கிறது.

ஆசைமுகங்கள் புத்தகத்தை வாசித்ததால் வந்த வினை. வாசிக்கும் யாருக்கும் தோன்றத்தான் செய்கிறது அவரவர் கனவுக் கன்னிகளை/ கனவுக் கண்ணன்களைப் பட்டியலிடும் ஆசை!

விருப்பமிருப்பவர்கள் ஒருமுறை வாசிக்கலாம்.

புத்தகம்: ஆசைமுகங்கள்

தொகுப்பு: சி.மோகன்
வெளியீடு: கயல் கவின் பதிப்பகம்
விலை ரூ:90

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com