''மனிதன் எனும் சொல் பெரியதடா, கொடுத்திடு அதற்கொரு பெருமையடா'' என்ற ஹீரோ அறிமுகப் பாடலில் இடம்பெற்ற ஒற்றை வரிதான் புதிய கீதை படத்தின் மையக் கரு.
யூத், பகவதி, வசீகரா எனத் தொடர் வெற்றிப் படங்களுக்குக்கு மத்தியில் வணிக ரீதியாக அமைந்த தோல்விப் படம் புதிய கீதை. இதனை இப்படத்தின் இயக்குநர் ஜெகன் நேர்காணல் ஒன்றில் அறிவித்திருந்தார். ஆனால், விஜய் நடித்தவற்றில் நேர்மறையான (பாசிடிவ்) படங்களை எடுத்து அடுக்கினால் முதல் இடத்தில் இப்படம் இருக்கும் என்பதையும் இயக்குநர் ஜெகன் நம்பிக்கையுடன் பகிர்ந்தார்.
இப்படத்திற்குப் பிறகு பல வெற்றிப் படங்களை விஜய் கொடுத்திருந்தாலும், புதிய கீதையில் இடம்பெற்ற சாரதி பாத்திரத்தின் நேர்மறை ஆற்றலுடன் கூடிய மற்றொரு பாத்திரம் விஜய்க்கு அமையவில்லை (புதிய கீதையில் கிடைத்த பாடத்தால் ஒருவேளை அதை அவர் தவிர்த்தும் இருக்கலாம்).
இப்படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜோசியர் கூறும் வசனம் போல, ''சாரதி போல ஒரு மகன் இல்லையே? சாரதி போல ஒரு அண்ணன், தம்பி இல்லையே? சாரதி போல ஒரு நண்பன் இல்லையே? என பலர் ஏங்கும் அளவுக்கு இவன் வாழ்க்கை இருக்கும்'' எனக் கூறுவார். அதைப் படம் முழுக்க ரசிகர்களுக்கு கடத்தும் விதமாக சாரதி பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.
சிறு வயதிலேயே பல்வேறு தொழில்கள் செய்து வருவாய் ஈட்டும் புத்திசாலித்தனம், உதவி கேட்பவர்களுக்கு சளைக்காமல் ஓடி உதவும் குணம், நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரின் மீதும் ஒரே மாதிரி அன்பு வைத்து அவர்களுடன் நெருங்கிப் பழகுவது, எல்லா வயதினருக்கும் ஏற்ற வகையில் பேசுவது என பலரை எளிமையாகக் கவரும் பல்வேறு குணங்களைக் கொண்டவராக இருப்பார் சாரதி.
வாழ்க்கை வாழ்வதற்கே, அதை மற்றவர்களுக்கு உதவும்படியாக வாழ்ந்தால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி கிடைக்கும் என்ற உபதேசத்தை உணர்த்தும் விதமான காட்சிகள் படம் முழுவதுமே இடம் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக, படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காதலிக்காக விஷம் அருந்தி சாகத் துணிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பனை அடித்து, வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் காட்சி, கிளைமேக்ஸ் சண்டைக்குப் பிறகு வில்லன் கலாபவன் மணியிடம் மனித பிறப்பில் உள்ள சின்ன சின்ன சுவாரசியங்கள் குறித்துப் பேசும் காட்சி என படம் தொடங்கியது முதல் முடியும் வரை வாழ்வதன் மீதான நம்பிக்கையை விதைக்கும்படியாக காட்சிகள் இருக்கும்.
