சாதி ஒழிப்பு திரைப்படங்கள் தற்போது அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. முற்போக்கு கருத்துகளுக்கு தற்போது இயக்குநர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அரசியல் பிழையை படங்களில் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக படம் இப்போது அடிக்கடி எடுக்கப்படுகிறது என்றெல்லாம் இப்போது பலர் கருதுவதுண்டு.
ஆனால், இவை அனைத்தையுமே 1980-களிலேயே செய்து காட்டியவர் இயக்குநர் பாரதிராஜா. அதுவும் சாதிய ஒடுக்குமுறை குறித்த எந்தவொரு வெகுஜன புரிதலும் இல்லாத காலகட்டத்திலேயே.
கதாநாயகர்கள் மட்டுமே கொண்டாடப்பட்ட காலத்தில், கதையைக் கொண்டாடி படங்களை எடுத்தவர் பாரதிராஜா. எளிய மனிதர்களைத் திரைக்கதை நாயகர்களாகக் கொண்டு, கதாபாத்திரத்தின் இயல்புக்கு வலுச் சேர்த்து, அதன் மூலம் நாயக பிம்பத்தை வளர்த்தவர். அதுவரை தமிழ் சினிமாவில் இருந்துவந்த நாயகர்களுக்கான இலக்கணங்களை முற்றிலுமாக மாற்றி படங்களை எடுத்ததே தமிழ் சினிமா மாற்றத்திற்கான முதல் படி.
அரங்குகளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்பட படப்பிடிப்புகள், நேரடியாக கிராமங்களை நோக்கித் திசை திருப்பியதே பெரிய மாற்றம். அதோடு நின்றுவிடாமல், கதையின் கருவுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் படங்களை எடுத்ததே அவரை இயக்குநர் இமயமாக உயர்த்தியது. இப்பெயரை தக்கவைக்கும்படியாக அடுத்தடுத்து தனது படைப்புகளை வலுவாக அமைத்து சினிமாவை வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் அல்லாமல், சமூக மாற்றத்திற்கான சக்தியாகவும் மாற்றினார் பாரதிராஜா.
1977 ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான 16 வயதினிலே தமிழ் சினிமாவின் முக்கியமான படம். முதல்முறையாக அரங்கை விட்டு வெளியேறிப் பொதுவெளியில் மக்கள் வாழும் இடங்களிலேயே எடுக்கப்பட்டது.
சப்பாணி என்ற மாற்றுத் திறனாளி, கதையின் நாயகன். பதின்பருவ ஈர்ப்பு. இதுமட்டுமின்றி ஒருவகையில் சாதிய எதிர்ப்பை பேசும் படமாகவும் இப்படம் இருந்தது.
ஒவ்வொரு கிராமத்திலும் அடக்கி ஆளும் இளவட்ட மைனர்கள் இருப்பதை இப்படத்தில் சுட்டிக்காட்டி, அவர்களை சப்பாணி எதிர்க்கவும் செய்திருப்பார். பரட்டையின் கன்னத்தில் அறைந்துவிட்டு ''இனிமே என் பேரு சப்பாணி இல்ல, கோபால கிருஷ்ணன்'' என சப்பாணியை பேச வைத்த ஒற்றை வசனமே சாதிய எதிர்ப்பின் தீவிரத்துக்கு போதுமானது.
1985 ஆம் ஆண்டு வெளியான முதல் மரியாதை படத்தில் காதலுக்கு வயது முக்கியமில்லை என்ற கருத்து எந்தவித விரசமும் இல்லாமல், கவிதையாக பலர் ரசிக்கும்படியாக மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்.
காதல் என்றாலே கெட்ட வார்த்தை என்று இருந்த காலகட்டத்தில், காதலுக்கு வயது முக்கியமில்லை என்ற கருத்தை மையமாக வைத்துப் படம் எடுத்திருப்பார். அதிகப்படியான நடிப்புத் திறனால் அசத்திக்கொண்டிருந்த சிவாஜியை, ஊர் பெரிய மனிதராக இயல்பாக நடிக்கவைத்திருப்பார்.
''புத்தி கெட்ட தேசம் பொடி வெச்சி பேசும், சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்'' என்ற வரியிலேயே படத்தின் மொத்த கதையும் அமைந்திருக்கும். பொல்லாத சாதி எதிர்ப்பு பேசும் பொன்னாத்தாள் பாத்திரத்தில் வடிவுக்கரசி அசத்தியிருப்பார். செவுளியாக ரஞ்சனியும் அவரின் காதலனாக தீபனும் நடித்திருப்பார்கள்.
