விக்ரம் வெற்றி பெற்றது எவ்வாறு?

இப்போதெல்லாம் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் எந்தத் திரைப்படங்களும் வன்முறைக் காட்சிகள் இல்லாமல் வெளியாவதில்லை. வன்முறைகள் இல்லையென்றால் அது பிரம்மாண்டமாகக் கருதப்படுவதுமில்லை.
தீப்பறக்க தீப்பறக்க விக்ரம்...
தீப்பறக்க தீப்பறக்க விக்ரம்...

இன்றைக்கு பிரம்மாண்டமாக எடுக்கப்படும் எந்தத் திரைப்படமும் வன்முறைக் காட்சிகள் இல்லாமல் இருப்பதில்லை. வன்முறைகள் இல்லாவிட்டால் அது பிரம்மாண்டமாகக் கருதப்படுவதுமில்லை. இந்த மொழியில் மட்டும்தான் என்று இல்லாமல் உலகம் முழுவதும் வன்முறைகளை மையப்படுத்தியே தற்போது பெரும்பாலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏன் வன்முறை அம்சங்கள் உள்ள படங்கள் அதிகம் வெற்றி பெறுகின்றன?

வன்முறை மனிதனின் இயல்பு. அதைக் கடந்துதான் பல குணங்களை அடைய வேண்டியிருக்கிறது. அதீத காம, குரோத, வன்முறையில் உருவாகும் எந்தப் படைப்புகளும் அவ்வளவு எளிதாகத் தோல்வி அடைவதில்லை.

சமீபத்திய உதாரணம் நெட்பிளிக்ஸில் வெளியான ‘ஸ்குவிட் கேம்’ இணையத் தொடர். பணத் தேவை உள்ளவர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களை ஓர் இடத்தில் அடைக்கிறார்கள். அங்கு சிறுவயதில் விளையாடிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 456 பேர் கலந்துகொள்ளும் போட்டியில் ஒருவருக்குதான் பரிசு. சரி தோற்பவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்களா? இல்லை. அங்கேயே சுட்டுக்கொல்லப்படுவார்கள். நகைச்சுவையாக தொடங்கப்படும் அதன் காட்சிகள் நேரம் கூடக்கூட அடுத்த பலி யார் என உள்ளூர நம்முடைய மனம் எதிர்பார்க்கத் துவங்கிவிடுவதே இந்தத் தொடரின் இமாலய வெற்றிக்குக் காரணம். மிகச்சரியாக, மனித உணர்வுகளைக் கவனித்து எடுக்கப்பட்ட தொடர். விதவிதமாக கொல்லப்படுகிற காட்சிகளை நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் நம்முள்ளே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது?  இந்தத் தொடர், உலகளவில் பெரும் வெற்றியைப் பதிவு செய்ததற்கான காரணமே அதில் வெளிப்பட்ட குரூரமான வன்முறைதான். 

ஸ்குவிட் கேம் தொடர் 
ஸ்குவிட் கேம் தொடர் 

சரி, அதிலாவது கதை என ஒன்றிருந்தது. இந்தியாவில் தற்போது எடுக்கப்படும் 90 சதவீதப் படங்களில் அதை எதிர்பார்க்க முடியாது என்றால் வியப்பதிற்கில்லை. ஆனாலும், தற்போதைய நிலவரத்தில் உச்சகட்ட வன்முறைகளைக் காட்சிப்படுத்தும் படங்கள் ‘மினிமம் கியாரண்டி’ வெற்றிக்குள் வந்துவிடுகின்றன. 

குறிப்பாக, தமிழில் வெளிவந்த  ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தில் கதையின் அழுத்தம் மிகக் குறைவு. பழி வாங்கும் படமாக  இருந்தாலும் அதன் வன்முறைக் காட்சிகளுக்காக திரும்பத் திரும்பப் பேசப்பட்டது. அந்தப் படம் வெளியான பின் வந்த விமர்சனங்களில் இதன் வன்முறைக் காட்சிகளில் வெளிப்படும் கொடூரங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றே குறிப்பிட்டனர், அதிகபட்ச வன்முறை என்பது ஒரு பிரச்னை இல்லை என்பதைப் போல.

