தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23-ல் முடிந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் முதல்முறையாக 85.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதனால் தேர்தல் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு இம்முறை வழக்கத்துக்கு மாறான முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. தமிழகத்தை 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்திருந்த திமுக, அதிமுக ஆகியவற்றை எதிர்த்து, கட்சி தொடங்கியே இரண்டே ஆண்டுக்குள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இத்தேர்தலில் தனித்து களம் கண்டிருந்தது. இதனால் ஒட்டுமொத்த நாடும் தமிழக தேர்தல் களத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
இத்தனைக்கும் ஏப்.29 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும், அதிமுகவுக்கு இரண்டாமிடம் கிடைக்கும், தவெக சில இடங்களில் வெற்றி பெறும் என்றே கூறப்பட்டிருந்தது.
விதிவிலக்காக 'ஆக்சிஸ் மை இந்தியா' என்ற நிறுவனம் மட்டும் தவெக 98 -120 இடங்களைப் பிடிக்கும் என அறிவித்திருந்தது. அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விஷயம் சில நாள்களில் முடிந்துபோனது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் நெருங்க நெருங்க தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றம், பரிதவிப்பு, தேடல், முடிவுகளை அறிந்து கொள்வதற்கான பேரார்வம் அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 48 மணி நேரம்தான். தமிழகம் கனத்த மௌனத்தில் மெல்ல மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில், இசைஞானி இளையராஜாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளமான ’இளையராஜா அஃபிசியல்’ (Ilaiyaraaja official) நடிகை ராதிகாவுடன் குழந்தை நட்சத்திரமாக விஜய் இருக்கும் புகைப்படத்துடன், 'இது எங்கள் நீதி' என்ற திரைப்படத்தில் வந்த 'சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு' எனும் பாடல் பகிரப்படுகிறது. அவ்வளவுதான் சமூக ஊடகங்கள் போர்க்களமாகின. ஊடகங்களின் உடைப்புச் செய்திகள், விவாதங்கள், பிரபலங்களின் பேட்டிகள் என திரும்பும் திசையெங்கும் இளையராஜாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் வார்த்தைப் போர் நடக்கிறது. ஒருசிலர் தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என காத்திருந்தனர்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசு இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக்கி இருந்தது. இதனால், தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு இளையராஜாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகிருந்த இளைய தளபதி விஜய் புகைப்படத்துடன் வெளிவந்திருந்த 'சின்னத் தம்பி உன்னை நம்பி' பாடல் தீவிர அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த குறியீடாக மாறிப்போயிருந்தது.
1988- ல் வெளியான இப்பாடல் இடம்பெற்ற 'இது எங்கள் நீதி' படத்துக்கு இசை அமைத்தவர் இளையராஜா. படத்தின் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர். உண்மை என்னவெனில், 'இது எங்கள் நீதி' படம் யூடியூபில் இல்லை. அதைவிட முக்கியம் சம்பந்தப்பட்ட 'சின்னத் தம்பி உன்னை நம்பி' பாடலின் விடியோவும் இல்லை. வெறும் ஆடியோ பாடல்தான் காணக் கிடைக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு சிறப்பான விஷயம், இப்படத்தின் கதை உள்ளிட்ட எழுத்துப் பணிகளைச் செய்தவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி. படத்தின் தலைப்பே கலைஞரின் 'இது எங்கள் நீதி' என்றுதான் உள்ளது.
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில், 'நான் சிகப்பு மனிதன்', 'நீதியின் மறுபக்கம்', 'இது எங்கள் நீதி' உள்பட அதிகபட்சமாக 5 திரைப்படங்களுக்கு மட்டுமே இளையராஜா இசை அமைத்திருக்கிறார். அதேபோல இளைய தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், இளையராஜாவின் இசையில் சில பாடல்களை பாடியுள்ளார். அதுவும் சொற்பமான எண்ணிக்கையே.
