/

சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கேள்வி

ஜாமீனில் வெளியே வந்த பிறகு, ஆயிரம் சிறைகளை சந்திக்கத் தயார் என மார்க்கண்டேயன் பேசியது குறித்து...

News image

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் சிறையிலிருந்து வெளியே வந்தபோது... - DNS

Updated On :4 ஆகஸ்ட் 2026, 5:24 pm IST

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இன்று (ஆக. 4) விடுதலையானார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

"இந்த சிறைச்சாலை எங்களுக்கு புதிதல்ல. உலகத்திற்கு விடுதலை உணர்வை அளித்த இடமாக இந்த சிறையை நாங்கள் பார்க்கிறோம். கலைஞர் கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை காக்க சிறை சென்றவர். தலைவர் மு.க. ஸ்டாலின் மிசா கொடுமை காலத்தில் ஓராண்டு சிறை வாழ்க்கையை சந்தித்தவர். எனவே சிறை என்பது தி.மு.க.வினருக்கு புதிய அனுபவம் அல்ல.

ஆனால் இன்று இந்த நாட்டில் ஜனநாயக உரிமையும், பேச்சுரிமையும் பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜயின் ஆட்சி கடுமையான சட்டங்களை பயன்படுத்தி அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து, சர்வாதிகார போக்கில் ஆட்சி நடத்தலாம் என்று நினைக்கிறது.

சிறை சென்ற தலைவர்களின் வரலாற்றை நாங்கள் படித்திருக்கிறோம். வாய்ப்பூட்டு சட்டத்தில் 11 ஆண்டுகள் சிறையில் இருந்த தேவர் திருமகன், பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் கலைஞர், இம்மானுவேல் சேகரன், கக்கன் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்கள் அனைவரும் சுதந்திரத்திற்காக போராடியவர்கள். எங்கள் மாவட்டத்தின் பெருமை வ.உ. சிதம்பரம் பிள்ளையும் சிறையில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார்.

நான் விளாத்திகுளம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர். என்னுடைய பின்னால் இரும்பு மனம் கொண்ட தி.மு.க. தொண்டர்கள் நிற்கிறார்கள். என்னை சிறையில் அடைத்ததால் என்னுடைய கருத்துக்களை ஒடுக்கலாம் என்று யாரேனும் நினைத்தால் அது நடக்காது. ஆயிரம் சிறைச்சாலைகளையும் சந்திக்க தி.மு.க.வினர் தயாராக இருக்கிறார்கள்.

தற்போதைய ஆட்சியின் மூன்று மாதங்களிலேயே தமிழகம் மிகப்பெரிய அளவில் வன்முறைகள் நடைபெறும் மாநிலமாக மாறி வருகிறது.

கருத்துரிமையை வெளிப்படுத்திய ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் எந்த நியாயமான காரணமும் இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகிறார். ஆனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைக்காத பிரச்சினை உள்ளிட்ட ஏராளமான மக்கள் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நாளை சட்டப்பேரவை கூடுகிறது. எங்களை சிறையில் அடைத்தால் சட்டப்பேரவையில் பேச மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கு மிகக் கடுமையான அரசியல் பதிலை நாங்கள் அளிப்போம். ஜனநாயக கடமையை தி.மு.க. தொடர்ந்து ஆற்றும். தி.மு.க. தொண்டர்கள் வீறு கொண்டு எழுந்திருக்கிறார்கள்.

நான் நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளேன். ஜாமீன் உத்தரவில் முதல்வரைப் பற்றி பேசக் கூடாது என்று எந்த உத்தரவும் இல்லை. சட்டப்பேரவையில் கலந்து கொள்ளலாம் என்றும், கையெழுத்து போட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் எந்த பிரச்னையும் இல்லை. எத்தனை ஆண்டுகள் சிறையில் வைத்தாலும் ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டத்தை தி.மு.க. ஒருபோதும் கைவிடாது" என மார்க்கண்டேயன் குறிப்பிட்டார்.

Summary

அReady to face a thousand prisons asks DMK MLA Markandeyan who was released on bail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.