நான் நல்லது நினைக்கிறேன்; எனக்கு நல்லதுதான் நடக்கும்; நான் நல்லாதான் இருப்பேன் என்ற வசனத்தின் பொருள் மாறாமல் வெவ்வேறு வார்த்தைகளில் படம் முழுக்க சாரதியாகப் பேசியிருப்பார் விஜய். அது படம் பார்க்கும் பலரையும் ஆட்கொண்டிருக்கும். அது எந்த அளவிற்கு என்றால், நையாண்டித்தனம் இருந்தாலும் கொடூர வில்லனாகவே வலம் வரும் கலாபவன் மணியையே இறுதியில் ''விதைக்கிறதுதான் முளைக்கும், நினைக்கிறதுதான் நடக்கும்'' என்ற வசனத்தை பேசவைத்திருப்பார். இறுதியில் கலாபவன் மணி கத்திக் கூப்பாடு போட்டு மருத்துவமனைக்கு வெளியே கூடியிருக்கும் அனைவரையும் நேர்மறை எண்ணத்தோடு சாரதி பிழைத்துக் கொள்வான் என நினைக்க வைத்திருப்பார். இப்படி படம் முழுக்க நேர்மறை எண்ணம்தான். அது சில இடங்களில் அதீதமாகத் தோன்றினாலும், பின்னணி இசையில் கார்த்திக் ராஜா உணர்வுபூர்வமாக மாற்றிவிட்டிருப்பார்.
நிஜ வாழ்க்கையில் அதிகம் பேசாத விஜய், இப்படத்தில் பேசிக்கொண்டே இருப்பார். அதுவும் எதைப்பற்றிக் கேட்டாலும் பேசுவார். இப்படி பேசிக்கொண்டே இருக்கும் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதை இப்படத்தின் மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
வசீகரா படத்திற்கு பிறகு இப்படத்தில் நடித்ததாலோ என்னவோ, அந்தப் படத்தில் இருந்த சிகை அலங்காரத்துடனே இதிலும் நடித்திருப்பார். இப்படத்திற்கான சிகை அலங்காரமும் உடைகளும் விஜய்யின் தேர்வுகள்தானாம். வெளிநாட்டிற்குச் செல்லும்போது அவ்வபோது வாங்கிவந்த உடைகளை விஜய் இதில் பயன்படுத்தி நடித்ததாக இயக்குநர் ஜெகன் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேண்டா பாடலில் விஜய் இரட்டை வேடங்களில் ஆடியிருப்பார். திரையில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் விஜய் தோன்றியது புதிய கீதை படத்தில்தான். இப்பாடலில்தான். எமோஷனல் காட்சிகள், பஞ்ச் டயலாக், நகைச்சுவைக் காட்சிகள் என நிறைவான கலவையாக விஜய் ரசிகர்களுக்கு ஏற்ப புதிய கீதையில் சாரதி பாத்திரம் இருக்கும்.
வசீகரா படத்தில் படம் முழுக்க சினேகா நடித்திருப்பார். அதேபோன்று புதிய கீதை படத்தில் மீரா ஜாஸ்மினும் பாடலுக்கு மட்டும் என்று இல்லாமல், படம் முழுக்கவே இடம்பெற்றிருப்பார். ரன் படத்தில் துள்ளலான அழகியாக நடித்திருந்த மீரா ஜாஸ்மின், இப்படத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டு வெள்ளந்தியான பெண்ணாக நடித்திருப்பார். இது அவரின் ரசிகர்களிடையே ஒருவித அதிருப்தியை அப்போது உருவாக்கியிருந்தது. மீரா ஜாஸ்மினின் சுஜி பாத்திரத்தை அப்படி வடிவமைத்திருக்கக் கூடாது என இயக்குநரே பின்னர் வருந்தினார். இருந்தாலும் கொஞ்சிக் கொஞ்சி விஜய்யிடம் உரிமையாக சண்டையிடும் காட்சிகளில் ரசிகர்களைக் கவரத் தவரவில்லை மீரா ஜாஸ்மின். இதேபோன்று நண்பனாக அன்பு பாராட்டியவனிடம் காதலுடன் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பழகுவது என காதலுக்கும் நட்புக்கும் இடையே தவிக்கும் காட்சிகளில் மீரா ஜாஸ்மின் வென்றிருப்பார்.
மற்றொரு நாயகியாக ஜோ என்ற பாத்திரத்தில் பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் நடித்திருப்பார். தெலுங்கு, ஹிந்தி என 10 படங்கள் நடித்த பிறகு புதிய கீதை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். வசியக்காரி வலைய வீசிப் போறாளே... பாடலில் விஜய் உடன் ரசிகர்களைக் கவர்ந்த இவர், அதன் பிறகு எந்தவொரு தமிழ்ப் படத்திலும் இடம்பெறவில்லை. அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேன்டா பாடலில் விஜய் உடன் சேர்ந்து கானா பாடலுக்கு அமீஷா ஆடியிருப்பார். அப்போது இவர் அணிந்திருந்த உடை, கானா பாடலுக்கு கவர்ச்சியுடன் பெண்கள் நடனமாடும் சீருடையாகவே மாறிவிட்டது.