சரி, இப்போது விக்ரம் திரைப்படத்திற்கு வரலாம். படம் வெளியான நாளிலிருந்து விமர்சனம் முதல் வசூல் வரை பெரும் வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. கமல்ஹாசன் மிகுந்த உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கிறார். ஆனால், ரசிக மனப்பான்மையிலிருந்து விலகி நின்று பார்த்தால், படத்தில் கதை எங்கே என்றே கேட்கத் தோன்றுகிறது. மேலோட்டமான கதை. கமலுக்கு அதிகக் காட்சிகள் இல்லை. சூர்யாவுக்கும் இல்லை. பஹத் ஃபாசில் அருகிலுள்ள மாநிலத்தைச் சேர்ந்தவர், அவருக்காகப் பார்க்கப் போவது யாருமில்லை. விஜய் சேதுபதிக்காக ரூ.200 கோடி வசூல் என்றால் அவரே சிரிப்பார்.

ஆக, படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு என்னதான் காரணங்கள்?

முதலில் படம் ஆரம்பிக்கப்பட்டபோது கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்பார்ப்பைத் தவிர பெரிதாக எந்த விஷயங்களும் யாரையும் ஈர்க்காமல் இருந்தன.

அடுத்தது, படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் இருவரும் இணைந்தது கூடுதல் அம்சங்களாக இருந்தாலும் வில்லனாக மீண்டும் விஜய் சேதுபதியா என்கிற தொய்வு இருந்தது. 

படப்பிடிப்பு முடியும் வரைகூட டீசர் போன்ற காட்சிகள் வெளியாகி ஆர்வத்தைத் தூண்டினாலும் முழுமையான எதிர்பார்ப்புகள் தொடர்ந்து செய்யப்பட்ட விளம்பரங்களிலிருந்தே ஆரம்பமாகியுள்ளது.

இது லோகேஷ் கனகராஜின் உலகம் என ஒரு விளம்பரம். 4 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்த கமல் மீதான ஆர்வம். எல்லாவற்றையும் தாண்டி மொத்தப் படக் குழுவும் விடமால் சொன்ன வார்த்தை ‘விக்ரம்’ புதுவிதமான அனுபவம் என்பதைத்தான். 

சந்தேகமில்லாமல் மேலே சொன்ன, மக்களின் பொதுப் புத்திக்குள் உறைந்திருக்கும் ‘வன்முறை’ ஆசைகளுக்கு சரியான தீனியைப் போட்டதால்தான் இப்படம் இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்று கூறலாம்.

1990-களின் இறுதியில் பிறந்தவர்களே இன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். சின்ன தவறு நிகழ்ந்தால்கூட மொத்தமாகப் பெயரைக் கெடுத்துவிடும் அளவிற்கு மீம்களும், கருத்துகளும் வேகமாகப் பகிரப்படுகின்றன. முதல் காட்சியில் படம் மோசம் என விமர்சனம் வந்தால் ரூ. 100 கோடியில் தயாரித்திருந்தாலும் படம் தோல்வியைத் தழுவி விடுமோ  என்ற அச்சம் பரவலாக இருக்கிறது.

அப்படியிருக்க, சரியான கதையம்சம் இல்லையென்றாலும் ஆயுதங்களைத் தூக்கும் படங்கள்  தப்பித்துவிடுகின்றன. இந்த வெற்றிகளுக்குப் பின் ஓரளவு விடியோ கேம்களின் தாக்கமும் இருக்கிறது. அதிகப்படியான துப்பாக்கிகளை வைத்து உருவாக்கப்பட்ட கேம்கள் கொடுக்கும் ‘சுட்டுத் தள்ளும்’ ஆர்வத்தையும் இப்படங்கள் பூர்த்தி செய்கின்றன. அந்த வகையில் கேஜிஎஃப் இன்றளவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் எனலாம்.

ஏதோ ஒரு புள்ளியில் கமர்ஷியலாகவும்  விக்ரம் வெற்றிபெற்றுள்ளது. ஆனால், அதன் ஒப்பீட்டில் ஏன் கதைக்கு தொடர்பில்லாத கேஜிஎஃப் இடம்பெறுகிறது? காரணம், அந்த ‘அதீத’ வன்முறைதான். 

மனிதர்களுடைய இந்த மனநிலையை வெற்றிக்கான இலக்காக வைத்தே இன்று பெரும்பாலான திரைப்படங்கள் இயக்கப்படுகின்றன.  எத்தனை நடிகர்கள் நடித்திருந்தாலும் அழகான காதல் கதையாகவோ இல்லை, அன்றாட வாழ்க்கைப் பிரச்னையாக இருந்தாலோ நிச்சயம் இத்தனை கோடிகளை ‘விக்ரம்’ அள்ளியிருக்காது என்பதுதான் உண்மை. இதை அடுத்தடுத்து வெளியாகும் ‘பிரம்மாண்ட’ படங்களே உறுதி செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com