1987 ஆம் ஆண்டு வெளியான வேதம் புதிது படம், இடைசாதி சமூகத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தை நாயகனாக நிறுத்தி, சாதி ஆதிக்கம் குறித்த தவறான புரிதலைச் சுட்டிக்காட்டி கன்னத்தில் அறைந்திருப்பார். எந்த சாதியாக இருந்தாலும், தவறான புரிதலை, தவறு என வெளிப்படையாகக் கூற என்றுமே பாரதிராஜா தயங்கியதில்லை என்பதற்கு இந்த படமே உதாரணம்.
''சுடுகாட்டு ஆலமரத்தில் துருப் பிடித்த ஆணியை அடித்ததைப்போல, நம்ம ஜனங்கள் மனதில் சாதி என்னும் ஆணியை அடித்துவிட்டனர்'' என சாதி எதிர்ப்பு பேசும் பாலுத் தேவரை நோக்கி சிறுவனைக் கேள்வி கேட்க வைத்திருப்பார்.
''பாலுங்கிறது உங்க பேரு, தேவர் அப்டீங்குறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா?'' என கேள்வி கேட்கும் இடம், பொட்டில் அடித்தது போன்ற வெளிப்படையான சாதி எதிர்ப்புக் காட்சி. உவமையான காட்சிகள் மூலம் வசனங்கள் இல்லாமல் இதனைப் புரிய வைத்திருப்பார்.
''நான் கரையேறிவிட்டேன். நீங்க எப்போ கரையேருவீங்க'' என அச்சிறுவன் கேட்கும்போது, ஆற்றோடு மூழ்குவார் பாலுத் தேவர்.
வேதம் புதிது திரைப்படம் இன்று எடுக்கப்பட்டிருந்தால், அப்படம் வெளியாகுமா? என்பதே சந்தேகம்தான் என்று இரங்கல் தெரிவித்த பிறகு அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளதே, இக்காலத்திற்கும் பாரதிராஜா படத்தின் தேவை இருப்பதைக் காட்டுகிறது.
மண்வாசனை படத்தில் சாதியின் வறட்டு கெளரவத்தை வெளுத்து வாங்கியிருப்பார். விதவை மறுமணத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த படம் பசும்பொன். கருத்தம்மா படத்தில் குழந்தைகளுக்கு கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் வழக்கத்தை தோலுரித்துக் காட்டினார்.
புதுமைப்பெண், கருத்தம்மா படங்களில் பெண்களை அடிமையாக நடத்தும் ஆணாதிக்க சமூகத்திற்கு அறை விடுவதைப் போன்ற காட்சிகளை வைத்து படத்தை இயக்கியிருப்பார்.
முதல் மரியாதை, வேதம் புதிது ஆகிய இரு சாதி எதிர்ப்பு படங்களுக்குத் தேசிய விருது கிடைத்தது. பெண் குழந்தைகள் கொலைக்கு எதிராக எடுக்கப்பட்ட கருத்தம்மா படத்திற்கும் தேசிய விருது. தீவிர கருத்துகளை பேசும் படங்கள், கலைவடிவில் எடுக்கப்பட்டால் வரவேற்பைப் பெறும் என்பதற்கு பாரதிராஜாவின் இயக்கம் சிறந்த எடுத்துக்காட்டு.
சமூகத்தில் நிலவிய அரசியல் பிழைகளைப் படங்களாக்கியதோடு மட்டுமின்றி, தமிழ்த் தேசிய அரசியல், தமிழீழ விடுதலையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் பாரதிராஜா.
தமிழீழ விடுதலையில் தீக்குளித்து வீரமரணம் அடைந்த முத்துக்குமாரை நினைவுகூரும் விதமாக திரையரங்கில் படம் தொடங்கும்போது சமர்ப்பணம் என்ற வாசகம் இடம்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அதை அமலுக்கு கொண்டுவர உதவியவர் பாரதிராஜா. அந்த அளவுக்கு தமிழீழ அரசியல் மீது நாட்டம் கொண்டிருந்தார். ஆனால், அது சில காலம் மட்டுமே தொடர்ந்தது.
''தமிழ்நாட்டில் தலித் என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். தலித் இலக்கியம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அது இலக்கியம் அவ்வளவே'' என பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றி விழாவில் பாரதிராஜா கூறியிருந்தது கலையில் பிரிவினைக்கு எதிரான அவரின் நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியது.
எனில், தலித் சினிமா என்ற ஒன்றும் இல்லை. அது ஒரு சினிமா. அவ்வளவே என்பதையே அவர் வலியுறுத்தினார். உயிரில் என்ன வேறுபாடு? என்று பாகுபாடு பற்றிய விவாதத்தை முடித்தவர் பாரதிராஜா.
Summary
Abolition of Caste in Bharathiraja's Films
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜா இயக்கிய 46 படங்கள்! பத்மஸ்ரீ பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தவர்!!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!

திரையுலகைப் புரட்டிப்போட்ட பாரதிராஜாவின் 16 வயதினிலே!

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



