கௌதம் பிரபாகர் (கண்ணுக்குள் நிலவு), குட்டி (துள்ளாத மனமும் துள்ளும்), ஜேடி (மாஸ்டர்), பூபதி (வசிகரா), ஜீவானந்தம் (கத்தி), ஜெகதீஷ் (துப்பாக்கி), சரவணவேலு (கில்லி), வீரராகவன் (பீஸ்ட்), சச்சின் (சச்சின்), சிவகிரி (திருப்பாச்சி) என நடிகராக விஜய்யின் பல கதாபாத்திரங்கள் அதன் திரைப்படங்களையும் தாண்டி நம் மனதில் நிற்பவை. இவற்றில் போக்கிரி திரைப்படத்தின் கதாபாத்திரமான 'தமிழ்' அனைத்தையும்விட வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கும்.
பொதுவாகவே, கலைப் படங்கள் மீதான அதீத மோகத்தால் கமர்ஷியல் படங்களைக் குறைத்து மதிப்பிடுவதுண்டு. ஒரே ஃபார்முலாவிலோ அல்லது ஒரே மாதிரியாகவோ படங்களை எடுத்து ஹிட் அடிக்க முடியாது. அப்படி உருவான பல போலிகளைத் தமிழக மக்கள் கிழித்துத் தொங்கவிட்டு இருக்கிறார்கள்.
மக்களை ரசிக்க வைக்க ஏதோ ஒன்று அதில் இருந்துகொண்டே வர வேண்டும். கவர்ச்சி, காதல், அடிதடி, சென்டிமென்ட் என்ற ஏதோ ஒன்று வலுவானதாக இருக்க வேண்டும். போக்கிரி படத்தில் மேற்சொன்னவை எல்லாமும் வரும். ஆனால், படத்தைத் தூக்கி நிறுத்தியது தமிழ் என்ற அந்த கதாபாத்திரம்தான். இந்தப் படத்தின் பேட்டி ஒன்றில் விஜய், "இந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றால், பக்கத்தில் ஒரு குண்டே வெடித்தாலும், 'ஓ குண்டு வெடித்ததா?' என்று திரும்பிப் பார்த்துவிட்டு தனது வேலையைச் செய்ய வேண்டும்" என பிரபுதேவா தன்னிடம் கூறியதாகக் கூறியுள்ளார்.
இந்த கதாபாத்திரத்தின் டபுள் ஷர்ட் பாணி இன்று வரைக்கும் தனித்துவமானது. படம் வந்த நேரத்தில் கையில் கைக்குட்டையைச் சுற்றி திரியாத விஜய் ரசிகர்கள் குறைவுதான். இது ஒரு தலைமுறையின் (2007) அடையாளமாகவே மாறியிருந்தது.
தமிழ் என்ற இந்த கதாபாத்திரம்தான் படத்தை கூடுதல் சுவாரசியமாக்கியது. இந்த கதாபாத்திரத்துடன் ஒரு காதல் காட்சியையோ அல்லது சண்டைக் காட்சியையோ உருவாக்கும்போது அதன் காட்சிகள் வழக்கமானதில் இருந்து புதியதாக இருந்தது; சராசரி படத்தைவிட சற்று உயர்ந்து நின்றது.
இதன் மூல பதிப்பு - தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி (2006). தெலுங்கில் மிகப் பெரிய வெற்றி. மகேஷ்பாபுவிற்கு உயிர் கொடுத்த படம் இது. இந்தப் படத்தை எழுதி இயக்கியது புரி ஜெகந்நாத் என்ற இயக்குநர். இவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியது எப்படி என்று பேசும்போது, "எனது எல்லா படங்களிலும் நாயகன் உடைந்த குடும்பத்தில் (broken family) இருந்து வந்தவனாகவே சித்திரிக்கிறேன். ஏனெனில், அவன் வழக்கமானவர்களைவிட பலமானவன் என்று நான் நினைக்கிறேன். நமக்கு எளிமையாகக் கிடைப்பவை எல்லாம் அவன் தனியாகவே கற்று பலமானவனாக மாறுகிறான்" என்று கூறியிருப்பார்.
இந்தப் படத்தில் விஜய் ஒரு காவல்துறை அதிகாரி. அன்டர் கவர் ஆபரேஷனில் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது தந்தை (நாசர்) ஒரு ஓய்வு பெற்ற காவலதிகாரி. இவர் மீதுள்ள கோபத்தில் தனது அம்மாவை யாரோ ஒரு ரௌடி கொலை செய்து விடுவதால் தந்தையை விட்டுப் பிரிந்தே வாழும் கதாபாத்திரம்.
துரந்தர் படமும் இதே மாதிரி அன்டர் கவர் ஆபரேஷன்தான். என்ன இடம் மாறுகிறது. ஆனால், ஹம்சா கதாபாத்திரத்தை விடவும் தமிழ் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது; வித்தியாசமானது. ஏனெனில், அவனுக்குள்ளும் சோகம் இருக்கும், காதல் இருக்கும். ஆனால், எதையுமே பெரிதாக வெளிக் காட்டிக் கொள்ளாத கதாபாத்திரம்தான் தமிழ்.