மேலும், விஜய் நடித்த, 'ராஜாவின் பார்வையிலே', 'சந்திரலேகா', காதலுக்கு மரியாதை', 'கண்ணுக்குள் நிலவு' மற்றும் 'ப்ரண்ட்ஸ்' ஆகிய படங்களுக்கு இளையராஜாதான் இசை. இவைதான் இளையராஜாவுக்கும் விஜய் மற்றும் அவருடைய குடும்பத்துக்குமான திரைப்பட ரீதியிலான பந்தம். அதுவரை குத்துப்பாடல்களை பாடிக் கொண்டிருந்த விஜய்யின் குரலை, 'காதலுக்கு மரியாதை' படத்தின் வரும் 'விழியில் விழி மோதி' எனத் தொடங்கும் 'ஓ பேபி பேபி' பாடலின் மூலம் மெலோடி டோனுக்கு மாற்றியவர் இளையராஜாதான்.
தமிழகத்தில் 70-களின் பிற்பகுதியில் ஹிந்தி திரையிசைப் பாடல்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்திருக்கிறது. தெரியாத மொழிதான் என்றாலும் எங்கு பார்த்தாலும் மக்கள் ஹிந்தி பாடல்களால் ஈர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த சூழலில்தான் 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜா அறிமுகமாகிறார். திரையிசையில் ஒரு மாற்றத்தை நோக்கி காத்திருந்த தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் 'அன்னக்கிளி' படத்துக்குப் பின் இசையால் தனதாக்கிக் கொண்டவர் இளையராஜா. தமிழ் மக்களின் நாடி பிடித்து இசையால் துல்லிய தாக்குதல் நடத்துவதில் அவர் கைத்தேர்ந்தவர்.
வானொலியில், 'அன்னக்கிளி' படத்தின் பாடல்கள் வரும்போது கடற்கரையோரமாக இருந்த அனைத்து வீடுகளிலும் வரிசையாக அப்பாடல் கேட்டு ரசிக்கப்படுவதை இளையராஜா பார்த்திருக்கிறார். அந்த வழியே நடந்து செல்லும் இளையராஜாதான் அப்பாடலின் இசையமைப்பாளர் என பாடலை ரசித்துக் கேட்ட எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், தன்னுடைய பாடல் மக்களால் ரசிக்கப்படுவதற்கான காரணத்தை அப்போது இளையராஜாவால் அறிந்திருக்க முடியவில்லை.
ஓர் அறையில் கிதார் ஒன்றை ஒரு குறிப்பிட்ட ஸ்ருதியில் ட்யூன் செய்து வைத்துவிட்டு, தனது ஆர்மோனியத்திலோ, பியானோவிலோ கையை வைக்கும் போது வரும் ஸ்ருதிக்கு அறையில் இருக்கும் கிடார் ட்யூன் ஆவதாக இளையராஜா நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பார். அதாவது, தனது பாடலைக் கேட்பதற்காக இந்த மக்கள் ஏற்கெனவே ட்யூன் செய்து வைக்கப்பட்டிருந்தனர். இதனால் தன்னுடைய பாடல் அவர்களிடம் எளிதாகச் சென்றடைவதாக விளக்கி இருப்பார்.
அதுபோலத்தான், இரு திராவிட கட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள், உள்கட்டமைப்பு, கல்வி என அனைத்தையும் பார்த்திருந்த தமிழக மக்கள் மேலும் ஒரு அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் போல. இதே மாற்றம் எனும் பிரசாரத்தோடு, திரை உலகில் இருந்து சீமான், கமல்ஹாசன் போன்றோர் அரசியலுக்கு வந்திருந்தனர். ஆனால், மக்களிடம் அவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், தவெக தலைவர் விஜய்யின் மூலம் அந்த மாற்றம் வரும் என மக்கள் தீர்க்கமாக நம்பியிருந்தனர். அதுதான் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளிலும் வெளிப்பட்டிருந்தது. பலரும் நம்ப முடியாதிருந்த நிலையில், விஜய்தான் தமிழக முதல்வராக வருவார் என்பதை மே 4 ஆம் தேதிக்கு முன்பே கணித்தவர் இளையராஜா.
இளையராஜா இசைத்துறையில் அசாத்தியமான சாதனைகளைச் செய்வார் என ஆய்ந்தறிந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி எனலாம். அவர்தான், இளையராஜாவுக்கு இசைஞானி எனும் பட்டத்தைச் சூட்டினார். அவரது கணிப்புப்படி இசைத்துறையில் பல சாதனைகளைப் படைத்து தமிழக மக்களின் மனங்களில் இளையராஜா நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்தச் சூழலில், தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு இரு நாள்களுக்கு முன்பே தமிழக மக்களின் முதல்வராக இளையராஜாவால் அடையாளம் காட்டப்பட்டார் சி. ஜோசப் விஜய். மாற்றம் தந்த மக்களின் மனங்களில் நீடித்து நிலைத்திருக்க அவர் என்னென்ன செய்யப் போகிறார் முதல்வர் விஜய்?
Two days before the official announcement of the election results, 'Ilaya Thalapathy' C. Joseph Vijay was identified by Ilaiyaraaja as the Chief Minister for the people of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றளவும் கவனம் பெறும் விஜய் - த்ரிஷா கூட்டணியின் திரைப்படங்கள்!

விஜய் வென்ற விருதுகள்!

90’ஸ் விஜய்!

குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம்! முதல்வர் கலைஞரிடம் விஜய் வழங்கினார்!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




