சாதி, மத அரசியலை எதிர்க்கும் திரை நாயகர்கள்: அக்கறையா? வர்த்தகமா?

திரைப்படங்களில் சாதி மத ரீதியாக நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் குறித்து ஒரு பார்வை    
சாதி, மத அரசியலை எதிர்க்கும் திரை நாயகர்கள்: அக்கறையா? வர்த்தகமா?
Published on
Updated on
4 min read

தமிழ் சினிமாவில் சமூக பிரச்சனைகளை பேசுவதன் மூலம் முன்னணி நடிகர் என்ற நிலையை பெற்றவர்கள் ஏராளம். எம்ஜிஆர் தொடங்கி விஜய் வரை சமூக பிரச்சனைகளைத் திரைப்படங்களில் பேசி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வந்திருக்கிறார்கள். 

சில நேரங்களில் சில கதாநாயகர்கள் பேசிய கருத்துகள்  பிற்போக்குத்தனமானவையாக இருக்கும் அல்லது தவறாக வழி நடத்தக் கூடியதாகக்கூட இருக்கும். இப்போதெல்லாம் பெண்களைப் பற்றிய பார்வை  பெரிதும் மாறியிருக்கிறது. பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று வகுப்பெடுத்துக் கொண்டிருந்த காலம் மாறி, இப்பொழுது பெண்களுக்கு ஆதரவாகக் கதாநாயகர்கள் பேசி வருகிறார்கள். 

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். எத்தனையோ பாடல்களை பாடியிருக்கிறார். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சுயமாக முடிவெடுத்து, தனக்கு பிடித்த மாதிரி இருப்பதை அவர் திமிர் பிடித்தவராக சித்திரித்திருப்பர். அதே ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ஒரு காட்சியில் நடிகை அஞ்சலி பாட்டீலை அவமானப்படுத்துவதற்காக அவரது உடையைக் களைவார்கள். ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னை அப்படி செய்தவரை தாக்குவார். 

இதே போலவே 'சிவகாசி' படத்தில் நடிக்கும் அசினை அவர் அணிந்திருக்கும் உடைக்காக விஜய் விமர்சிப்பார். ஆனால், பெண்கள் அணியும் உடைதான் ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்துகொள்வதற்குக் காரணம் என்ற கூற்றை தவறென மாஸ்டர் படத்தில் நிரூபிப்பார். 

நடிகர்களின் இத்தகைய மாற்றத்துக்கு மக்களின் மனதில் நிகழ்ந்த மாற்றமே ஒரு முக்கிய காரணம். இன்னும் பிற்போக்குத்தனமாகப்  பேசிக்கொண்டிருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் உணரத் துவங்கி விட்டனர். 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நட்சத்திர நடிகரான அஜித் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நின்று பேசுவார். 

சாதி, மத ரீதியான பிம்பங்களையும் திரைப்படங்கள் தற்காலிகமாக உடைத்து வருகின்றன. எஜமான் போன்ற படங்களில் ரஜினிகாந்த் 'எஜமான்' காலடி மண்ணெடுத்து என தன்னை உயர்ந்த சாதி போல காட்டிக்கொண்ட ரஜினிகாந்த், 'காலா', 'கபாலி' போன்ற படங்களில் தாழ்த்தப்பட்டவராக  நடித்தார்.

'எஜமான்' மட்டுமல்ல, அப்போது வெளியான 'நாட்டாமை', 'சூர்ய வம்சம்' போன்ற சாதிப் பெருமையைப் பேசிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அதனைத் தொடர்ந்து பெரிய நடிகர்கள்கூட சாதிப் பெருமை பேசும் படங்களைத் தேடித்தேடி நடித்தனர். 

தங்களை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொண்ட நடிகர்கள்கூட படம் முழுக்க சாதிப் பெருமைகளைக் காட்சிப்படுத்திவிட்டு, இறுதிக் காட்சியில் மட்டும் போய் புள்ள குட்டிங்களைப் படிக்க வைங்க எனப் பேசி சாதி எதிர்ப்பாளராகக் காட்டிக்கொண்டனர். 

இப்படி இருக்கையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் வருகை முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முதல் படமான அட்டகத்தியிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை உண்மைக்கு மிக நெருக்கமாகப் பதிவு செய்து கவனம் பெற்றார். 'அட்டகத்தி' முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படம். அடுத்ததாக அவர் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கதாநாயகன் முன்னணி நடிகரான கார்த்தி. அந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை சுவாரசியமாகப் பதிவு செய்தால் வெற்றி பெறும் என்பதே தமிழ்த் திரையுலகுக்கு அப்போதுதான் தெரிய  வந்ததோ எனத் தோன்றுகிறது. அப்போது தான் தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் நிகழ்வு நடக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இயக்குநர் ரஞ்சித்துடன் இணைகிறார். அதுவும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் என்பது முக்கியமானது.