புதிய கீதையில் வில்லனாக ஒப்பந்தமாகும்போதே மலையாளத்தில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்த அனுபவம் கொண்டிருந்தவர் கலாபவன் மணி. அந்த அனுபவம் இவரின் நடிப்பில் தெரியும். மிகக் குறைவான நேரமே திரையில் தோன்றி, தான் ஒரு கொடூரமான வில்லன் என்பதை பதிய வைத்திருப்பார். குரலை மாற்றி நய்யாண்டியாகப் பேசுவது, உடல் மொழியில் கேலி செய்வது, இப்படத்துக்கு தனித்துவமான வில்லனை கொடுத்துள்ளது. இப்படத்தில் கிடைத்த வரவேற்புதான், இதற்கு அடுத்த ஆண்டு வெளியான குத்து படத்தின் வாய்ப்பை கலாபவன் மணிக்குப் பெற்றுத்தந்தது.
இறுதிக் காட்சியில் நல்லவனாக திருந்திய பிறகு, மருத்துவமனை வாசலில் கலாபவன் மணியின் நடிப்பு, தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் காட்டியிருக்கும். ஒரு கமர்ஷியல் படத்தின் சோகக் காட்சிக்கு வழங்க வேண்டிய நடிப்புக்கான அளவுகோல் தெரிந்திருந்தால் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும்.
இயக்குநர் ஜெகனுக்கு புதிய கீதை முதல் படம். கதையின் மைய கதாபாத்திரமான சாரதியை சுற்றிக் கதை அமைத்திருப்பார். இந்தக் கதையை விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரிடம் இவர் விவரித்தபோது அவர் நிராகரித்துவிட்டார். இருந்தாலும் விஜய்யைச் சந்தித்து சிறு சிறு மாற்றங்களுடன் கதையைக் கூறியுள்ளார். வேண்டாம் என்று அப்பா நிராகரித்த கதையில் நடிப்பதில்லை என்று விஜய் திட்டவட்டமாகக் கூறிய பிறகும், அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சாரதி என்ற பாத்திரத்தின் மீது இருந்த நம்பிக்கையே இதனைச் செய்ய வைத்துள்ளது.
எல்லா வளமும் பெற்று சுக புத்திரனாக சாரதி வளர்ந்தாலும் 27வது வயதில் இறந்துவிடுவான் என மூட நம்பிக்கையுடன் படத்தைத் தொடங்கினாலும், முடிவில் முற்போக்குடனும் மனிதன் நினைப்பதுதான் நடக்கும் என்ற நம்பிக்கையுடனும் படத்தை முடித்திருப்பார். புதிய கீதை என்று ஆன்மிகத் தலைப்பு வைத்திருந்தாலும், இறுதிக் காட்சியில் விஜய்யைப் பிழைக்க வைத்து ஜோதிடத்தின் கருத்துகளும் பொய்யாகலாம் என்று நேரடியாகவே உடைத்திருப்பார்.
எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை என்றாலும், இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் பலரின் விருப்பப் படமாக புதிய கீதை இருக்கிறது.
சாரதியைப் போன்று நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என எல்லா நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளும் ஆசைப்படும் வகையிலான படத்தை எடுத்தவருக்கு இப்படம் நிறைவான வசூலைத் தரவில்லை என்றாலும் குறைவில்லாத ரசிகர்களைக் கொடுத்துள்ளது.
Summary
Vijay birthday special article vijay learned lesson from puthiya geethai movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்ஜிஆரின் ஆசிபெற்ற இளைஞன்! விஜய்யின் வசீகரா!
காதல் ஹீரோ டூ மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!

படித்து வாங்கிய பட்டமா? சாதி ஒழிப்பில் பாரதிராஜா படங்கள்!

முஸ்லிம்கள் மீதான பிம்பத்தை மாற்றும் படம் ஹபீபி! இயக்குநர் ராம்
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP





