முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜீ.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.
தன்னை சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் அதேபோன்ற குற்றத்தில் ஈடுபடுவார், சாட்சிகளை கலைப்பார் என நம்புவதற்கு காரணம் இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.என்.எஸ்.எஸ். சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. புகாரின் உண்மைத்தன்மை குறித்து எந்த ஆரம்ப கட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை என்பதால், மனுதாரரை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அரசியல் ரீதியிலான பேச்சுக்கள் தொடர்பான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் முன் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் எந்த ஒப்புதலும் பெறவில்லை. இது, கைது செய்யத்தக்க வழக்கு அல்ல. சட்டமன்றம் பூட்டப்படும் எனக் கூறியதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் பேசியுள்ளார். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக சிறையில் அடைத்து உத்தரவிட்டுள்ளார் என வாதிட்டார்.
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சட்டமன்றத்தை பூட்டினால் எலும்பை உடைத்து விட்டு தான் வெளியே அனுப்புவேன் எனக் கூறியுள்ளார். சட்டமன்றம் கூட உள்ள நிலையில் இந்த மிரட்டல் உண்மையா என சோதிக்க முடியாது. பொதுவெளியில் பேசிய பேச்சு இது. பி.என்.எஸ்.எஸ். சட்டப்பிரிவுகள் கைது செய்யக் கூடாது என தடை விதிக்கவில்லை. கைது தேவையா என ஆராயவே கூறியுள்ளது. விடியோக்கள் உள்ளதால் குற்றம் செய்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழவில்லை எனத் தெரிவித்தார்.
அவரது பேச்சு மாநிலம் முழுவதும் சமூகவலைதளத்தில் பரவியுள்ளது. கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் இதே குற்றத்தை அவர் மீண்டும் செய்யக் கூடும். முதல்வரை ஒருமையில் அழைத்து பேசியுள்ளார். கைது குறித்து அவரது மைத்துனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது நண்பருக்கும் தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுவும் அவருக்கு வழங்கப்பட்டு, அதில் அவர் கையெழுத்தும் போட்டுள்ளார் எனக் குறிப்பிட்டார்.
மாஜிஸ்திரேட் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து திருப்தியடைந்த பிறகே சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் எந்த தவறும் இல்லை என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இரு சம்பவங்களும் நடக்கவில்லை. யூகத்தின் அடிப்படையில், நீதிமன்றத்துக்கு சுமை ஏற்படுத்துகிறார்கள் எனக் கூறி, மார்க்கண்டேயனின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
Summary
The case filed by DMK MLA Markandeyan who was arrested for allegedly making threatening remarks against Chief Minister Vijay has been adjourned...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு! விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை: விசாரணை ஒத்திவைப்பு

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனு! பிற்பகலில் விசாரணை!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: எம்.பி கனிமொழி கண்டனம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