பொதுவாகவே இந்த மாதிரி அன்டர்கவரில் இருக்கும் நாயகர்கள் தங்களது நோக்கத்திற்காகக் காதலை கைவிடவும் தயாராக இருப்பார்கள். தமிழும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால், எப்படி வித்தியாசமானவராக மனதைக் கவருகிறார்? அசின் காதலை தெரிவிக்க வரும்போது சண்டைக் காட்சி வரும். அதன் இறுதியில் விஜய், "நான் ரௌடிதான். ஆனால், உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும். யோசித்து சொல்லு" என்று சொல்லும்போது கண்கள் லேசாக கலங்கியிருக்கும்.
மீண்டும் ஒரு அடிதடி காட்சியில்,"நீ இன்னும் திருந்தவில்லையா?" என்று அசின் கேட்கும்போது விஜய்யின் நடிப்பு க்ளோஸ் அப்பில் அற்புதமாக இருக்கும். வழக்கமாக பலரும் இந்தக் காட்சியில் அழுது, தாரைதாரையாகக் கண்ணீர் வடித்து சென்டிமென்ட்டைப் பிசைந்திருப்பார்கள். இந்த விஷயத்தில் சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹம்சாவும் (துரந்தர்) விதிவிலக்கு அல்ல.
இந்தக் காட்சி பாதி வெளிச்சத்தில் ஒரு படிமமாகவே சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கும். இதே காட்சியில் மகேஷ்பாபு கண்களை சிமிட்டிக் கொண்டு சுமாராக நடித்திருப்பார். ஆனால், போக்கிரி கொடுத்த வெற்றியினாலோ என்னவோ தனது கடைசி படமான குண்டூர் காரம் வரைக்கும் க்ளோஸ் அப்பில் அவர் தனது கண்களைச் சிமிட்டுவதை விடவே மாட்டேன் என்கிறார்...
படத்தின் பலம் இசை. மணி ஷர்மா பின்னி எடுத்து இருப்பார். விஜய் - அசின் நடனமும் பாடலை ஸ்கிப் செய்ய விடுவதில்லை. தெலுங்கு போக்கிரியில் இல்லாமல் தமிழில் இருந்த 'பாடி சோடா' என்ற வடிவேலுவின் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது.
'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர், 'கன்னும் (gun) எனதுதான் பொண்ணும் எனதுதான் ', 'எப்போ வந்தன்றது முக்கியம் இல்ல, புல்லட் எப்படி எறங்குன்றதுதான் முக்கியம்', 'ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் ' , 'லாரி டமாலு டிரைவர் பனாலு' என்று படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் இன்றளவும் ஞாபகத்தில் இருக்கிறது. மீம்ஸ்களிலும் பல காட்சிகள் உயிரோடு உலவுகின்றன.
அதுமட்டுமில்லாமல் படத்தில் வரும் கதாபாத்திரங்களான கொரட்டூர் லோகு, அலி பாய், நரசிம்மன், குரு, ஸ்ருதி, பாடி சோடா, பத்மா, காமா புண்ணியகோடி ஒளி பத்திரிகை, சத்யமூர்த்தி, ஷண்முகவேல் என்று மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
இந்தப் படத்தில் வரும் பல காட்சிகளில் விஜய்யின் அலட்சியம் மிகுந்த நடிப்பும் மேனரிசமும் இதுவரை வேறு எந்தப் படத்திலும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்தப் படத்தில் வரும் ஊமக்குசும்பு தன்னுடன் அதிகமாக ஒத்துப்போவதாகவும் தனிமையில் (விஜய் தனது சகோதரியின் இறப்புக்குப் பிறகு அப்படி ஆனதாக அவரது தந்தை கூறினார்) இருப்பது மிகவும் பிடிக்கும் எனவும் விஜய் அந்தப் படத்திற்கான நேர்காணலில் கூறியிருந்தார்.
விஜய் அமைதியானவர், இன்ட்ரோவெர்ட் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் பழகிவிட்டால் மிகவும் கிண்டல் செய்யக் கூடியவர் என்பதும் அவரைப் பற்றி பலரும் கூறியுள்ளார்கள்!
நடனம், நகைச்சுவை, ஆக்.ஷனில் அசத்தினாலும் போக்கிரி திரைப்படம் விஜய்யின் சில குணாம்சங்களை வெளிப்படுத்தும் படமாகவே அமைந்திருந்தது. அவர் தமிழகத்தின் முதல்வர் ஆகிவிட்டதால், இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்பதால், இந்தப் படம் மறு வெளியீடாகும் போதெல்லாம் அல்லது ஓடிடி, டிவி மாதிரி எங்கு பார்த்தாலும் 'தமிழ்' என்ற கதாபாத்திரம் நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
Summary
Vijay Birthday special story... A broken man... Tamil, Vijay film character who captivated hearts as a Pokkiri!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