ரஞ்சித்திற்கு முன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிப் பேசும் படங்கள் தமிழ் சினிமாவில் வராமல் இல்லை. ஆனால் அவை பெரும்பாலும் ரசிகர்களின் கவனம் பெறவில்லை. ஒருசில படங்கள் தவறான பிம்பத்தை கட்டமைத்தன. ரஞ்சித் தனது படங்களில் எந்தவொரு சாதியையும் உயர்த்திப் பேசவில்லை. மாறாக எல்லோரும் சமம் என்பதையே சொல்ல வருகிறார்.

தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாகிறது. கல்லூரி போன்ற பொது இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் எதிர்கொள்ளும் வலிகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்யும் வகையில் கவனம் பெறுகிறது. பரியேறும் பெருமாளின் இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களை பொறுத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. மற்றவர்களுக்கும் அதில் இருக்கும் உண்மை வலித்தது.  

இதன் காரணமாக அந்தப் படம் வசூலைக்  குவித்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தவிர வேறு யாரும் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் சாதிய ரீதியாக பெரும் விவாதத்தை உருவாக்குகிறது. 

ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜின் வெற்றி, பிரபல நடிகர்களைத் திரும்பி பார்க்க வைக்கிறது. மாமனார் ரஜினி வழியில் நடிகர் தனுஷ் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்னைகளை பேசிய அசுரன் வெளியாகிறது. வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கிறது. அது மட்டுமல்லாமல், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளை குவிக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களின் வலிகளைப் பதிவு செய்யும் ஒரு படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிக்கிறது என்றதும் திரையுலகினரின் கண்கள் அகல விரிகின்றன.     

அப்போது தான் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. அந்தப் படத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞராக சூர்யா நடிக்கிறார். ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகிறது. உண்மையில் கோபிநாத் உயர் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் மாறுதலுக்காக இந்தப் படத்தில் சூர்யா அப்படியில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறார்.  இந்தப் படத்தில் சூர்யாவும், அபர்னாவும் சுய மரியாதை திருமணம் செய்துகொள்வது போல் காட்டப்படும். இந்தப் படமும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற அது ஒரு வெற்றிக்கான வழியாக பார்க்கப்படுகிறது. 

மாரி செல்வராஜின் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படமும்  திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றிபெறுகிறது. இந்தப் படம் 1995ல் நடைபெற்ற கொடியன்குளம் சாதிக் கலவரத்தை அடிப்படையாகக் உருவாகிறது. உயர் சாதியினரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர்ந்த கொடுமையை ரத்தமும் சதையுமாக பதிவு செய்தது இந்தப் படம். 

இந்த நிலையில் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் பழங்குடியினரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. அவர்களைக் காவல்துறையினர் நடத்திய விதம் ரசிகர்களைக் கண்கலங்க வைத்தது. இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியும் வழக்கறிஞராகப் பணியாற்றியவருமான சந்துருவின் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். சூர்யா போன்ற ஒரு பிரபல நடிகர் நடித்ததால் இந்தப் படம் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளது. மேலும் ஒரு குறிப்பட்ட சமூகத்தைத் தவறாக காட்டியதாக சர்ச்சைகளையும் சுமந்து வருகிறது. 

அதே போல தமிழ் சினிமாவில் மத ரீதியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களும் தற்போது உடைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாவில் தீவிரவாதி என்றாலே முஸ்லிம்தான். படம் முழுக்க முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் தமிழ் சினிமா இறுதிக் காட்சியில் 'ஒரு முஸ்லிம் நண்பன்கூட இல்லாத ஹிந்துவைப் பார்க்க முடியாது' என பிராயச்சித்தம் தேடிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள 'மாநாடு' திரைப்படத்தின்  கதாநாயகன் சிம்பு, அப்துல் காலிக் என்ற இஸ்லாமியராக நடித்துள்ளார். இந்தப் படம் இஸ்லாமியர்களுக்குக் எதிராகப் பொதுவாகக் கட்டமைக்கப்படும் போலி  பிம்பங்களை பற்றி பேசியிருக்கிறது. குறிப்பாக ஒரு காட்சியில் ''அமெரிக்காவில் ஒருவன் தொடர் கொலைகள் செய்தால் அவன் சைக்கோ, இங்கு ஒரு முஸ்லிம் செய்தால் அவன் தீவிரவாதியா" என்று பேசும் வசனம் கவனம் பெற்றது. 

கமல்ஹாசன் அடுத்ததாக பா.ரஞ்சித்துடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலின் 'ஆர்டிக்கிள் 15' படத்தின் தமிழ்ப் பதிப்பான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார் . இப்படி வருங்காலங்களிலும் நம்பிக்கைக்குரிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

மேலும்  இயக்குநர்களும் இது ஒரு டிரெண்ட் அல்லது வெற்றிக்கான வழி என்ற அளவில் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளை உணர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது. அப்படி  செய்தால் அவற்றைப் பார்க்கும் மக்களின் மனங்களிலும் மாற்றங்கள் நிகழும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com